ஜென் கதை: தங்க நிறக் காற்று

ஜென் கதை: தங்க நிறக் காற்று

எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தியானம் என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி.. வெற்றி கொள்வது அல்ல.. என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தன் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறை வழியில் வாழ்வை செலுத்தவும் விருப்பம். ‘அதற்கு என்ன செய்வது?’ என்று வழி தேடியவன், ஜென் குரு ஒருவரை சந்தித்தான். தன்னுடைய விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியவன், ‘குருவே! நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.

மன்னனின் விருப்பத்தைக் கேட்ட அந்த குரு, ‘நீ ஒரு தோட்டம் போடு’ என்றார்.

‘தோட்டம் போட்ட பிறகு என்ன செய்வது?’ என்று கேள்வி கேட்டான் மன்னன்.

‘நீர் பாய்ச்சு.. பிறகு மரம் வளர்.. அதன் பிறகு அந்த மரங்களை பராமரித்து வா..’ என்றார் குரு.

குரு ஒரு விஷயம் சொல்கிறார் என்றால், அதில் ஆயிரம் பொருள் புதைந்திருக்கும் என்பதை உணர்ந்த மன்னன், தன்னுடைய அரண்மனை திரும்பினான். அரண்மனைக்கு அருகிலேயே பெரிய இடத்தில் தோட்டம் உருவாக்கத் தொடங்கினான். ஆயிரக்கணக்கானவர்களின் துணையுடன் இதற்கான பணியில் ஈடுபட்டான்.

ஒரு சில ஆண்டுகள் பெரும்பாடு பட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது. பல மரங்கள் பல்வேறு வண்ண பூக்களுடன் பூத்துக் குலுங்கின. பார்க்கும் போதே அந்த இடம் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. அத்துடன் மிக ரம்மியமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.

மன்னன், ஒரு நாள் குருவை சந்திக்கச் சென்றான். தான் ஒரு தோட்டத்தை உருவாக்கி விட்டதாகவும், அந்தத் தோட்டத்தை வந்து பார்வையிடும்படியும் குருவை அழைத்தான். அவரும் மறுநாள் வருவதாக கூறினார்.

குருவை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான் மன்னன். தன் பணியாளர்களை வருத்தி எடுத்து, அங்கிருந்த காய்ந்த சருகுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினான். காய்ந்த சுள்ளிகள், சருகுகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் மிகவும் தூய்மையாக பளிச்சென்று காட்சி தந்தது.

சிறிது நேரத்தில் குரு வந்தார். மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான். தான் உருவாக்கிய தோட்டத்தை சுற்றிக் காண்பித்தான். தூய்மையாக வைத்திருப்பதைப் பார்த்து, குரு தன்னை பாராட்டுவார் என்று மன்னன் மிகவும் ஆவலோடு காத்திருந்தான்.

ஆனால் அவரது முகத்தில் கோபமும், வருத்தமும் மட்டுமே தென்பட்டது.

இதைக் கண்ட மன்னன், ‘குருவே! தோட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான்.

‘எல்லாம் சரிதான்.. தூய்மையான தங்கக் காற்றைக் காணவில்லையே?.. எங்கே அந்த புனிதமான பொன்னிறக் காற்று?’ என்றார் துறவி.

மன்னனுக்கு எதுவும் புரியவில்லை. குரு எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக ஓடினார். இறுதியாக ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளி வந்து தோட்டத்திற்குள் கொட்டினார். அந்த நேரம் பார்த்து வீசிய காற்றில், மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் சுழன்று பறந்தோடின.

அதைக் கண்ட குரு, ‘பிரமாதம்.. இது தானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று.. இப்போது பார்.. உன்னுடைய தோட்டம் உயிரோட்டமாக மாறிவிட்டது’ என்றார் குதூகலமாக.

பின்னர் மன்னனிடம் கூறினார், ‘நாள் என்பது பகல் மட்டுமல்ல.. இரவும்தான். மரணம் வாழ்க்கைக்கு எதிரி இல்லை. அதுவும் வாழ்வின் ஒரு அங்கம். அதுபோலவே தோட்டத்தில் இருக்கும் இந்த சருகுகளும், பழுத்த இலைகளும்..

எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தியானம் என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி.. வெற்றி கொள்வது அல்ல.. அதனைக் கடந்து சென்றுவிடுவதே’ என்றார்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.