டீக்கடைக்காரருக்கு.. ஜென் துறவி சொன்ன ஆலோசனை!!

டீக்கடைக்காரருக்கு.. ஜென் துறவி சொன்ன ஆலோசனை!!

பரந்து விரிந்த வயல்வெளிகள், கிராமத்தைச் சுற்றிலும் வற்றாமல் இருக்கும் குளங்கள், ஊரை ஒட்டி ஒரு ஆறு, கிராமத்தின் நான்கு வீதிகள் இணையும் இடத்தில் கடைத்தெரு, கோவில்கள் இப்படி ஒரு கிராமத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா!? நானும் பார்த்ததில்லை. அதனால் அதை அப்படியே மனதில் கற்பனை செய்து கொள்வோம். அந்த ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். ஊர் மக்களுக்கு அவர் மேல் அவ்வளவு பிரியம். நல்லது கெட்டது எதற்கும் அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் செய்வார்கள். அவர் தெருவில் நடந்து வரும் அழகைப் பார்க்கவே கூட்டம் அலை மோதும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவ்வளவு உற்சாகமாய் கிராமத்தை வலம் வருவார்.

கிராமத்தின் கடைத்தெருவில் தேநீர் கடை ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த தேநீர் கடைக்காரருக்கும் வலிமையான மல்யுத்த வீரன் ஒருவனுக்கும் சண்டை வந்துவிட்டது. இருவரும் தெருவே திரும்பிப் பார்க்கும்படி திட்டிக்கொண்டார்கள். அப்போது டீ கடைக்காரரை சண்டைக்கு அழைத்தான் மல்யுத்த வீரன். இவருக்கோ தயக்கம் ஆனால் எல்லோரும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது யோசித்தவர் \"சரி வருகிறேன்\" எனச் சொல்லி ஒப்புக்கொண்டு விட்டார். கோபத்தில் ஒப்புக் கொண்டு விட்டாலும் டீ கடைக்காரருக்கு பயம். ‘தன்னை அடித்து வீழ்த்தி விடுவானே.. என்ன செய்யப் போகிறோமோ’ என புலம்ப ஆரம்பித்து விட்டான். இதைப் பார்த்த அவனுடைய நண்பர்கள் “நீ முதலில் நம் துறவியை பார்த்து வா, அவர் உனக்கு தக்க ஆலோசனை வழங்குவார். மல்யுத்த வீரனை எளிதாக தோற்கடித்து விடலாம்\" என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

தேநீர் கடைக்காரரும் அன்று மாலையே ஜென் துறவியை சென்று சந்தித்தான். நடந்த எல்லாவற்றையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான். எல்லாவற்றையும் பதற்றம் இல்லாமல் கேட்டுக் கொண்டார் துறவி.

\"சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது?\" எனக் கேட்டார்.

\"இன்னும் 30 நாட்கள் இருக்கிறது\"

\"இப்போது என்ன வேலை செய்கிறாய்?\"

\"டீ ஆத்துறேங்கய்யா...\"

\"சரி போ.. அதையே தொடர்ந்து செய்\" எனச் சொல்லி அனுப்பி விட்டார்.

டீ கடைக்காரருக்கோ ஒன்றும் புரியவில்லை. \"இன்னும் 30 நாள்தான் சண்டைக்கு இருக்கு\" இவரு வழக்கம் போல டீ ஆத்த சொல்றாரே என நொந்து கொண்டு அவர் சொன்னது போலவே அதைச் செய்ய ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன. 15 நாட்கள் கடந்து மீண்டும் துறவியை பார்க்க சென்றார்.

\"ஐயா, இன்னும் 15 நாட்கள் இருக்கு.. நான் என்ன செய்யணும்னு சொன்னிங்கன்னா செஞ்சுடுவேன்.\" என பணிவுடன் கேட்டான். துறவி நிதானமாக \"அதையே ஈடுபாட்டோடு செய். இன்னும் வேகமாக டீ ஆற்று\" எனச் சொல்லி விட்டார்.

டீ கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சரி இதையும் செய்து விடுவோம் என முடிவு செய்து விட்டான். நண்பர்களும் கூட அவர் சொல்லுவது போலவே செய் அது தான் சரியாக இருக்கும் எனச் சொல்லிவிட்டார்கள். அவரும் வழக்கத்தை விட இன்னும் வேக வேகமாக டீ ஆற்ற ஆரம்பித்தார். கடைக்கு வந்த பொதுமக்கள் அசந்து போனார்கள். \"என்னப்பா இது இவ்வளவு வேகமா டீ ஆத்துறானே.. இவனுக்குள்ள ஏதோ இருக்குப்பா.\" என பேசஆரம்பித்தார்கள்.

சண்டை நடக்கும் நாளுக்கு முன் நாள் துறவியை சென்று சந்தித்தார் டீ கடைக்காரர்.

\"ஐயா, நீங்க சொன்னது போலவே வேகமா டீ ஆத்தினேன். எனக்குள்ள எந்த மாற்றமும் தெரியல.. ஆனா ஊருக்குள்ள எல்லோரும் எனக்கு எதோ புது சக்தி வந்துடுச்சுன்னு பேசிக்கிறாங்க. நாளைக்கு தான் சண்டை நாள். நீங்கதான் அறிவுரை சொல்லணும்.\" எனக் கேட்டுக் கொண்டான். எங்கே மறுபடியும் டீ ஆற்ற சொல்லிவிடுவாரோ என்ற பயம் நம்மைப் போலவே அவருக்கும் இருக்கத்தான் செய்தது.

அவர் சொன்னதை கேட்டுக் கொண்ட ஜென் துறவி. \"நாளை சண்டைக்கு முன் அவனை டீ சாப்பிட கூப்பிடு போதும்\" எனச் சொல்லி சிரித்துக் கொண்டே அனுப்பி வைத்துவிட்டார். சண்டை போடப்போகும் நாளும் வந்தது. வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு வந்து கடை முன் நின்று விட்டார்கள். டீ கடைக்காரருக்கோ உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்,

\"சண்டைக்கு முன் வந்து ஒரு டீ சாப்பிடு.\" என தைரியமாக அழைத்து விட்டார். மல்யுத்த வீரனும் \'ஒரு டீ தானே.. குடிச்சுட்டா போச்சு\' என நினைத்துக் கொண்டு ஒப்புக் கொண்டு விட்டான். கடைக்குள் சென்றவர் வேக வேகமாக டீயை தயார் செய்ய ஆரம்பித்தார். மல்யுத்த வீரனுக்கோ பயம் தொற்றிக் கொண்டு விட்டது. அவர் இவ்வளவு வேகமாக டீ ஆற்றி இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. \"டீயையே இவ்வளவு வேகமாக ஆற்றுகிறானே.. சண்டைக்கு எவ்வளவு தயார் செய்திருப்பான்.\" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு \"நாம் சமாதானமாக போய் விடலாம். உங்க தேநீருக்கு ரொம்ப நன்றி!\" எனச் சொல்லிவிட்டு ஓடி விட்டான்.

டீ கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்போது தான் ஜென் துறவி சொன்னது நியாபகத்துக்கு வந்தது.. \"உன் வேலையை எப்போதும் போல சிறப்பாக செய். அதை ஈடுபாட்டோடு செய்யும் பொழுது அதற்குரிய பலனைப் பெறுவாய்!\"

அந்த டீ கடைக்காரருக்கு ஜென் துறவி சொன்னதை நம் வாழ்வோடும் பொருத்திப் பாருங்களேன். நம் வேலையை உணர்ந்து அதை முழு ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பிக்கும் பொழுது அதற்குரிய பலன் கிடைக்கும் தானே..!?

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.