பார்வைத் திறனை மேம்படுத்தும் திராதகா பயிற்சி..!

பார்வைத் திறனை மேம்படுத்தும் திராதகா பயிற்சி..!

`ண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்றார் வள்ளுவர். அதையே ’கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சுக் கலப்பில் காதல்தான் கருவாச்சு’ என்றார்கள் நம் திரைப் பாடலாசிரியர்கள். கண்கள்தான் உலகின் அத்தனை அழகையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. வாயால் சொல்லிவிடமுடியாத உணர்வுகளைக்கூடக் கண்கள் எளிதில் வெளிப்படுத்திவிடும். அதனால்தான் கண்ணுக்கும் மூளைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

\"திராதகா\" 

தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாக ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்ணுக்கும் மூளைக்குமான தொடர்பு ஆரம்பித்து விடுகிறது. கருத்தரித்த இரண்டு வாரங்களுக்குள் கண்கள் வளர ஆரம்பிக்கின்றன. பார்வை நரம்பும், விழித்திரையும் மூளையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. விழித்திரை என்பது உண்மையில் மூளையின் ஒரு பகுதிதான். எனவே மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் பயிற்சிகள் கண்களுக்கு நன்மை செய்பவையாக உள்ளன. 

\"கண்கள்\" 

பினியல் சுரப்பி (Pineal gland) என்பது நமது மூளையின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மிகச்சிறிய சுரப்பி. உடலின் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது இது நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. இது மூன்றாவது கண் என்றும் சொல்லப்படுகிறது. பினியல் சுரப்பியிலிருந்து சுரக்கும் மெலட்டோனின் (Melatonin) ஹார்மோன் தூக்கத்தை வரவழைப்பது, தூக்கத்திலிருந்து எழுப்புவது என நமது உறக்க சுழற்சியைக் கையாள்கிறது. பிரான்ஸ் மெய்யியல் அறிஞர் ரெனே டேக்கார்ட் (Rene Descartes) பினியல் சுரப்பியை ‘ஆன்மா அமர்ந்திருக்கும் இருக்கை’ என்கிறார். இந்திய மெய்ஞ்ஞான முறைகளில் மூன்றாவது கண், ஞானத்தை அடையும் வழியாகக் கருதப்படுகிறது. மூன்றாவது கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்த திராதகா (Trataka) என்ற யோக முறை பின்பற்றப்படுகிறது. கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியில் அழுத்தத்தை உணரும் தியானமாகவும் இது செய்யப்படுகிறது. ஒரு மிகச்சிறிய பொருளை, கருப்புப் புள்ளியை, மெழுகுவர்த்திச் சுடரை கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல், கண்களை இமைக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்ப்பதுவே திராதகா யோக முறையாகும். திராதகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய நமது கண் பார்வை தெளிவாகும். அது மட்டுமல்லாமல் இது பினியல் சுரப்பிச் சார்ந்த பயிற்சி என்பதால் தூக்கமின்மை, மனஅழுத்தம், கவனக்குறைவு போன்றவற்றுக்கும் தீர்வு தரும். 

திராதகா பயிற்சிகள் 

மிக எளிதில் செய்யக்கூடிய சில திராதகா பயிற்சிகளைப் பார்ப்போம்.. 

மலர் :

\"மலர்\"

உள்ளங்கையில் பாதி அளவு இருக்கக்கூடிய ஒரு மலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதைக் கண் இமைக்காமல் சில நிமிடங்கள் உற்றுப்பார்க்க வேண்டும். மிகவும் வெளிச்சமான அறையில் இந்தப் பயிற்சியைச் செய்யும்போது சிவப்பு, ஊதா போன்ற அடர் நிறத்தில் உள்ள மலரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் மஞ்சள், வெண்மை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

புகைப்படம் :
கடவுள் அல்லது உங்களுக்குப் பிடித்த, தெய்வத்தன்மை உடைய ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு புகைப்படத்தில் உள்ள முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாப் பகுதிகளையும் மறைத்து விடவும். இந்தப் புகைப்படத்தை உங்கள் கண்களிலிருந்து இரண்டு அடி தூரத்துக்கு அப்பால் வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் இந்தப் புகைப்படத்தைச் சில நிமிடங்கள் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ந்து செய்யக் கண்பார்வை தெளிவாகும். 

மெழுகுவர்த்திச் சுடர் :
 

\"மெழுகுவர்த்தி\"

இருட்டு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் ஐந்து முதல் பத்து நிமிடத்துக்கு இதைப் பார்க்கவேண்டும். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த பயிற்சி. ஒருநாள் கூட இடைவெளி விடாமல் காலை, மாலை என இரு வேளையும் இதைச் செய்யவேண்டும். கண்புரை, கிட்டப்பார்வை, வலிப்பு உடையவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யக்கூடாது. 

இருட்டு அறை :

இருட்டான அறையில் அமர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடத்துக்குக் கண்களை இமைக்காமல் இருளைப் பார்க்கவேண்டும். 

வானம் :

நீல நிறத்தில் பரந்து விரிந்திருக்கும் வானத்தை வைத்த கண் மாறாமல், கண் இமைக்காமல் பார்க்கவேண்டும். 

வெற்றிலை :

ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் வட்டமாகக் கறுப்பு மையைப் பூசிக்கொள்ள வேண்டும். அந்த இலையை ஒரு அட்டையில் ஒட்டி வைக்க வேண்டும். கண்களிலிருந்து இரண்டு அடிக்கு அப்பால் இதை வைத்துக்கொண்டு கண் இமைக்காமல் ஐந்து நிமிடத்துக்கு இதை உற்றுப்பார்க்க வேண்டும். 

ஊசி :

சுவற்றில் ஒரு நூலைக் கட்டி அதில் ஊசியைத் தொங்கவிட வேண்டும். வேறு எங்கும் கவனத்தைச் சிதறவிடாமல், கண் இமைக்காமல் ஊசியைச் சில நிமிடங்களுக்கு உற்றுப்பார்க்க வேண்டும். 

மூக்கின் முனை :

மூக்கின் முனையை உற்றுப்பார்ப்பது, புருவத்துக்கு இடைப்பட்ட இடத்தை உற்றுப்பார்ப்பது ஆகியவையும் கண் பார்வையைத் தெளிவாக்கும். 

இந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது கண்களை இமைக்கவோ, உருட்டவோ கூடாது. ஆனால் கண்களை இமைக்கக்கூடாது என்பதற்காகக் கண்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது. பயிற்சியின் தொடக்க நிலையில் பத்து நொடிகள் கண்களை இமைக்காமல் இருந்தால்கூடப் போதுமானது. தொடர் பயிற்சியின் மூலம் இந்தக் கால அளவை அதிகரிக்க முடியும். யோக ஆசிரியரிடம் உரிய பயிற்சி பெறாதவர்கள், பத்து நிமிடங்களுக்கு மேல் இதைச் செய்ய முயற்சிக்க வேண்டாம். இது எளிய பயிற்சி என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் பலன்கள் கிடைக்கும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.