பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

கார்பனேட்டட் வகை பானங்களில் இனிப்பும், கலோரியும் அதிகமாக இருக்கிறது. அவைகளே ஆரோக்கியத்தை சீர்குலைக்க முக்கிய காரணம். 12 அவுன்ஸ் அளவுள்ள குளிர்பானத்தில் கிட்டத்தட்ட பத்து தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரை அடங்கியிருக்கிறது. ஒருவர் தினமும் ஐந்து தேக்கரண்டி சர்க்கரையே பயன்படுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குளிர்பானங்களில் இருக்கும் ‘ஹை பிரக்டோஸ்கார்ன்’ என்ற ‘சிரப்’ பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனே உயர்த்திவிடும். ஒரு டின் குளிர்பானம் உடலுக்குள் செல்லும்போது ரத்தத்தில் உள்ள பிராக்டோசின் அளவு நான்கு மடங்கு அதிகரிக்கும். இதை சர்க்கரை நோய் இருப்பவர்கள் குடித்தால் மிகுந்த ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும்.

ஒரு டின் குளிர்பானத்தில் கிட்டத்தட்ட 150 கலோரி சக்தி இருக்கிறது. உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும்போது, அது கொழுப்பாக மாறி உடலிலே தங்கிவிடும். அது ‘நான் ஆல்கஹாலிக் பாற்றி லிவர்’ என்ற ஈரல் பாதிப்பை உருவாக்கும்.

குளிர்பானங்களில் ‘காபின்’ அடங்கியிருக்கிறது. இது, அதை குடித்த உடன் சக்தி தருவது போன்ற நிலையை உருவாக்கி, தொடர்ந்து அதனை குடிக்கும் அளவுக்கு அடிமையாக்கிவிடும். இதில் ருசி கண்டவர்கள் விடமுடியாமல் தவிப்பார்கள்.

காபின் அதிகமாக சிறுநீரை உருவாக்கும் சக்தி கொண்டது. குடித்த உடன் அது சக்தியை தருவது போன்று தோன்றினாலும் அதில் இருக்கும் தண்ணீர், சோடியம் போன்ற தாதுக்கள் சிறுநீர் வழியாக சிறிது நேரத்திலே வெளியேறிவிடும். சிறுநீர் கழித்ததும் அதிக தாகமும், சோர்வும் தோன்றும்.

குளிர்பானம் அவ்வப்போது பருகுகிறவர்களுக்கு வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் தோன்றும். பானம் இரைப்பையை அடையும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடுதான் இந்த வயிற்று தொந்தரவுகளுக்கு காரணம். அசிடிட்டி, புளித்த ஏப்பம் போன்ற தொந்தரவு இருப்பவர்கள் குளிர் பானங்களை பருகாமலே இருப்பது நல்லது.

பல்லையும், எலும்பையும்கூட குளிர்பானங்கள் பாதிக்கும். அதில் இருக்கும் அதிகபட்ச இனிப்பு பற்களை சேதமாக்கும். எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை பாதிக்கும் சக்தி இதற்கு இருப்பதால் எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற நோய்கள் தோன்றக்கூடும். அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு கிட்னியில் கல் ஏற்படும் பாதிப்பும் அதிகம்.

குளிர்பானங்களை குடிக்கும் ஆசை ஏற்படும்போது பழச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவைகளை பருகுங்கள். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.