பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தராஜன் பிறந்த தினம் (மார்ச் 24, 1923)

பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தராஜன் பிறந்த தினம் (மார்ச் 24, 1923)

40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் பாடிய பெருமைபெற்ற டி.எம்.சௌந்தரராஜன் 1923-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பிரபல வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாக கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவது தனது ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தில் ‘ராதே நீ என்னை விட்டு போகாதடி’ என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து ‘மந்திரி குமாரி’, ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. ‘தேவகி’ படத்தில் இவர் பாடி, நடிக்கவும் செய்திருந்தார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தனித்தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் படைத்தவர். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகக் கடவுள் மீது இவர் பாடிய ‘முத்தைத் திருபத்தித் திருநகை’ எனும் பாடல் முருக பக்தர்களால் இன்றளவும் மறக்க முடியாது.

இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கும் பாடியுள்ளார். இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சென்னையில் காலமானார். இவர் பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.