கோடையில் இருந்து சருமத்தை காக்க

கோடையில் இருந்து சருமத்தை காக்க

கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெயர்தான் கோடையே தவிர, கூட்டம், வேலை போன்றவற்றிற்கு ஓய்ச்சல் இல்லாத காலகட்டம்.

இத்தகைய சூழலில், குடும்பம், குழந்தைகள், உறவினர் என்று பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கும் பெண்களுக்குத் தங்களை கவனித்துக்கொள்ள நேரம் கிடையாது. வியர்வை, கசகசப்பு, நேர் வெயில் என்று ஏகப்பட்ட அவதிகளைச் சந்திக்கவேண்டியவர்களும் ஆவார்கள்.

கோடையில் மிகுதியும் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். உடலின் பிற உறுப்புகளைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுகிற நாம், தோல் என்பதை ஒரு உறுப்பாகவோ, உடலின் பகுதியாகவோ கருதுவதே இல்லை. சொல்லப்போனால், உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல் எனலாம். உடலைப் பாதுகாத்து, நம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாமா? என்னென்ன செய்யலாம்?

முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.

அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு கிளாஸ் நீர் கண்டிப்பாக அருந்துங்கள். பழச்சாறு (குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, மாதுளஞ்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவை), நீராகாரம், மோர், கரும்புச் சாறு, இளநீர் போன்றவற்றுக்கு உங்கள் உணவுப் பட்டியலில் கூடுதல் இடம் கிடைக்கட்டும். காலத்திற்கேற்ற, எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களையும் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளிலும், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பூசணி, தக்காளி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தயிர்மோர் சாதம், பழைய சோறு, சோற்றில் இரவு நீர் ஊற்றிக் காலையில் நீரை மட்டும் இறுத்தெடுத்து (தென் மாவட்டங்களில் இதனைச் ‘சாத்தூத்தம்’ என்பார்கள்) அதில் சிறிதளவு உப்பிட்டு மோர் கலந்த பானம் இவையெல்லாம் வெப்பத்தைத் தணிப்பவை மட்டுமல்ல; செலவு குறைவானவை; செய்வதற்கு எளிதானவை; வைட்டமின்கள் தரக்கூடியவை; நீர்ச்சத்தையும் உப்புச் சத்தையும் உடலில் தக்க வைப்பவை.

இரண்டாவதாக நேரடி வெயிலைத் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதுகளில் வெளியில் போக நேர்ந்தாலும், ஆடையால் மூடப்படாமல் உள்ள பகுதிகளை (கைகள், முகம்), மெல்லிய துணியால் போர்த்திக்கொள்ளலாம். தலைக்குக் குடை பிடித்துக்கொள்ளுங்கள்; அல்லது மெல்லிய பருத்தித் துணியால் முக்காடு போல் இட்டுக் கொள்ளலாம். முடிந்தவரை, வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

மூன்றாவதாக, தக்க ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். இது மிக முக்கியம். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமண வைபவங்களும் கோவில் திருவிழாக்களும் நிறையவே இருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகள், பலரும் கூடியிருந்து, பானகம் போன்ற நீர்ச்சத்து உணவுகளைப் பரிமாறிக்கொண்டு, வெயிலின் கடுமையை மறப்பதற்குத் தானே தவிர, ஆடம்பரத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கு அல்ல.

பளபளக்கும் பட்டு உடைகள், சிந்தடிக் துணிகள் போன்றவற்றை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது அவசியம். கல்யாணத்திற்குப் போகிறோம் என்பதற்காக, பட்டு ஜரிகை வைத்த உடை, அலங்காரம் அதிகம் செய்த ஆடை என்றெல்லாம் அணிய வேண்டாமே! முக்கியமாகக் குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட உடைகளை உடுத்திவிடாதீர்கள். இத்தகைய ஆடைகள் சருமத்தைத் திக்குமுக்காடச் செய்யும்.சருமத்திற்குக் கிடைக்கவேண்டிய காற்றோட்டம் கிடைக்காது. சருமத்துளைகள் அடைபட்டு, கூடுதல் அழுக்கு சேரும். மெல்லிய பருத்தி ஆடைகளே இந்தக் காலகட்டத்திற்கு ஏற்பானவை. வெளிர் நிற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஸ்டைல், பேஷன், அழகு போன்றவை சற்றே குறைந்தாலும் பாதகமில்லை; தளர்வான, சருமத்தை இறுக்கிப் பிடிக்காத, காற்றோட்டத்தைத் தடை செய்யாத ஆடைகளை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.

நகைகளை தவிர்ப்பதும் நலம் பயக்கும். பேஷன் டிஸைனர்கள்கூட, வெயில் காலத்திற்கான அறிவுரைகளில், ‘அணிகலன்களைக் குறையுங்கள்’ என்பார்கள். கழுத்திலும் கைகளிலும் நகைகள் உறுத்தும். சாதாரண சமயங்களில் அவ்வளவாக பாதிக்காத இந்த உறுத்தல்கள், கோடையில் சற்று கூடுதலாகவே எரிச்சலூட்டும்.

அதே போல தோல் படிவுகளை நீக்க வேண்டியது அவசியம். நம்முடைய புறத்தோலின் மேலடுக்கு அணுக்கள், நாள்தோறும் சிதைந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு சிதைந்து வெளித்தள்ளப்படுகிற அணுக்கள், தோலின் புறப்பரப்பில் தங்கியிருக்கும். நீராடும் போது நீக்கப்படவேண்டிய இவை, வெயில் காலங்களில், வியர்வையில் ஒட்டி அப்படியே தங்கிவிடக்கூடும். இந்த வகையான தோல் சிதைவுப் படிவுகளை நீக்கினால், தோலின் மங்கல்தன்மை நீங்கிப் பொலிவு கூடும்; அது மட்டுமல்லாமல், சருமத் துளைகளும் அடைப்பின்றிச் செயல்படும்; சருமமும் மொத்தத்தில் மென்மையாக இருக்கும்.

இதற்காக வேதிமங்கள் கலந்த பொருட்களை தவிர்த்து, நம்முடைய பழைய பழக்க இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரு நாட்களாவது, கடலை மாவு, பயத்தம் பொடி போன்றவற்றைத் தேய்த்து நீராடலாம். வாரத்தில் ஒருநாளாவது, நல்லெண்ணெயைக் கேசத்திலும் உடலிலும் செதும்பத் தேய்த்து, சீயக்காய் அல்லது மேற்கூறிய பொடிகளில் ஒன்றைத் தேய்த்துக் குளிக்கலாம்.

வெயில் காலம் என்று குளிர்நீரில் குளிப்பீர்கள்; அது நல்லதுதான். ஆனால், வாரத்தில் ஓரிரு நாட்களாவது, வெதுவெதுப்பான அல்லது சற்றே சூடான நீரில் குளிப்பது நல்லது. குறிப்பாக, எண்ணெய் தேய்க்கும் அல்லது கடலை பயத்தம் பொடிகளைப் பயன்படுத்தும் நாட்களில் வெந்நீரையும் பயன்படுத்தினால், அழுக்குகளைக் கரைப்பதற்கும் தோல் படிவுகளை நீக்குவதற்கும் உதவும்.

பாலேடு, தேங்காயெண்ணெய் (ஓரிரு சொட்டுகள் நல்லெண்ணெய் சேர்த்து) ஆகியவற்றை முகத்திற்குப் பூசி, சிறிது நேரம் கழித்துக் குளிர் நீரில் கழுவலாம். தக்காளித் துண்டு அல்லது உருளைக்கிழங்கு துண்டு போன்றவற்றையும் முகத்தில் சிறிது நேரம் பூசியிருக்கலாம்.

இத்தகையவற்றை சகோதரிகளே, நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுத்தலாம். வெப்பத்தின் பாதிப்பைக் குறைப்பதற்காக, அவ்வப்போது, முகத்தையும் கைகால்களையும் குளிர்நீரில் கழுவலாம். ஆனால், சோப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்; அவை ஈரப்பதத்தை எடுத்துவிடும். திரும்பத் திரும்பக் கழுவினால், அதுவேகூட வறட்சியேற்படுத்தலாம். எண்ணெய், தக்காளி, பாலேடு போன்றவற்றைப் பூசி வறட்சியைத் தடுக்கலாம்.

சரியான தூக்கமின்மையும் தோலை வறட்சியடைய செய்யும். முறையாக உறங்கி, கூடுமானவரை இயற்கையைத் துணைகொண்டால், கோடையிலும்கூட, தோல் பளபளக்கும். 

டாக்டர் சுதாசேஷையன்

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.