பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள்...!

பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள்...!

தாவர புரதச்சத்து அதிகம் உள்ள பயிர்களில் பயறுவகைப் பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன. சராசரியாக 100 கிராம் பயறுவகை பயிரில் 335 கிலோ கலோரி எரிசக்த்தியும், 20 - 25 கிராம் புரதச்சத்தும், 140 மி.கி. கால்சியமும், 300 மி.கி. பாஸ்பரசும், 8 மி.கி இரும்புச்சத்தும், 0.5 மி.கி. தயமின், 0.3 மி.கி ரிபோபிளேவின் மற்றும் 2 மி.கி நியாசினும் உள்ளது. ஆகையால், நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் பயறுவகைப் பயிர்கள் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதச்சத்தை வழங்குவதால் ஏழைகளின் மாமிசம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மேலும், பயறுவகைப் பயிர்கள் நமக்கு உணவுப் பொருளாக மட்டுமின்றி கால்நடைகளைக்கு சிறந்த தீவானமாகவும், பசுந்தாள் உரமாகவும், மண் அரிமானத்தை தடுக்கும் போர்வையாகவும், மண்வளத்தை காப்பவையாகவும் விளங்குகின்றன. பயறுவகைப் பயிர்களின் முக்கியத்துவம், புரதச்சத்து பற்றாககுறையை போக்குவதில் அதன் பங்கு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தினை உணர்ந்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டும் ஐ.நா. பொதுச் சபை 2016 ஆம் ஆண்டை உலக பயறு வகைகள் ஆண்டாக அறிவித்துள்ளது.

உலக அளவிள், இந்திய பயறுவகைப் பயர்கள் உறுபத்தி (23 சதவிகிதம்), பயன்படுத்துதல் (27 சதவிகிதம்), இறக்குமதி செய்வதில் (14 சதவிகிதம்) முதலிடம் வகிக்கின்றது. தமிழகத்தில் பயறுவகைப் பயிர் 8.8 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மொத்தப் பரப்பளவில் 17 சதவிகிதம் ஆகும். தமிழகத்தில், 7.6 லட்சம் டன் பயறுவகை உற்பத்தி செய்யப்பட்டு எக்டருக்கு 867 கிலோ விளைச்சல் பெறப்பட்டாலும், உலக உற்பத்தித்திறனைவிடக் குறைவே (908 கிலோ ஃ எக்டர்) ஆகும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான தனி மனித புரதச்சத்து தேவை 80 கிராம் என்ற போதிலும் 1960 ல் தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைக்கும் அளவு 60 கிராமிலிருந்து தற்போது 42 கிராமாக குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பயறுவகைத் தேவை 12.0 இலட்சம் டன் எனவும், தற்போதைய உற்பத்தியுடன் ஒப்பிடும்போது சுமார் 4.4 இலட்சம் டன் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சுமார் 13 வகையான பயறுவகைகள் பயிரிடப்படுகின்றன. அவற்றில், துவரை, உளுத்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, அவரை மற்றும் கொள்ளு முதலியவை முக்கியமானவை. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயறுவகைப் பயிர்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து அதிக விளைச்சலை பெற பரிந்துரை செய்யப்படுகிறது, துவரை தமிழ்நாட்டில் 0.72 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அகிக விளைச்சல் அடைவதற்கு புதிய இரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டும் துவரை இரகங்களை குறுகிய கால இரகங்கள், நடுத்தர வயதுடைய இரகங்கள், நீண்ட கால இரகங்கள் மற்றும் பல ஆண்டுகள் பயன் தரும் இரகங்கள் என வகைப்படுத்தலாம். வம்பன் 3, ஏ.பி.கே 1 ஆகிய இரகங்கள் குறுகிய கால வயதுடைய (100 - 110 நாட்கள்), கோ (ஆர்ஜி) 7 நடுத்தர வயதுடைய (120 - 130 நாட்கள்) மற்றும் கோ 6, வம்பன் 2 ஆகியவை நீண்ட கால வயதுடைய (170 - 180 நாட்கள்) துவரை இரகங்களாகும். பி.எஸ்.ஆர் 1 பல ஆண்டுகள் பலன் தரும் துவரை இரகமாகும்.

தமிழ்நாட்டில் உளுந்து சுமார் 3.73 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படடு 3.58 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் பயனாக வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வம்பன் 3, வம்பன 4, வம்பன் 5, வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8 ஆகிய இரகங்களும், கோயம்புத்தூரிலிருந்து கோ 6 என்ற இரகமும், ஆடுதுறையிலிருந்து ஏடிடீ 3 மற்றும் ஏடிடீ 5 ஆகிய இரகங்களும், திண்டிவனம் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து டிஎம்வி 1 என்ற இரகமும், அருப்புக்கோட்டையிலிருந்து ஏபிகே 1 என்ற இரகமும்; நல்ல விளைதிறன், பூச்சி, நோய் மற்றும் வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட இரகங்களாகும்.

இவற்றில் வம்பன் 3, வம்பன 4, வம்பன் 5, வம்பன் 6, வம்பன் 7, வம்பன் 8, டிஎம்வி 1 இரகங்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை - மாசி பட்டங்களிலும் பயிரிட ஏற்றது. கோ 6 என்ற இரகம் தமிழ்நாட்டில் புரட்டாசிப் பட்டத்தில் பயிரிட ஏற்றது. ஏபிகே 1 இரகம் தென் மாவட்டங்களில் மானாவாரிப் பருத்தியில் ஊடுபயிராக பயிரிட எற்றது. ஏடீடி 3 இரகம் நெல் தரிசில் (ஜனவரி) பயிரிட ஏற்றது. ஏடீடி 5 இரகம் நெல் தரிசு (ஜனவரி) மற்றும் கோடை இறைவையில் (பிப்ரவரி - மார்ச்) பயிரிட ஏற்றது. ஆகையால் விவசாயிகள் அந்தந்த பகுதிகேற்ற இரகங்களை பயிர் செய்து அதிக விளைச்சலைப் பெறலாம்.

பாசிப்பயறு தமிழ்நாட்டில் 2.29 லட்சம் எக்டரில் பயிர் செய்யப்பட்டு 1.80 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. பாசிப்பயறு ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம், கோடைப்பருவம் மற்றும் நெல்தரிசில் நெல் அறுவடைக்குப்பின் பயிர் செய்ய உகந்தது. ஊடுபயிராக பழ மரங்கஞக்கு இடையிலும் பயிர் செய்யலாம். வம்பன் (ஜிஜி) 2, வம்பன் (ஜிஜி) 3, கோ 6, கோ 8, பையூர் 1 இரகங்கள் தமிழகத்தில் ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களில் மானாவாரியாக பயிரிட ஏற்றது. கோ (ஜிஜி) 7 மற்றும் விரிஞ்சிபுரம் 1 இரகங்கள் ஆடி பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்றது.

ஏடிடீ 3 இரகம் நெல் தரிசில் (ஜனவரி - பிப்ரவரி) பயிரிட ஏற்றது. தட்டைப்பயறு தமிழகத்தில் 0.42 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. தட்டைப்பயறு தானியமாகவும், பச்சை காய்கள், காய்கறியாகவும் பயன் தரவல்லது. தட்டைப்பயறு நிழலைத்தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது. வறட்சியைத் தாங்கி வளரும் கொள்ளு மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது. இது ஒரு குளிர் கால பயிராகும். தமிழ்நாட்டில் கொள்ளு சுமார் 0.60 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மற்றொரு குளிர் பருவப் பயிரான கொண்டைக்கடலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும், ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கரிசல் மண் நிலத்திலும் பயிரிடப்படுகிறது.

பயறுவகைப் பயிர்ச் சாகுபடியில் உற்பத்தித்திறன் பயிரின் முழு உற்பத்தித் திறனைக் காட்டிலும் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு :-

 • வளமற்ற மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தல்
 • குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட இரகங்களை பயன்படுத்துதல்
 • தரமற்ற மற்றும் கலப்பு விதைகளை பயன்படுத்துதல்
 • எந்தவித உரமும் பயன்படுத்தாது சாகுபடி செய்தல் அல்லது குறைந்த அளவில் உரமிட்டு சாகுபடி செய்தல்
 • சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்காமல் இருத்தல்
 • பரிந்துரை செய்யப்படும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை பயிர் செய்யும் சூழ்நிலைக்கேற்ப சரியான தருணத்தில் முறையாக கடைபிடிக்காமை
 • பயறுவகைப் பயிர்ச் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வழிமுறைகள்
 • பயறுவகைப் பயிர்களைத் தனிப்பயிராக அதிகம் பயிரிட வேண்டும் 
 • அதிக இடைவெளியுள்ள பயிர்கள் பயிரிடும் போது ஊடு பயிராக பயறுவகைப் பயிர்களைப் பயிராக பயறுவகைப் பயிர்களைப் பயிரிடலாம்
 • வயல் வரப்புகளில் பயிரிடலாம்
 • பயிர்ச் சுழற்சியில் பயறுவகைப் பயிர்களைக் கட்டாயம் சாகுபடி செய்தல் வேண்டும்
 • பாசனைப் பகுதிகள் மற்றும் தாமிரபரணி, வைகை போன்ற ஆற்று படுகைகளில் நெல் தரிசில் பயறுவகை பயிர்களை பயிரிடுவதற்கு முக்கியத்திவம் அளக்கி வேண்டும்
 • பருத்தி, கரும்பு, சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கிடையில் பயறு வகைகளை ஊடுபயிராக பயிரிடலாம்
 • மண் பரிசோதனை செய்து பரிந்துரை செய்யப்பட்ட சாகுபடி குறிப்புகளை பயன்படுத்தி சாகுபடியை அதிகரிக்கலாம்
 • சான்று விதைகளை பயன்படுத்தி விதைக்க வேண்டும். சரியான தருணத்தில் சான்று விதைகள் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்
 • பயறு வகைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மேலாண்மை உத்திகள்
 • பாசன வசதி உள்ள பகுதிகளில் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளைத் தனிப் பயிராக பயிரிடுதல்
 • சரியான பட்டத்தில் காலத்திற்கேற்ற உயர் விளைச்சல் இரகத்தைத் தேர்வு செய்தல் 
 • விதைகளை நுண்ணுயிர்,பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் கடினப்படுத்தி விதைத்தல்
 • செடிகளுக்கிடையே சரியான இடை வெளியைப் பராமரித்தல்
 • பாசன வசதியுள்ள இடங்களில் துவரையை நாற்றுவிட்டு உரவழி நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்
 • ஒருங்கிணைந்த களை நிர்வாகம், உரநிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் மேற்கொள்ளுதல்
 • பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் ஆரம்பநிலையை கண்காணித்து தகுந்த பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை பின்பற்றி பயிர் வகை பயிர்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்.
 • இரண்டு சத டி.ஏ.பி உரத்தையும், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியையும் பூக்கும் பருவத்திலும், 15 நாட்கள்  கழித்து மீண்டும் ஒருமுறை இலை வழியாக அளித்தல்
 • பயறுவகைப் பயிர்களை, வறட்சி ஏற்படுகின்ற போது நடமாடும் நீர்த் தெளிப்பானைப் பயன்படுத்தி வறட்சியிலிருந்து பாதுகாத்து அதிக விளைச்சலைப் பெறலாம்
 • ஓரே சமயத்தில் செடிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடை செய்யத் தகுந்த இரகங்களை பயிரிடுதல்
 • நல்ல சேமிப்பு கிடங்குகளில் விதைகளைப் பராமரித்து, முளைப்புத் திறன் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
 • அறுவடைப் பின்சார் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்துதல்
 • பயறு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தினை அதிகரிக்க த.வே.ப.க பயறு ஒண்டர் தெளித்தல். 1 ஏக்கருக்கு 2.0 கிலோ அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள் பூக்கும் சமயத்தில் காலை நேரத்தில் இலைவழி தெளித்தல்
 • உற்பத்தியாளர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பருப்பு உடைக்கும் கருவியை வாங்கி பயன்படுத்தி துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை பருப்பாக உடைத்து, சுத்தம் செய்து, தரம் பிரித்து அதிக வருமானத்தை ஈட்டலாம்.

தமிழ்நாட்டில் பயறுவகைப் பயிர்கள் தேவைக்கு மிகக் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் எதிர்காலத்தில் அவற்றிற்கான சந்தை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேளாண் விற்பனை, வேளாண் வணிக ஆணையரின் ஆலோசனையைப் பெற்று உழவர்கள் ஒழுங்கு முறை விற்பனை மையத்தின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சந்தைத் தகவல் மையத்தின் மூலம் அளிக்கப்படும் விலை நிலவரங்களை உழவர் பெருமக்கள் அறிந்து செயலாற்றினால் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் உற்பத்தித் திட்டத்தில் பயறுவகை பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உழவர்கள் மேற்கூறிய அனைத்து நவீன மேலாண்மை தொழில் நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடிப்பதன் வாயிலாக பயறுவகைப் பயிர்களின் உற்பத்தித் திறனைக் கணிசமாக உயர்த்த வாய்ப்புள்ளது.

தீவர பயறு உற்பத்தித் திட்டம்:- தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் துவக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட பயறுவகை அபிவிருத்தித் திட்டமானது சிறந்த கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய, மண்வளம் மற்றும் மனித இன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வேளாண் திட்டங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மற்ற பயிர்களைப் போலின்றி உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களின் சாகுபடி மண் வளம் மற்றும் மக்களின் ஆரோகியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நலன் மற்றும் அவர்களின் கூடுதல் வருமானத்திற்கு இவை பெரிதும் வழி வகை செய்கின்றன.

சமீபகாலமாக பயறுவகைப் பயிர்களின் சாகுபடி மற்றும் வேளாண் அறிவியலின் நலன் கருதி இந்த ஆரோக்கியமான போக்கு தொடரப்பட வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயறுவகைப் பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதை சார்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் பயறுவகைகளுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பயறுவகைகளின் தேவை 2020 ஆம் ஆண்டு 28.8 மில்லியன் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது (சான்று : நடராஜன் மற்றும் சஞ்சீவ் குப்தா, இந்திய பயறுவகை ஆராய்ச்சி நிறுவனம், கான்பூர்). பயறுவகைகளின் தற்போதைய உற்பத்தி அளவு ஏறக்குறையை 18 - 19 மில்லயன் டன்னாக இருப்பதால், பயறுவகைகளின் உற்பத்திபற்றாக்குறையான 10 மில்லயன் டன்னை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் மட்டும் சரி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய அரசு மொசாம்பிக் மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து சுமார் 6.5 இலட்சம் டன் பயறுவகைகளை இறக்குமதி செய்ததாக தெரிவித்துள்ளது.

பயறுவகைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை கணிசமான அளவு குறைத்து, குறைப்பதன் வாயிலாக கிடைக்கும் நிதியைக் கொண்டு வேளாண் கருவிகள், தண்ணீர் விரையத்தை குறைக்கும் நீர்பாசன கருவிகளை வழங்கி உற்பத்தியைப் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கேற்ற பயறுவகை இரகங்கள், உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் அறிமுகப்படுத்துவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்கத்தின் பங்கு இன்றியமையாததாகும்.

பயறுவகைப் பயிர்கள் வளிமண்டல நைட்ரஜனை வேர்முடிச்சுகளில் நிலைப்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தைக் காப்பதோடு, மண்ணின் வடிவத்தையும் மேம்படுத்துகிறது. பயறுவகைப் பயிர்களின் ஆணிவேர் மண்ணைத் துளைத்து அதிக ஆழம் வரை செல்லவும், புரதச்சத்து நிறைந்த இலைகள் மண்ணின் கனிமச் சத்து மற்றும் மண்ணின் வடிவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பயறுவகைப் பயிர்கள் தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இவை சத்து நிறைந்த காய்கறியாகவும், தீவன பயிராகவும் பயிரிடப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் குறைந்;த பட்சம் ஒரு தனி நபர், நாள் ஒன்றுக்கு முறையே 80 கிராம் மற்றும் 47 கிராம் பயறுவகை உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் தனி நபர் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவே பயறுவகை உணவுகளை எடுத்து கொள்கின்றனர். அதாவது 30 - 35 கிராம் என்ற அளவிலேயே இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக முக்கியத்துவம் அளித்து, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் விரைவில் அனைத்து உழவர் பெருமக்களுக்கும் சென்றடைய வகை செய்துள்ளது. தீவிர பயறுவகை உற்பத்தித்திட்டம் தமிழக அரசினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் துவங்கப்பட்டுள்ளது.

2013 - 2014 ஆம் ஆண்டுன் புள்ளி விவரப்படி பரப்பு 8.15 இலட்சம்  எக்டராகவும், உற்பத்தி 6.13 இலட்சம் எக்டராகவும், உற்பத்தி திறன் எக்டருக்கு 752 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.  பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்திட தீவிர பயறுவகை வளர்ச்சித்திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண்மைத் துறையும் இணைந்து காவிரி டெல்டா மாவட்டங்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. மண் பரிசோதனை செய்தல், அதிக விளைச்சலை தரவல்ல ஏடீடி 3, ஏடீடி 5, வம்பன் 8 போன்ற உளுந்து இரகங்களை உழவர்களிடம் அறிமுகப்படுத்துதல் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு முறைகள் மற்றும் மண் பரிசோதனை போன்றவையும் வேளாண்மைத் துறையால் உறுதி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி முறைகளை அறிமுகம் செய்திட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண்மைத்துறையும் இணைந்து வயல்வெளிப் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகளின் முயற்சியால் உளுந்து விளைச்சல் 900 – 1000 கிலோ ஃ எக்டர் வரை பெறப்பட்டுள்ளது. முதன் முறையாக பயறுவகைப் பயிர்களைப் பயிர்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் சித்திரைப் பட்டத்தில் விதைக்க துவங்கியதன் காரணமாக சாகுபடிப்பரப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக விவசாயிகள் ஆனி மாத தொடக்கத்தில் காவிரி நீருக்காகக் காத்திருப்பார்கள். 
ஆனால் இந்த ஆண்டு தைப்பட்டத்திற்குப்பிறகு இரண்டாம் பயிரான பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்து பரப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னோடி விவசாயிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் டெல்டா மாவட்டங்களில் பயறு வகைப் பயிர்களின் சாகுபடி கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றனர். இதன் பயனாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். (தற்போதைய விலை ரூ.100 ஃ கிலோ). மேலும் மண் வளம் மேம்படுவதால், அடுத்த பட்டத்தில் நடப்படும் நெல்லுக்கு உர செலவு குறையும் என நம்பப்படுகின்றது. தாமதமான பாசன நீர் திறப்பினால் பயிர்ச்சுழற்சி முறையில் தைப்பட்டத்திலும், சித்திரைப்பட்டத்திலும் பயறுவகைப் பயிர்கள் மற்றும் சம்பா பட்டத்தில் நெல்லும் பயிரிடப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் பயறுவகைகளை தேர்ந்த சந்தையில் விற்பனை செய்து, விளைப்பொருட்களுக்கு சரியான விலையை உறுதி செய்தல், இந்தியாவில் நடப்பாண்டில் பயறுவகைகளின் விளைச்சல் குறைவால் பயறுவகைப்பயிர்களின் விலை மிகவும் அதிகரித்தது. பயறு வகைகளை கிலோவுக்கு ரூ.120 – க்கும் மேல் விற்பனை செய்யாமல் உறுதி செய்யுமாறும், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் மூலம் பதுக்கல்களை தடுத்து நிறுத்த முடிவெடுத்தது. இந்திய அரசு இந்த பற்றாக்குறையை சரி செய்ய 6.5 இலட்சம் டன் பயறுவகைகளை இறக்குமதி செய்தது.

ஆணையர் (NTSHZ விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) அவர்களின் ஆலோசனையை பெற்று தமிழ்நாட்டிலுள்ள ஒழுங்குமுறை சந்தைகளின் சேவையை பயன்படுத்தி பயறு வகைகளை விற்பனை செய்ய வேண்டும். TNCMF மற்றும் TCMF ஆகியவற்றின் கீழ் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் பயறுவகைப் பயிர்களை பதப்படுத்துதல், சேமித்தல் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சரியான முறையில் பதப்படுத்தி சந்தைப்படுத்தினால் கூட்டுறவு சங்கங்கள் நிச்சயம் பயன்பெறும்.

பயறு உற்பத்தியில் கீழ்க்காணும் பிரிவுகளில் கவனத்தை செலுத்துவது அவசியம்:- * மாநிலத்தின் சராசரி உற்பத்தியைக் காட்டிலும் அதிக அளவு உற்பத்தி செய்யக் கூடிய இடங்களைக் குறிக்கும் வரைபடம் தயாரித்தல் * சராசரியான விளைச்சலை காட்டிலும் குறைவான உற்பத்தி உள்ள பகுதிகளை கண்டறிந்து, மண்ணை சீரமைத்து, உரங்களை இட்டு மேம்படுத்துல்

 • உயிர் மூலக்கூறியல் சாதனங்களைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் விளைச்சல் நிலைப்புத் தன்மை போன்றவற்றிற்கான பயிர் பெருக்கம் செய்தல்
 • தமிழ்நாட்டில் தரமான விதைகளின் இருப்பினை உறுதி செய்தல் மற்றும் விதை பெருக்கம் செய்யும் வயல்களை கண்காணித்தல்.
 • மரபியல் இனங்களை மதிப்பீடு செய்து பராமரித்தல் 
 • ஒருங்கினைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை உருவாக்குதல் 
 • அறுவடை பின்சார் தொழில் நுட்பத்தை கடைபிடிப்பதன் வாயிலாக ஏற்படும் இழப்புகளை தவிர்க்க ஆராய்ச்சிகளை முனைப்பாக செயல்படுத்துதல்
 • குறிப்பிட்ட இரகங்களுக்கான சாகுபடிப் பகுதிகளை வரையருத்தல்

மொத்தத்தில் அறிவியல் பூர்வமான உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தின் திட்டம் வெற்றி கரமானதாகவும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்.

துவரையில் உயிர் விளைச்சல் இரகங்கள்:- புரதச்சத்து மிகுந்து பயறு வகைகள் நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் மிகவும் அவசியமானது. பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு தானியப் பயிர்களின் புரதத்தை ஒப்பிடுகையில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகும். பயறு வகைகளை உட்கொள்வதால் தானியப் பயிர்கள் மட்டும் சாப்படுவதால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம். தமிழ்நாட்டில் பயறுவகைகள் 90 விழுக்காட்டிற்கும் மேல் மானாவாரிப் பயிராக பயிரிடப்படுகிறது. இவற்றை பெரும்பாலும் ஆனி - ஆடிப் பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் பயிரிட்டாலும், நெல் தரிசில் பயிரிடப்படும் பயறு வகைகள் தை மற்றும் மாசி மாதங்களில் நெல் அறுவடைக்குப் பின் பயிர் செய்யப்பட்டு, பயறு உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கினை தமிழ்நாட்டில் ஆற்றி வருகிறது, நெல் தரிசில் பயிரிடப்படும் பயறு வகைகள் நெல் வயலில் மீதமுள்ள ஈரப்பதத்தினை பயன்படுத்தி பயறு உற்பத்திக்கு வழி வகுப்பதோடு தழைச் சத்தினை வயல்களில் அதிகரிக்கவும் உதவகிறது.

பயறு வகைகளில் துவரைப்பியிர் நம் தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான பயறுவகைப் பயிராகும். தமிழ்நாட்டில் 0.38 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.