கைபடாத, ஐஸ் தேவைப்படாத கரும்பு ஜூஸ்... கரும்புச்சாறு பிரியர்களின் கவனத்துக்கு..!

கைபடாத, ஐஸ் தேவைப்படாத கரும்பு ஜூஸ்... கரும்புச்சாறு பிரியர்களின் கவனத்துக்கு..!

அடிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிக்கலாம் என்று நினைப்பவர்களில் பலரும் கூட அது தயாரிக்கப்படுவதை பார்த்தவுடன் குடிக்கும் முடிவை கைவிட்டுவிடுவார்கள். கரும்புச்சாறு உடலுக்கு நல்லதுதான் என்றாலும் அது தயாரிக்கப்படும் முறை சுகாதாரமானது தானா என பலரும் யோசிப்பதுன்டு. 

\"\"

 

எல்லா இடத்திலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்த பிறகு இதில் மட்டும் வராமல் இருக்குமா? சில ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச்சாறு எடுக்க இயந்திரங்கள் வந்துவிட்டாலும், இந்த ஆண்டு பல இடங்களில் அதைக் காண முடிகிறது. கடைத்தெருக்கள் தொடங்கி மால்கள் வரை இந்த இயந்திரங்கள் அதிகரித்துவிட்டன. அதில் ஒரு கடைக்கு விசிட் அடித்தோம்.

வழக்கமான முறையில் இல்லாமல் சற்று வித்தியாசமாக வெவ்வேறு சுவைகளில் கிடைக்கிறது சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள \"சுகர்\" (Sugar) கரும்புச்சாறு விற்பனை கடையில். கிட்டத்தட்ட ஒரு காஃபி ஷாப் லுக்கில் வசதியான இந்தக் கடையில் கரும்புச்சாறு மட்டுமே கிடைக்கிறது. கடையின் உரிமையாளரிடம் எப்படி கரும்புச்சாறு தயார் செய்யப்படுகிறது என்று கேட்டோம். 

”பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்ட இந்த இயந்திரத்தின் விலை மூன்று லட்சம் ரூபாய். வழக்கமான இயந்திரம் போல் இல்லாமல் சற்று விரைவாக, அதே நேரத்தில் சுகாதாரமாகவும் இதில் கரும்புச்சாறு பிழியலாம். சாதாரணமாக கரும்புச்சாறு பிழிவதற்கு முன் அதன் மேல்தோலை சீவுவது என்பது அதிக மனித உழைப்பு தேவைப்படும் விஷயம். அதுவும் பெரும்பாலும் கைகளை பயன்படுத்தியே செய்ய வேண்டியிருக்கும். சீவப்பட்ட கரும்புகளை தரையிலோ, அழுக்கு படியும் இடத்திலோ, வெளியில் தான் வைக்க வேண்டும். ஆனால், எங்களிடம் கரும்பின் மேல் உள்ள தோலை நீக்குவதற்கென தனியே இயந்திரம் இருக்கிறது. அதில் நமது கைகளை பயன்படுத்தாமல்  தோலை நீக்கலாம். அதிக நேரமும் தேவைப்படாது. சீவிய கரும்புகளை கையுறை போட்ட கைகளுடன் எடுத்து உடனே ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவோம்” என்றவரிடம் , “கரும்பையே ஃபிரிட்ஜில் வைக்கலாமா?” என்றோம்

\"sukar\"

”ஆமாம். தோலை நீக்கியவுடன் தனியே எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவோம். கரும்புச்சாறு குடிக்கும் பலருக்கும் பிரச்னை என்பது ஐஸ் கட்டியில் தான். ஐஸ்கட்டி பெரும்பாலும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை. மேலும், அதனால் சளித்தொல்லை வரலாம் எனவும் பலர் யோசிப்பதுண்டு. இங்கே நேரடியாக கரும்பை குளிர்ச்சிப்படுத்தி விடுவதால் கரும்புச்சாறு தயாரிக்கும்போது குளிர்சிக்கென தனியாக ஐஸ் கட்டி சேர்க்கும் தேவை இருப்பதில்லை. ஐஸ்கட்டி சேர்த்தால் உருகி தண்ணீராகி கரும்புச்சாறுடன் கலந்துவிடும். எங்கள் இயந்திரம் மூலம் கரும்புச்சாறின் சுவையும் குறையாமல் இருக்கும்.

தேவைப்படும்போது ஒரு கரும்புத்துண்டை  எடுத்து இயந்திரத்தின் உள்ளே செலுத்தினால் போதும் மீண்டும் வெளியே எடுக்க வேண்டாம். ஒரே தடவையில் கரும்பின் முழு சாறும் பிழியப்பட்டுவிடும். அதன் பிறகு கரும்புச்சாறை எடுத்து இஞ்சி, எலுமிச்சை, இலவங்கப்பட்டை என வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவையை சேர்த்து அளிப்போம். இந்த இயந்திரத்தை பொறுத்தவரை, அதிகமாக பராமரிப்புத் தேவை இருக்காது. மின்சாரத்தை பயன்படுத்துவதால் வழக்கமான இயந்திரத்தைப்போல எரிபொருள் செலவு கிடையாது” என்றார்.

ஒரு கரும்புச்சாறின் விலை 30 ரூபாய். இஞ்சி, மிண்ட் போன்ற சுவைகள் சேர்க்க தனி விலை. ஏ.சி.யில் அமர்ந்து குடிக்க வசதியான இருக்கைகள், ஐஸ் இல்லாத சுத்தமான சாறு என்பதால் 30 ரூபாய் கொடுக்கலாம். மால்களில் ஒரு ஜூஸீன் விலை 80ரூபாய் வரை விற்கப்படுகிறது.

\"sukar\"

டெக்னாலஜி என்பது நமது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும். விளைபொருளின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்த இயந்திரம் அனைத்தையும் கச்சிதமாக செய்கிறது. ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் அரசின் வேலை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.