பழைய கார் மார்க்கெட் - டொயோட்டா இனோவா

பழைய கார் மார்க்கெட் - டொயோட்டா இனோவா

படங்கள்: ப.பிரியங்கா

 

\"\"

‘‘நான், என் மனைவி பிரதீபா, என் பொண்ணு அத்வைதா... சின்னக் குடும்பம்தான். ஆனா, வெளியூர்களுக்குப் போனா ‘யாரடி நீ மோகினி’ படத்துல வர்ற மாதிரி அம்மா, அப்பா, சித்தி, அத்தை, மாமா, பொண்டு பொடுசுங்கன்னு கூட்டுக்குடும்பமாதான் கிளம்புவோம். பட்ஜெட் ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டாம இருந்தா நல்லது. எம்யூவி அல்லது 7 சீட்டர் கார்தான் பார்க்குறேன்... எது வாங்கலாம்?’’ என்று நமது வாய்ஸ்-ஸ்நாப் (044-66802926) எண்ணுக்கு டயல் செய்திருந்தார், சென்னையைச் சேர்ந்த ஆதவன்.

பொலேரோ, ஸ்கார்ப்பியோ, ஸைலோ, இனோவா, எர்டிகா, XUV 5OO என்று லிஸ்ட் எடுத்து நீட்டியபோது, எந்த யோசனையும் இன்றி இனோவாவை டிக் அடித்தார் ஆதவன். ‘நல்ல ரீ-சேல் வேல்யூ இருக்கணும்... 7 சீட்டர்’ என்றதும், உடனடியாக இனோவாதானே நினைவுக்கு வரும். 

ஆதவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு இனோவாவைத் தேடிக் கிளம்பினோம். சினிமாவில் பழைய நடிகைகள், லேட்டஸ்ட்டாக அம்மா கெட்டப்பில் ஒரு ரவுண்டு வருவார்களே... அதுபோல், பழைய கார் மார்க்கெட்டிலும் இனோவாவுக்குச் செம கிராக்கி இருக்கிறது. ‘‘1.5 லட்சம்தான் ஓடியிருக்கு... ரெண்டாவது ஓனர்தான்’’ என்று விற்பனையாளர்கள் சொன்னதைக் காதில்கூட வாங்கிக் கொள்ளாமல், சில டாக்ஸி டிரைவர்கள் ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய்க்கு ஏதோ பெரிய ஆஃபர் கிடைத்ததுபோல் சந்தோஷமாக டெலிவரி எடுப்பதெல்லாம், இனோவா விஷயத்தில் மட்டும்தான் நடக்கும்.

‘‘OLX-ல் ஒரு விளம்பரம் பார்த்தேன். 87,000 கி.மீதான் ஓடியிருக்காம். 5.25 லட்சம் சொல்றாங்க... ஒரு தடவை போய்ப் பார்க்கலாமா?’’ என்றார் ஆதவன். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள அந்த வீட்டு முகவரிக்குச் சென்று, பழைய இனோவாவை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

\"\"

நமக்கு முன்னால் இருந்தது 2005 மாடல் இனோவா. ஆரம்ப வேரியன்ட் என்பதால், பவர் விண்டோஸ்கூட இல்லை. ‘‘அதான் இவ்வளவு விலை கம்மியா? எங்க அப்பாகூட சொன்னாரு... இனோவா அஞ்சு லட்சத்துக்கெல்லாம் கிடைக்காதுன்னு’’ என்றார் ஆதவனின் மனைவி பிரதீபா. பவர் விண்டோஸ் இல்லாததால், கைகளால் லீவரைச் சுற்றி கண்ணாடியை ஏற்ற வேண்டும் என்பதுபோக, வேகம் எடுக்கும்போது ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகும் ‘ஸ்பீடு சென்ஸிங் லாக்’ கிடையாது. நாம்தான் மேனுவலாக கதவுகளையும் லாக் செய்ய வேண்டும். எனவே, குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2005 மாடலுக்கு, 87,000 கி.மீ ஓடோ ரீடிங் என்பது இனோவாவுக்குக் குறைவுதான். ஆனால், ‘இரண்டாவது ஓனர்’ என்றார் காரின் உரிமையாளர். ‘‘12 வருஷத்துல ஏன் கம்மியா ஓடியிருக்கு... ஏன் விக்கிறீங்க... ஆக்ஸிடென்ட் எதுவும் ஆச்சா?’’ என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார் பிரதீபா. வேறு புது கார் வாங்க இருப்பதாக உரிமையாளர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, டெஸ்ட் டிரைவ் கிளம்பினோம்.

டீசல் என்பதால், பெரிய குலுங்கு குலுங்கி ஸ்டார்ட் ஆனதைத் தெரிவித்தது இனோவா. இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஆட்டோமேட்டிக் தவிர்த்து, இனோவாவில் அன்றும் இன்றும் மாறாத ஒரே விஷயம் - டீசல் இன்ஜின்தான். 2.5 லிட்டர், 4 சிலிண்டர். பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் வந்தது. எனவே, பின்னால் 2.0 என்று இருந்தால், அதை பெட்ரோல் எனக் கொள்க. 

மவுன்ட் பக்கம் ஒரு காலியான இடத்தில் வேகமாக இனோவாவை டெஸ்ட் செய்து பார்த்தார் ஆதவன். மேடு பள்ளங்களில், கூட்ட நெரிசலில் ‘சட் சட்’ என ஓவர்டேக்கிங் செய்து பார்த்தார். ‘‘பழைய கார் மாதிரியே தெரியலை. புது கார் ஓட்டற மாதிரியே இருக்கு.. இனோவாவுக்கு ஏன் டிமாண்ட்னு இப்போதான் புரியுது!’’ என்றார். இதற்குக் காரணம், இதன் 20.4 kgm டார்க் கொண்ட இன்ஜின். இனோவாவில் ஒரு சின்னக் குறையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது, பவர்!

\"\"

2,500 சிசி கொண்ட இந்த இன்ஜினுக்கு 100bhp பவர் என்பது ரொம்பக் குறைவுதான். ‘‘அப்படிப் பார்த்தா குவாலிஸ்ல இதைவிடக் குறைவுதானே... ஆனா, அது டிரைவிங்குக்கு செம ஜாலியா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்’’ என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஆதவன்.

நடுவில் காரை நிறுத்தி... சஸ்பென்ஷன், டயர், அண்டர் பாடி போன்ற விஷயங்களை குனிந்து, நிமிர்ந்து என்று சுற்றிச்சுற்றிப் பார்த்து சோதனை போட்டார் பிரதீபா. ‘‘முன் பக்க டயர்ல பின்னாடி இருக்கிற பட்டன் மட்டும் தேய்ஞ்சிருக்கே?’’ என்று சந்தேகித்தார். இதற்குக் காரணம், சில கார்களில் டயர்கள் ஓரளவு ஓடிய பிறகு, அவற்றை ஃப்ளிப் செய்து மாற்றிப் பொருத்துவது வழக்கம். 15 இன்ச் சின்ன டயர்கள், சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதால், சில ஸ்பீடு பிரேக்கர்களில் மேலும் கீழும் தூக்கிப் போட்டதைச் சுட்டிக்காட்டியும் சந்தேகம் கேட்டார் பிரதீபா. \"என்னங்க... வெள்ளத்துல மூழ்கலைங்கிறதை கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க\" என்று கணவருக்கு ஆர்டரும் போட்டார். 

இனோவா பெரிய காராக இருந்தாலும், 5.4 மீட்டர்தான் டர்னிங் ரேடியஸ் என்பதால், இதை வளைத்துத் திருப்ப ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை. சில செடான் கார்களில்கூட இனோவாவைவிட டர்னிங் ரேடியஸ் அதிகம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

\"\"

சாதாரண அடைசலான தெருக்களில்கூட இனோவாவை லாகவமாக பலர் கையாள்வதைப் பார்த்திருப்பீர்கள். அதனால்தான் சிட்டிக்கு யூஸர் ஃப்ரெண்ட்லியாகவும், நெடுஞ்சாலைகளில் ஃபேமிலி ஃப்ரெண்டாகவும் வெரைட்டி காட்டுகிறது இனோவா.பழைய இனோவா என்பதால், இதில் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் முதற்கொண்டு சீட் அட்ஜஸ்ட் வரை எல்லாமே ஹைட்ராலிக் சிஸ்டம்தான். 

மைலேஜ் பற்றி விசாரித்தபோது, சிட்டியில் 11 முதல் 12-கி.மீ-யும், நெடுஞ்சாலைகளில் 13 முதல் 14 கி.மீ வரையும் தருவதாகச் சொன்னார் இதன் உரிமையாளர். என்னதான் மார்க்கெட்டில் பீக்காக இருந்தாலும், ஆரம்பக் காலங்களில் இனோவா வாடிக்கையாளர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தது, இதன் பராமரிப்புச் செலவுதான். பிராண்ட் வேல்யூ காரணமாகவோ என்னவோ, ஆரம்ப இனோவாக்களுக்கு உதிரிபாகங்களின் விலை அதிகமாக இருந்துவந்தது. இப்போது, பெங்களூரின் பிடதியில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையிலேயே அனைத்தும் தயாரிக்கப்படுவதால், பராமரிப்புச் செலவு பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. 

வாசகர்கள் தீர்ப்பு

‘‘லோ பட்ஜெட்டில் ஒரு பெரிய எம்யூவி என்பது மிகப் பெரிய ப்ளஸ். இனோவாவில் சென்றாலே ஒரு கெத்துதான். ஆனால், டிஸைன்தான் கொஞ்சம் பழசாக இருக்கிறது. இதன் டிரைவிங் கம்ஃபர்ட்டும், ரைடிங் அனுபவமும் வேறு எந்த காரிலும் கிடைக்காது. ஆனால், குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் போக வேண்டும் என்பதால், குறைந்தது ரிமோட் லாக்கிங் மற்றும் ABS பிரேக்ஸாவது எதிர்பார்க்கிறோம். அதிகமாக 50,000 செலவானாலும் பரவாயில்லை. இந்த இரண்டும் எங்களுக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றன. ஆனால், எங்கள் சாய்ஸ் இனோவாதான்; இதில் மாற்றுக் கருத்து இல்லை!’’

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.