டேட்டா காலனி ஆதிக்கம்... நுகர்வோருக்கு எதிரான செயல்பாடு... ஆப்பிளை வறுத்தெடுத்த ட்ராய்!

டேட்டா காலனி ஆதிக்கம்... நுகர்வோருக்கு எதிரான செயல்பாடு... ஆப்பிளை வறுத்தெடுத்த ட்ராய்!

ந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ஆப்பிள் நிறுவனம் டேட்டா காலனி ஆதிக்க மனப்பான்மையில் நுகர்வோருக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான ஆப்பிளை, ட்ராய் காரணமில்லாமல் குற்றம் சாட்டவில்லை.

\"ட்ராய்\"

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் தான் தேவையற்ற அழைப்புகள் அதிகம் பதிவாகின்றன. மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்தும், டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்தும் தான் அதிக அளவில் ஸ்பேம் கால்கள் பதிவாகின்றன. Caller ID சேவை வழங்கும் நிறுவனமான \'ட்ரூ காலர்\' சமீபத்தில் வெளியிட்ட தேவையற்ற அழைப்புகள் அதிகம் பதிவாகும் 20 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரூ காலரின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு மாதத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு சராசரியாக 22.6 தேவையற்ற அழைப்புகள் பதிவாகியுள்ளன.

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற அழைப்புகள், தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், அவற்றின் மீது வாடிக்கையாளரே நேரடியாகப் புகார் அளிக்கவும் ட்ராய் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, Do Not Disturb (DND 2.0) என்ற பெயரில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில், ட்ராய் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் குறுஞ்செய்தி மற்றும் கால் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை அக்சஸ் செய்யக்கூடியது. மோசடி நோக்கில் வரும் அழைப்புகள் மற்றும் தொந்தரவு செய்யக்கூடிய வகையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் குறித்து, நேரடியாக மொபைலில் இருந்தே வாடிக்கையாளர்கள் இந்த ஆப் மூலம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் ட்ராய் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இந்த அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு பயனாளர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ள முடியும். ஆனால், இந்த அப்ளிகேஷனை ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இடம்பெறச் செய்யவில்லை.

\"ஆப்பிள்\"

கடந்த ஒருவருடத்துக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இது குறித்து எவ்விதப் பதிலும் இல்லை. இந்நிலையில் தான் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) சேர்மன் ஆர்.எஸ்.சர்மா, \"கூகுளின் ஆண்ட்ராய்டு Do-Not-Disturb (DND) அப்ளிகேஷனை சப்போர்ட் செய்கிறது. ஆப்பிள் இந்த விஷயத்தில் விவாதிக்கிறது... விவாதிக்கிறது... விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் இன்னும் எதையும் செய்யவில்லை. பயனாளர்கள் தங்களின் சொந்த டேட்டாவை, அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஒழுங்குமுறை ஆணையத்தோடு பகிரும் உரிமையை ஆப்பிள் பறிப்பது விதிமீறலாகும். இதைத்தான் நாங்கள் டேட்டா காலனி ஆதிக்கம் என்கிறோம். ஆப்பிள் நுகர்வோருக்கு எதிராக செயல்படுகிறது. தொல்லை தரும் அழைப்புகளிடமிருந்தும், தேவையற்ற குறுஞ்செய்திகளிடமிருந்தும் வாடிக்கையாளர்கள் காப்பாற்றப்படுவது குறித்து ஆப்பிள் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. டேட்டா உரிமை குறித்தும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. டேட்டா பிரைவசியும், டேட்டா பாதுகாப்பும் மிக முக்கியமான பிரச்னைகள். டேட்டா உரிமை குறித்த முக்கியமான பிரச்னை இங்கு இருக்கிறது. கால் ரெக்கார்ட்ஸ் மற்றும் குறுஞ்செய்திகளின் டேட்டா, மொபைல் உற்பத்தியாளருக்குச் சொந்தமானதில்லை. அவை வாடிக்கையாளர்களுக்கே சொந்தமானவை\" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-கிளவுட் (iCloud) டேட்டாவை, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்கிறது. இதுகுறித்தும் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ்.சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். அவர், \"ஃபேஸ்புக் உடன் வர்த்தகக் காரணங்களுக்காக டேட்டாவைப் பகிர்ந்துகொள்ளும்போது, அதையே ஏன் ட்ராய் உடன் செய்ய மறுக்கிறீர்கள்?\" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

\"ட்ராய்

ட்ராய் அமைப்பின் Do Not Disturb (DND 2.0) அப்ளிகேஷன் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப நெறிமுறையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் தான், ஆப் ஸ்டோரில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும். கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னான்டினோ நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியும், அவரது மனைவியும் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதி பயன்படுத்திய ஐபோனை ஹேக் செய்து முக்கியத் தகவல்களைப் பெற, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு (FBI) ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை நாடியது. ஆனால் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு முக்கியம் என்பதால், ஆப்பிள் உதவி செய்த மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு ஆப்பிள் நிறுவனம் விரைவில் பதிலளிக்கும் எனத்தெரிகிறது. அமெரிக்காவாக இருந்தாலும் சரி... இந்தியாவாக இருந்தாலும் சரி... வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு விஷயத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வழி என்றுமே ஸ்ட்ரிக்ட் தான்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.