கொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோய்கள்

கொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோய்கள்

‘‘கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம்.

\"\"

சிலர் கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும். அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், கொசு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளால் ஏற்படும் புகைமண்டலமே சிலருக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் ஏற்படும். இப்படி புகை போடும் போது துணியால் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட சிலர் ஸ்பிரே அடிக்கிறார்கள். இது மூச்சுத்திணறல், தலைசுற்றல் ஆகிய பின்விளைவுகளை கொண்டுவரும்.

அதனால் கொசுவை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட கொசு வலைகளை பயன்படுத்தலாம். விலை மலிவான கொசுவலைகளை பயன்படுத்தினால் போதிய காற்றோட்டம் இல்லாமல் மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கும். மட்டமான நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கும் கொசு வலைகளை பயன்படுத்தினால் அதில் இருந்து வரும் ஒருவித துர்நாற்றம் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்..

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.