பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அந்த 30 கேமராக்களின் ஜாதகம் இதுதான்!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அந்த 30 கேமராக்களின் ஜாதகம் இதுதான்!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 11 (இன்னைக்கு யாரும் எகிறி குதிக்கலையே) பேருக்கு அடுத்து, அதிகம் கவனம் ஈர்த்திருப்பவை அங்கிருக்கும் கேமராக்கள்தான்.ஓவியாவெல்லாம், ஆரவ்வுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசுவது இந்தக் கேமராக்களிடம் தான் (3 நாள் முந்தைய நிலவரப்படி). ”அது எப்படி தானா திரும்பும்?”, ”இவ்ளோ நல்லா ஸூம் ஆகுமா?”, “இதப் பார்த்தா கேமரா மாதிரியே தெரியல” என சோஷியல் மீடியாக்களிலும் ஏகப்பட்ட சந்தேகங்கள். அது என்ன கேமரா என பிக்பாஸ் நிகழ்ச்சியின் டெக்னிக்கல் டீமிடமே கேட்டோம்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டு வகையான கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று, Sony - H900, இன்னொன்று Sony H 800.
இதை பேன் அண்ட் டில்ட் (Pan and Tilt) வகை கேமராக்கள் என்கிறார்கள். இவற்றை ரிமோட் மூலம் பேன் செய்யலாம். டில்ட் செய்யலாம். மற்றும் ஸூம் செய்யலாம் என்பதால் இந்தப் பெயர். டில்ட் என்றால் மின்னல் வேகத்தில் இது திரும்பும். இவற்றின் விலை... நம்புங்கள் 9 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். ஒரு கேமராவின் விலை இது. பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 

சுவரில், சீலிங்கில், ஜன்னலில் என எங்கு வேண்டுமென்றாலும் இந்த கேமராக்களை எளிதில் பொருத்த முடியும். ட்ரைபாடில் பொருத்தியும் வைக்கலாம். பிக் பாஸ் வீட்டில் டைனிங் டேபிளில் கூட பொருத்தியிருக்கிறார்கள். 360 டிகிரியிலும் சும்மா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது கேமரா. லைவ் செய்வதற்கு ஏதுவாக இதன் சாஃப்ட்வேர் மற்றும் கண்ட்ரோலர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிறது சோனி நிறுவனம். கொஞ்சம் கூட சத்தமே வராமல் இது நகரும். அங்கு இருப்பவர்களுக்கு கேமராவின் நகர்வு எந்த உறுத்தலையும் ஏற்படுத்தாது. சின்ன சத்தம் கூட எழுப்பாத சைலன்ட் கில்லி இந்த கேமராக்கள்.

\"கேமரா\"

இதன் 14X optical Zoom , போதுமான தூரம் வரை ஸூம் செய்து, தரமான வீடியோவை படம் பிடித்துவிடும். 1080 மற்றும் 720 பிக்ஸல் ஹெச்.டி வீடியோக்கள் கியாரண்டி. குறைந்த வெளிச்சத்திலும் குறையின்றி படம் பிடிக்க இந்த கேமராவால் முடியும். இதை வீட்டுக்கு வெளியே இருக்கும் கண்ட்ரோல் அறையில் இருந்தே ரிமோட் மூலம் இயக்கலாம்.

இந்தக் கேமராக்களுக்கென இருக்கும் கண்ட்ரோலர் மூலம் 7 கேமராக்களை ஒருங்கிணைத்து இயக்க முடியும். ஒரே ஒரு க்ளிக் மூலம் விரும்பிய கேமராவை, விரும்பிய இடத்துக்கு ஃபோகஸ் செய்ய வைக்கலாம். ஒரே வினாடியில் 60 டிகிரி வரை இந்தக் கேமராவால் ஸ்மூத் ஆக திரும்ப முடியும்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு கேமராவுக்கும் 16 ப்ரிசெட்களை செட் செய்து வைக்கலாம். அதாவது, ஒவ்வொரு கேமராவும் 16 ஆங்கிள்களில் படம் பிடிக்கும். அப்படியென்றால், 30 கேமராக்களுக்கு எத்தனை ஆங்கிள்கள் கிடைக்கும் என கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். இந்த வசதிகளையும், விலையையும் பார்த்தால் பிக் பாஸ் வீட்டின் ரியல் பிக் பாஸ் இந்தக் கேமராக்கள் தான் என்று தோன்றுகிறது.

கூகுள் வோட்டிங் முறையை அறிமுகப்படுத்தி டெக்னிக்கலாக ”கொஞ்சம் மேல போகலாம்” என்ற பிக்பாஸ், கேமரா மூலம் இன்னொரு ஜம்ப் அடித்திருக்கிறார்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.