தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்? - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்!

தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்? - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்!

\'நீரின்றி அமையாது உலகு\' என்பது வள்ளுவன் கூற்று. நம் உடலுக்கும் தண்ணீரே அடிப்படை. ஆரோக்கியத்துக்கு தண்ணீர் எவ்வளவு அடிப்படையானது, நம் உடல் இயக்கங்களில் அதன் பங்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி அறிந்தால், ஆச்சர்யம் மேலோங்கும்!

சரி... ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? அந்தத் தண்ணீர் வியர்வையும் சிறுநீருமாய் எப்படி வெளியேற்றப்படுகிறது? அதற்கானத் தேவையும் முக்கியத்துவமும் என்ன? சிந்தித்துப் பார்க்கிறோமா? தவிக்கும் நேரம் மட்டும் தண்ணீர் அருந்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்குகிறோம்.

\"தண்ணீர்\"

தண்ணீரை அப்படி சர்வ அலட்சியமாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால், உடம்பின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீர் நிரம்பியிருக்கிறது. நம்பமுடிகிறதா? அறிவியல் பூர்வமாக அதுதான் உண்மை. அதுபற்றிய தகவல்களை விரிவாகத் தருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி.

ஆண்களுக்கு 60 சதவிகிதம்... பெண்களுக்கு 55 சதவிகிதம்!

\'\'திசுக்களின் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாக இருப்பது தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் (Electrolytes). இவை உற்பத்தி ஆவதும் உட்கிரகிப்பதும் முழுவதுமாக குடல்பகுதியில்தான். செல்களின் வெளிப்பகுதியில் உள்ள இறுக்கமான இணைப்புகளுக்கு இடையே சவ்வூடு பரவல் (Osmosis) மூலம் நின்று நிதானிக்கிறது தண்ணீர். அதேசமயம், உடலின் மொத்த நீரின் அளவில் 3-ல் 2 பங்கு செல்களுக்கு உள்ளேயே காணப்படுகிறது. அதனால்தான், செல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு தண்ணீர் பிரதானமாக விளங்குகிறது. கொழுப்பு திசுக்களாக இருக்கிறபட்சத்தில், அதற்குள் நீரின் அளவு குறையும்.

ஆண்களுக்கு உடல் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர் இருந்தால் பெண்களுக்கு 52 சதவிகிதம் முதல் 55 சதவிகிதம் மட்டுமே இருக்கும். உடல் பருமன் மற்றும் முதுமையடைந்த  பெண்களுக்கும் ஆண்களுக்கும் நீரின் அளவு கணிசமாகக் குறையலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.

சராசரியாக 68 கிலோ எடை இருப்பவரின் உடலில் 41 லிட்டர் தண்ணீர் இருக்கக் கூடும். அதில் 23 முதல் 27 லிட்டர் திசுக்களின் உள்ளேயும், 7 லிட்டர் திசுக்களின் வெளியேயும் அதைச் சுற்றியும் இருக்கிறது. 4 லிட்டர் தண்ணீர் ரத்தப் பிளாஸ்மாவில் இருப்பதாக மருத்துவக் கருத்தரங்க ஆய்வுகள் முன்வைக்கின்றன.

ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் ஏறக்குறைய 85 சதவிகிதம் தண்ணீர் அதன் உடலில் மிகுந்திருக்கும். குழந்தைப் பருவம் எய்துகிறபோது 75 சதவிகிதம் ஆக அது குறையும். \'\'உடலில் தண்ணீர்ச் சத்து குறைந்தால் மயக்கம், நினைவிழத்தல், ஏன் மரணம் கூட உண்டாகும்\'\' என தஞ்சையைச் சேர்ந்த சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் மோகன்தாஸ், தன் \'உணவும் நலவாழ்வும்\' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

\"குடம்

ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர்!

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடை காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.

பொதுவாக நாம் தாகத்தின்போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறோம். அதுவே போதுமானது எனக் கூறமுடியாது. பிற நேரங்களில் உட்கொள்ளக்கூடிய திரவ ஆகாரங்களினாலும் உணவுப்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கப்பெறுகிறோம். சொல்லப்போனால், செல்களால்  ஆன நம் உடலில், செல்களுக்கு வெளியில், கொள்கலன்போல் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. அதுதான் அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படும்போது ஈடு செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. எப்போதுமே உடலில் உள்ள நீருக்கும், வெளியேற்றப்படும் நீருக்கும் இடையே  இருக்கும் சமநிலையில்தான்  பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள இயலும். அதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டிய தகவல் என்னவெனில், தோராயமாக 1500 மி.லி தண்ணீர் ஒருநாளைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதுமட்டுமே உடலின் இயக்கச் சீர்பாடுகளை கட்டமைத்து சிறுநீராக வெளியேறுகிறது எனக் கணக்கில்கொள்ள முடியாது. இயல்பிலேயே உடலில் சுரக்கப்படும் நீர், தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.

\"தண்ணீர்\"

உதாரணமாக, உமிழ்நீரில் 1,500 மி.லி, இரைப்பையில் 2000 மி.லி, பித்தநீரில் 500 மி.லி, கணையத்தில் 1,500 மி.லி, சிறுகுடலில் 1,500 மி.லி எனத் தண்ணீர் உடலின் அத்தனை பாகங்களிலும் சுற்றிச் சுழல்கிறது. குடல் பகுதியில் 1,400 மி.லி, (Colonic reabsorption), போர்டல் வெயின் பகுதியில் (Portal vein reabsorption) 6,700 மி.லி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நம் உணவு மண்டலத்தில் 8,200 மி.லி நீரானது விரவிக்கிடக்கிறது என்றால், அதில் 8,100 மி.லி செரிமானப் பகுதியில் உட்கிரகிக்கப்படுகிறது. எஞ்சிய 100 மி.லி தண்ணீர்தான் மலத்துடன் வெளியேற்றப்படுகிறது என்பதை ‘டேவிட்சன்’ எனும் ஆங்கில மருத்துவ நூல் வாயிலாக அறியலாம்.

சுரப்பு நீர், செரிமானம், கடத்துதல், கரைத்தல், சுத்திகரிப்பு!

தண்ணீர் டூ சிறுநீர் என்பது வெறும் உள்ளே வெளியே ஆட்டம் அல்ல. தண்ணீரின் பயன்பாடு அளப்பரியது. உடலுக்குத் தேவையான சுரப்பு நீர், உணவுச் செரிமானம், அதற்குப் பிறகான சத்துப் பொருட்களை கடத்துதல், கரைத்தல் என முக்கிய பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைத் தடுக்கும் திரவமாகவும் செயல்படுகிறது. ஒவ்வாத, தேவையற்ற நச்சுப் பொருட்களை தண்ணீர் அப்புறப்படுத்திவிடுகிறது. வயிற்றுப் புண் மற்றும் சிறுநீரகக் கல் அடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.

பொதுவாக இழப்பு என்பதைவிட, கழிவாக வெளியேறும் நீரின் அளவை அறிய  வேண்டும். சிறுநீரின் வழியாக 1500 மி.லி மலத்துடன் 100 மி.லி வியர்வையில் 200 மி.லி நீர் வெளியேறுகிறது. சுவாசம் என்றால் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவது மட்டுமல்ல... காற்றுடன் 700 மிலி நீரும் வெளியேற்றப்படுகிறது.

\"குடிநீர்\"

 

இன்றைய காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியில், மனிதனின் ஆக்கப்பூர்வச் சிந்தனையில், உடல் உழைப்பில் எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியும். ஆனால், இயற்கையின் கொடையான தண்ணீரை ஒருபோதும் செயற்கையாக உருவாக்க இயலாது. மண், மரம், விலங்குகள் உட்பட மனிதனும் நீரை நம்பி வாழவேண்டும் என்பது இயற்கையின் கட்டாயம். எந்த மென்பொருட்களாலும் இதை மாற்றியமைக்க முடியாது. அதனால்தான் \'தண்ணீரைச் சேமியுங்கள்\' எனச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அரசும் கவனப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நீர் அரசியல்தான் நம் சாபக்கேடு. இல்லாமையும் கலப்படமும் இதில்தான் வியாபார நோக்கில் கையாளப்படுகின்றன. இயற்கைக்குப் புறம்பாக போகிறபோதெல்லாம் உயிர் வாழ ஏதோ ஒரு வகையில் தண்ணீர் நம்மை கைகோத்துக் கொண்டே இருக்கிறது.

ஆகவே, யார் தடுத்தாலும் விலைமதிப்பற்ற நீரின் இயக்கம், நம் உடலுக்குள் தன்னியல்பாக நடந்துகொண்டே இருக்கும். இதில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் உடற்கூறுகள் பாதிப்படையும் அல்லது உடல் பாதிப்பால் நீர் இயக்கத்தில் சிக்கல் ஏற்படலாம். உடல் எடை, வயது, பருவகால மாற்றங்கள், உடற்பயிற்சி, மருத்துவக் காரணங்கள் இவற்றை மனத்தில் கொண்டு, காய்ச்சிய நீரை தேவைக்கேற்ப அருந்த வேண்டும்.

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் வேண்டாம்!

இன்னொரு புறம், தண்ணீர் நல்லது எனக் குடம் குடமாகக் குடிப்பது ஆபத்தில் முடியும். சிறுநீரகம் தன் வேலையில் திணற ஆரம்பிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடனே மூளை நரம்பு மண்டலம் தூண்டப்படும். தாகம் ஏற்பட ஆரம்பிக்கும். தண்ணீர் குடித்தாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். பெரும்பாலும் தன்னைத் தானே சரி செய்யக் கூடிய வகையிலேயே உடல் அமைப்பு உள்ளது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருந்தால் தாகம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

உணவு இல்லாமல் 50 நாட்கள் கூட வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருசில நாட்கள் கூட வாழமுடியாது என்கிறார்கள். நீருக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடியம் அதிகமானால் தாகம் அதிகரிக்கும். சோடியம் குறைந்தால் சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றும். அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படுகிற காலகட்டத்தில் மூளையில் சுரக்கும் வேஸோபிரஸ்சின் (Vasopressin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்தில் நீர் வெளியேறுவதைக் குறைத்து விடுகிறது. இருதயம் மற்றும் சிறுநீரகம் அவைகளுக்கான வேலைகளைச் சரிவர செய்ய இயலாத நிலையில், நுரையீரல் மற்றும் திசுக்களில் தண்ணீர் கோத்து நிற்கிறது. இதனால் கை,கால், முகம், வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதோடு மூச்சுத் திணறலும் உண்டாகிறது. இந்த நேரங்களில் மருத்துவரை அணுகி முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், வறட்சியால் வாய் உலர்ந்து, கண்கள் உள்ளே போய் பலமிழக்கும் நிலை வந்தால் உப்பு, சர்க்கரை கலந்த நீர் (ORS), நீர் மோர், இளநீர், பழச்சாறு போன்றவை அருந்தி ஈடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இயற்கை மருத்துவத்தில் நீர்சிகிச்சை என்று கூட உண்டு. இவையெல்லாம் கடந்து, நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைத் தடுக்க, மருத்துவமனைகளில் உடனடியாக சிரைத்திரவம் (Intra venious fluids) செலுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.

 

\"தாகம்

பெண்கள் தண்ணீர் தவிர்க்கக் கூடாது!

உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறைவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், நாம் உயிர்வாழத் தண்ணீரின் பங்கு எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். முக்கியமாகப் பெண்கள் இதை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வெளிப் பிரயாணங்களில் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்கிற அச்சத்தால் தண்ணீர் குடிப்பதை பெண்கள் முற்றிலுமாகத் தவிர்க்கின்றனர். இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மேற்கூறிய காரணங்கள் தெளிவுபடுத்தும்.

போதிய கழிப்பறை வசதி இன்மை மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வறட்சி ஏற்பட்டு நீர்ச்சத்து குறைகிறது. இதனால் அடர் மஞ்சள் நிறத்துடன்கூடிய சிறுநீரோடு நீர்க்குத்தலும் ஏற்படும். இயற்கை உபாதைகளை அடக்குவதால், ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கு நேரங்களில் உதிரத்தோடு தண்ணீரும் அதிகம் வெளியேறுமோ என்று பெண்கள் பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக மாதவிடாயில் 40 மி.லி முதல் 50 மி.லி ரத்தம் மட்டுமே வெளியேறும். அதேநேரம், மட்டுப்படாத உதிரப்போக்கு மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் (Menopause) ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் கட்டுக்கடங்காத வியர்வை இவற்றால் நிச்சயம் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும். பதட்டமின்றி விழிப்பு உணர்வோடு பெண்கள் தங்கள் மருத்துவ நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டும்.

வயதான காலங்களில் செல்களின் செயல்களில் தேக்கம் ஏற்படலாம். உடலுக்குள் நீர் தேவைப்படும். ஆனால், தாகம் எடுக்காமல் இருக்கும். வாழ்க்கையின் மீதான விரக்தி, உளச் சோர்வு, உடல் நலம் குறித்த ஆர்வமின்மை போன்ற மனக் காரணங்களால் தண்ணீர் அருந்துவதில் முதியோர் கவனக்குறைவாக இருக்கின்றனர். உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகப் பழக வேண்டும்.

தரமற்ற பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்களில் விற்கப்படும் நீர், நச்சு ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. இதனால், வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு போன்ற அசுத்த நீரால் வரக்கூடிய தொற்று நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரும் மண்பானை நீருமே ஏற்புடையது.

வந்தபின் காப்பது அனுபவம். வருமுன் காப்பது புத்திசாலித்தனம். நிறைவாகத் தண்ணீர் அருந்தி, நோய்கள் தவிர்த்து, நலமோடு வாழ முயற்சிக்கலாமே!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.