கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

கோடை காலம் உடல் நலத்திற்கு பல்வேறு வகையில் இடையூறு விளைவிக்கும். தோல் நோய்கள் தலைதூக்கும். அம்மை நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஒருசிலர் குளிர்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஜலதோஷ பிரச்சினையால் அவதிப்படுவார்கள். 

மோர், இளநீர் பருகினாலே ஜலதோஷம் பிடிக்கக் கூடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் மோருடன் சிறிது மிளகு தூளை சேர்த்து பருகலாம். மோருடன் கீழா நெல்லியை அரைத்து சாறு பிழிந்து குடிக்கலாம். அதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது.

கோடையில் தண்ணீர் தாகமும், உடல் சோர்வும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. சிலருக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். எலுமிச்சை பழ சாறுடன் சர்க்கரையும், உப்பும் சேர்த்து பருகினால் தாகம் கட்டுப்படும்.

பழங்களை சாறு எடுத்து பருகுவதற்கு பதிலாக அப்படியே சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

கோடையில் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு உடல் உஷ்ண பிரச்சினை ஏற்படும். அவர்கள் வெறுமனே மோர் அருந்தாமல் அதனுடன் சீரகம், வெந்தயத்தை பொடி செய்து கலந்து குடிக்கலாம். அது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

\"\"

மூல நோய் பிரச்சினை உடையவர்கள் கோடையில் அதிகம் அவதிப்பட நேரிடும். அவர்கள் அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

கோடை காலத்தில் காலை உணவுடன் கஞ்சி வகைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கம்பு, கேழ்வரகு கூழ் வகைகளை சாப்பிடலாம். பழைய சாதத்துடன் தண்ணீரும், தயிரும் கலந்தும் சாப்பிடலாம். அல்லது சாதத்தை வடித்த கஞ்சியுடன் உப்பு கலந்து பருகலாம். அது உடல் உஷ்ணத்தை குறைக் கும்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சமையலில் சேர்ப்பதுடன் துண்டு துண்டாக நறுக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம். கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட், தர்ப்பூசணி, வெள்ளைப்பூசணி போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் பருகலாம். அதுபோல் வெந்தயத்தை மோரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். 

வெள்ளரிக்காயில் 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச் சத்து இருக்கிறது. அது தாகம் தீர்ப்பதோடு வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும்.

\"\"

கோடை காலத்தில் தயிரை அதிகம் சாப்பிடுவது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதாவது செரிமானத்தை எளிமைப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முலாம் பழங்களை சாப்பிட்டு வருவதும் செரிமானத்துக்கு துணைபுரியும்.

வெந்தயம், கோதுமையை வறுத்து, பின்னர் அவைகளை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.

புதினாவை சட்னி வைத்தோ தயிருடன் கலந்தோ சாப்பிட்டு வரலாம்.

கோடை காலத்தில் உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக வேகவைக்கக் கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் ஆவியாகி வெளியேறிவிடும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.