சிரிப்பு யோகா - நம் ஆரோக்கியத்துக்கான இனிப்பு மருந்து

சிரிப்பு யோகா - நம் ஆரோக்கியத்துக்கான இனிப்பு மருந்து

பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. இதை உலகளவில் பரப்பி, பயிற்சியும் அளித்து வருகிறார் \'ஹாஹோ\' சிரிப்பானந்தா. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அலைபேசியில் அழைத்தோம்.

\"சிரிப்பு

அவர் அழைபேசி காலர் ட்யூனே (Caller tune) சொல்லிவிடுகிறது சிரிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பை. `ஆளவந்தான்’ திரைப்படத்தில் வரும் `சிரி சிரி சிரி’ என்ற பாடலைத்தான் தன் அலைபேசியின் காலர் ட்யூனாக வைத்திருக்கிறார் `ஹாஹோ’ சிரிப்பானந்தா. அந்த அளவுக்குச் சிரிப்பின் மீது தீராத காதல் சிரிப்பானந்தாவுக்கு.

அவர் பயிற்சியளிக்கும் சிரிப்பு யோகா பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் அவரிடம் கேட்டோம்...

“யோகா ஓர் அற்புதமான கலை. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. சிரிப்பும் அப்படித்தான். சிரிக்கும்போது, உடலின் முக்கியமான பல நரம்புகள் செயல்படுவதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, யோகாவையும் சிரிப்பையும் இணைத்துத் தரும்போது அது தேன் தடவிய மருந்தாகிறது.

\"யோகா

யோகா என்றாலே ‘அது வயதானவர்களுக்கானது’ என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானது. மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைக் கடுமையான பயிற்சிகளாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிரிப்பு அதனுடன் இணையும்போது அனைவரும் ஆர்வமாக செய்ய முன்வருகின்றனர்.

இன்றைய அவசர உலகத்தில் அனைவருக்குமே மனச்சோர்வு தவிர்க்க முடியாதது. மாணவர்களுக்கு, அதிகமான மார்க் எடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிகள். இதனால் சிறு வயதிலே அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாகிவிடுகிறது. இந்த யோகா இந்த பயத்தைப் போக்கி வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்ள உதவுகிறது. அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் படிக்கும்போது, அதிகமான மதிப்பெண்களையும் பெறுகிறார்கள்.

\"சிரிப்பானந்தா\"

வேலைக்குச் செல்பவர்களுக்கு முன்னால் இன்று பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது... போட்டிகளும் அதிகம். இதனால், எப்படியாவது முன்னேறிச் செல்லவேண்டும் என்ற நெருக்கடிக்கு எல்லோருமே உள்ளாகிறார்கள். இதன் காரணமாக, மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் எண்ணற்ற நோய்கள் உண்டாகின்றன. எளிமையாகச் செய்யவேண்டிய வேலைகளைக்கூட பதற்றத்துடன் செய்யும்போது அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலைக்குக்கூட இரண்டு, மூன்று மணி நேரம் ஆகிறது. இதனால் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் சிரிப்பு யோகா ஆகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது, இவர்களின் பதற்றத்தை, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. வேலையில் உற்சாகத்தோடு செயல்படவைக்கிறது.

மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நேர்ந்த சோகங்களுக்காகவே குடிப்பதாகவே சொல்கிறார்கள். சோகமாக இருப்பவர்களுக்குச் சிரிப்புதான் சரியான மருந்தாக இருக்க முடியுமே தவிர, மது மருந்தாக இருக்க முடியாது. அது, மேலும் பல நோய்களைத்தான் உண்டாக்கும். ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்குக் கவலையில் இருப்போருக்குச் சிரிப்பு அவசியம். இந்தச் சிரிப்பு வழி யோகா அவசியம். சிரிப்பு யோகாவின் மூலம் மதுவில் இருந்து விடுபட்டவர்கள் பலர். தற்போது மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துவருகின்றனர்.

\"பயிற்சியில்

இப்போதெல்லாம் வீட்டில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார்கள். மாலை வீடு திரும்பியதும் குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கின்றன ட்யூஷன், பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்... வீட்டில் இருக்கும் முதியவர்களோ பேசுவதற்குத் துணை இல்லாமல், தனிமையில் அவதிப்படுகின்றனர். எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்கவேண்டிய சூழல். சிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லலாம். அவர்களுக்கு இந்தச் சிரிப்பு யோகா மிகச் சிறந்த மருந்து’’ என்கிறார் சிரிப்பானந்தா.

“உங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் ஏதாவது இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

“ஒரு முறை வேலூர் சிறைக் கைதிகளுக்குச் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கச் சென்றிருந்தேன். பயிற்சி முடிந்ததும், ஒரு பெண் கைதி என் அருகே வந்து என் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டார். `சிரிப்பு யோகா பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தால் நான் சிறைச்சாலைக்கே வந்திருக்க மாட்டேன்’ என்றார். அந்த அளவுக்கு ஒரு மகத்துவமானதாக இருக்கிறது சிரிப்பு யோகா.

\"சிரிப்பு

ஒருநாள் எனக்கு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பெண் ஒருவர், தான் தற்கொலை செய்து கொள்ள இருந்ததாகவும், தொலைக்காட்சியில் சிரிப்பு யோகா நிகழ்ச்சி பார்த்த பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு வாழ முடிவெடுத்ததாகவும் கூறினார். தற்கொலை எண்ணத்தையே தகர்க்கும் வல்லமை சிரிப்பு யோகாவுக்கு உண்டு’’ சிரிப்புக் குறையாமல் சொல்கிறார் சிரிப்பானந்தா.

“சரி... சிரிப்பு யோகாவால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’’ என்று கேட்டால் சட்டென்று அவரிடம் இருந்து வருகிறது பதில்.

“நம் நுரையீரலில் 6.8 லிட்டர்  அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது  5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.

மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார் சிரிப்பானந்தா.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு யோகா இது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக இந்த யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.