தூக்கத்தை தொலைக்கும் செல்போன்.... இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள்

தூக்கத்தை தொலைக்கும் செல்போன்.... இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள்

வயதானவர்களுக்கு தூக்கமின்மை என்பது இயல்பான ஒரு பிரச்சினை தான். ஆனால், சமீப காலமாக இரவு நேரங்களில் படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை என்று மருத்துவ ஆலோசனை கேட்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
குறிப்பிட்டு சொல்லக்கூடிய வாழ்வியல் பிரச்சினை எதுவும் இல்லாத இளைஞர்களும், இளம்பெண்களும் இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு ஆட்பட வேண்டிய காரணம் என்ன? இரவு நேரத்தில் படுக்கையில் படுத்த உடன் தூக்கம் வந்துவிடும் என்றும், அதிகாலை நேரத்தில் கடிகார அலாரம் உதவியின்றி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக விழிப்பு வந்துவிடும் என்றும் கூறுபவர்கள் உண்டு. அப்படியானால், ஒரு மனிதனின் தூக்கத்தை கட்டுப்படுத்தும், வரைமுறை செய்யும் செயலை மேற்கொள்ளும் மனிதனின் உறுப்பு எது?
 
மனிதனின் மூளைப்பகுதியில் ‘பினியல்’ என்ற மிகச்சிறிய சுரப்பி அமைந்துள்ளது. அது உற்பத்தி செய்யும் ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் தூக்கத்தின் நேர அளவை நிர்ணயம் செய்கிறது. பொதுவாக, அந்த ஹார்மோன் முன்னிரவில் சுரக்க தொடங்கி, இரவு முழுவதும் சுரந்து, அதிகாலை நேரத்தில் குறைய தொடங்கிவிடும். அதன் காரணமாக இரவில் நல்ல உறக்கம் ஏற்பட்டு, அதிகாலை நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறது.
 
மெலடோனின் அளவு குறைவாக சுரந்தால், தூக்கமின்மை ஏற்படும் என்பது டாக்டர்களின் கருத்து. மன அழுத்தம், வேலைப் பளு, இரவு நேரப்பணி, மது அருந்துதல் போன்றவை மெலடோனின் குறைவாக சுரப்பதற்கு காரணங்களாக இருந்தாலும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களும் மெலடோனின் சுரப்பதை பாதிக்கும் காரணியாக விளங்குகிறது. இதனால், இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பு நீலநிற ஒளி நிறைந்த அறையில் அதிக நேரம் செலவழிப்பது ஆழ்ந்த உறக்கத்துக்கு தடையாக அமைந்துவிடுகிறது.
 
சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, படுக்கைக்கு செல்லும் முன்பு, அன்றைய தினம் செல்போனில் வந்து குவிந்துள்ள வாட்ஸ்-அப் செய்திகளையும், வீடியோக்களையும் பார்க்க, மெசேஜ்களுக்கு பதில் அளிக்க நீண்ட நேரத்தை விரயமாக்குகிறார்கள். நீல நிற ஒளிக்கதிர்களின் தாக்குதலால், செல்போன் பயன்படுத்துபவர்களின் உடலில் மெலடோனின் சுரப்பது குறைய தொடங்குகிறது. அதன்விளைவாக அவர்கள் இரவு நேரத்தில் தூக்கம் வரமால் நீண்ட நேரம் அவதியடைய நேரிடுகிறது.
 
 
இரவு நேரத் தூக்கத்திற்கு மட்டும்தான் செல்போன் எதிர்வினை புரிகிறதா? என்றால், இன்னும் பல பாதிப்புகளை தரும் சக்தி உடையதாக செல்போன் இருக்கிறது. பகல் முழுவதும் குடும்பத்துக்காக உழைத்துவிட்டு இரவில் வீடு திரும்பும் அப்பாக்களில் பலரும் தங்களது குழந்தைகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, செல்போனில் மூழ்கிவிடும் சூழல் அநேக குடும்பங்களை ஆட்கொண்டுள்ளது.
 
அதே போன்று குழந்தைகளும் பள்ளிக்கூடம் முடிந்து, டியூசன் வகுப்புகளுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் அவர்களது அப்பா, அம்மாவுடன் பேசுவதை தவிர்த்துவிட்டு, இணையதள வசதி கொண்ட செல்போன்களில் அதிக நேரம் செலவிட ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது பெற்றோர், குழந்தைகளுக்கு இடையேயான பாசம் பெருகுவதற்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது. அவர்கள் மாறி, மாறி பொழிய வேண்டிய அன்பு, பாசத்தை செல்போன் பயன்படுத்தும் நேரம் களவாடி சென்றுவிடுகிறது. மேலும், தங்களின் குடும்ப பாரம்பரியம் பற்றி குழந்தைகளிடம் பேசவும், வாழ்வியல் நெறிமுறைகளை அவர்களுக்கு வகுத்து கொடுக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
 
தொலைவில் இருப்பவர்களை நண்பர்களாக்கி கொள்ளும் வாய்ப்பை வழங்கும் செல்போன், அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள அவகாசம் அளிப்பதில்லை. அவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பையும் தருவதில்லை. தூய்மையான நட்பை பெறுவதிலும் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. பொது இடங்களில், சாலையில் நடந்து செல்லும்போது தன்னிலை மறந்து செல்போன்கள் பேசிக்கொண்டு செல்வதால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.
 
பள்ளிக்கூடங்களில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பலரும் செல்போன் உபயோகிப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. பழைய காலங்களில் வகுப்பு இல்லாத நேரத்தில், அடுத்த வகுப்பில் மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்போது ஆசிரியர்களின் அந்த நேரத்தையும் செல்போன் அபகரித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் வகுப்பு நடக்கும் சமயத்தில் செல்போனில் நேரத்தை செலவிட்டு, மதிப்பெண்களையும், பிரகாசமான எதிர்காலத்தையும் மங்க செய்கிறார்கள்.
 
உணவில்லாமல் கூட பலரால் இருந்துவிட முடியும் போலும். ஆனால், செல்போன் இன்றி அவர்களால் சில நிமிடப்பொழுதை கூட கழிக்க முடிவதில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படித்தான் செல்போனும் ஒரு போதை போன்றது. இது வாழ்க்கையின் அனைத்து அங்கத்திலும் கவனமின்மையை மட்டுமே பரிசளிக்கிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஈடுகட்ட முடியாதவை என்பதை உணர வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது எப்படி ஓட்டுநருக்கும், சாலையில் பயணிப்பவர்களுக்கும் ஆபத்தானதோ, அது போன்றுதான் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், சாலையில் நடந்து செல்வதும் ஆகும்.
 
பரந்து விரிந்த உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கியவாறு, பல்வேறு வசதிகள் செல்போன் மூலம் கிடைக்கப் பெற்றாலும், செல்போன்களின் தினசரி பயன்பாட்டுக்கு ஒரு காலவரையரை நிர்ணயம் செய்ய தவறினால் வளரும் தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல் நேரத்தின் பெரும்பகுதியை அந்த செல்போன் அபகரித்துக்கொள்ளும் அபாய சூழலில் இருந்து விடுபட முடியாது என்பதை உணர வேண்டிய தருணம் இது. அறிவியலின் அரிய கண்டுபிடிப்புகளை வரைமுறையின்றி பயன்படுத்த தொடங்கினால் அது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதற்கு அளவுக்கு அதிகமான செல்போன்களின் பயன்பாடு ஒரு சான்றாக விளங்குகிறது.
 
பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்., காவல் துறை தலைவர் (ஓய்வு)

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.