டேட்டா புரோக்கர்களின் நூதன மோசடி உங்கள் முகவரி, போன் நம்பர் ஒரு ரூபாய்க்கு விற்பனை

டேட்டா புரோக்கர்களின் நூதன மோசடி உங்கள் முகவரி, போன் நம்பர் ஒரு ரூபாய்க்கு விற்பனை

நீங்கள் ஆன்லைனில் பொருள் வாங்குபவரா? கண்ட வெப்சைட்டில் எல்லாம் சுய விவரங்களை பதிவு செய்பவரா? அப்படியானால் இனி நீங்கள் உஷராக இருக்க வேண்டும். உங்கள் தகவல்களை திருடி விற்க ஒரு கும்பலே இருக்கிறது. இதுபற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லோன் வேண்டுமா என்பது தொடங்கி, ஹோட்டல் அறை புக்கிங், டூர் பேக்கேஜ் என எல்லாவற்றுக்கும் போன் மூலம் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. சில சமயம் ஒரு ஊரில் ஓட்டல் அறை பற்றி நீங்கள் தேடியிருப்பீர்கள்.

அதை தொடர்ந்து சில நேரத்திலேயே, இந்த ஊரில் அல்லது பகுதியில் ஓட்டல் அறைகள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வாடகைக்கு கிடைக்கும் என எஸ்எம்எஸ் வரும். சில நேரங்களில் போனில் யாராவது தொடர்பு கொண்டு, ‘‘என்ன சார், ரூம் புக் செஞ்சுட்டீங்களா?. எங்களிடம் அருமையான டீல்கள் இருக்கின்றன. முயற்சி செய்து பார்க்கிறீர்களா என வலை வீசுவார்கள். இதுபோல், நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கியிருப்பீர்கள். இன்டர்நெட்டில் நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தேடியிருப்பீர்கள். இது பற்றி எஸ்எம்எஸ் அல்லது இமெயிலில் ஆஃபர்கள் குவியலாம்.

இதுவெல்லாம் காக்கை உட்கார பனம் பழம் விழுந்த மாதிரியா? அல்லது நம் எண்ணத்தை அறிந்து இப்படியொரு டீல் வருகிறதே என்று நீங்கள் குழம்பினாலும் சரி… மலைத்தாலும் சரி… இது எல்லாமே டேட்டா புரோக்கர்கள் வேலைதான். சுருக்கமாக சொன்னால், உங்கள் எண்ண ஓட்டத்தை அறிந்து ‘இந்த டீலுக்கு இவர் சரியான ஆள்தான்’ என்று முடிவு செய்யத்தான் இவ்வளவு வேலைகளும் நடக்கிறது. உதாரணமாக, ஒரு லட்சம் பேரின் பெயர், முகவரி, போன் நம்பர்கள் வெறும் ரூ.10,000 முதல் ரூ.15,000க்கு விற்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் நகரங்களில் இந்த திருட்டு டேட்டாக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்துள்ளது.

இதுகுறித்து தகவல்களை விற்பனை செய்யும் புரோக்கர் ஒருவர் கூறியதாவது: என்னிடம் ஏராளமானோரின் விவரங்கள் இருக்கின்றன. உயர் சம்பள பிரிவு முதல், ஒவ்வொரு வருவாய் பிரிவின்படி வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளது. சம்பளம் வாங்குவோர் மட்டுமின்றி, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள், ஓய்வு பெற்ற பெண்கள் என எந்த பிரிவில் எப்படி கேட்டாலும் என்னால் விவரங்களை தரமுடியும். சில மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உடனே எங்களிடம் உள்ள தகவல்களை வாங்குவதில்லை. சாம்பிளுக்கு என சிலவற்றை கேட்பார்கள். இதை வைத்து அவர்கள் அணுகும்போது திருப்திகரமாக பலன் கிடைத்தால் எஞ்சியுள்ளதை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள் என்றார்.

இதுபோல் வங்கி கிரெடிட் கார்டு தகவல்களை சேகரித்திருந்த ஒரு புரோக்கர், அவற்றில் 3,000 பேரின் விவரங்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். பெயர், முகவரி போன், நம்பர்கள், கிரெடிட் கார்டு என்றிருந்தாலும், இதிலும் நுணுக்காக பிரிமியம் கிரெடிட் கார்டா, கோல்டு, பிளாட்டினம், சில்வர் என எந்த வகை கிரெடிட் கார்டு யார் வைத்துள்ளனர் என தெரிவித்து விடுவார்கள். டெல்லி, என்சிஆர், பெங்களூருவில் 1.7 லட்சம் பேரின் தகவல்கள் 7,000 ரூபாய்க்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ஆன்லைன் நிறுவனத்தில் பொருள் வாங்கிய ஒருவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆன்லைனில் பொருள் வாங்கும்போது போன் நம்பர் பதிவு செய்துள்ளார். அவர் வசிக்கும் அதே நகரத்தில் இருந்து அவரது நம்பரை குறிப்பிட்டு 100க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது நீங்கள் செய்த ஆர்டர்தானா? பொருள் சரிதானா என்று கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து போன் வந்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சில ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் விவரங்கள் திருடு போவது பற்றியே அறியாமல் உள்ளனர். தகவல் பாதுகாப்பின் அவசியத்தை கூட அவர்கள் உணரவில்லை. குற்றம் என்று தெரிந்தும் இத்தகைய டேட்டா திருட்டுகள் சகஜமாக நடக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, புதிதாக ஒரு இணையதளம் வந்துவிட்டாலே அதில் தங்கள் கணக்கை உருவாக்குவது, தகவல்களை பதிவு செய்வது என்ற பழக்கத்தை விடவேண்டும். முடிந்த வரை தகவல்களை பாதுகாப்பற்ற இணையதள வெளியில் பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் திருட்டு பற்றி திடுக்கிடும் தகவல்கள்

* சில ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் விவரங்கள் திருடு போவது பற்றியே அறியாமல் உள்ளனர்.

* தகவல் பாதுகாப்பின் அவசியத்தை கூட அவர்கள் உணரவில்லை.

* குற்றம் என்று தெரிந்தும் இத்தகைய டேட்டா திருட்டுகள் சகஜமாக நடக்கின்றன.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.