பேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்பு வரை... ஆன்லைன் சதுரங்க வேட்டை... உஷார்!

பேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்பு வரை... ஆன்லைன் சதுரங்க வேட்டை... உஷார்!

பேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்பு வரை... ஆன்லைன் சதுரங்க வேட்டை... உஷார்!

 ர.சீனிவாசன்
 

\"ஆன்லைன்

எந்தக் கடைக்குச் சென்றாலும், கார்டுகள் ‘சரக் சரக்கென்று’ ஸ்வைப் செய்யப்படும் ஓசைகள் கேட்காமல் இருப்பதில்லை. டிஜிட்டல் இந்தியாவில் ’எல்லாமே ஆன்லைன்டா, அனைத்து பண பரிமாற்றங்களும் மிகவும் பாதுகாப்பானதுடா’ என்று மார்த்தட்டி கொள்ளும் நாம், அதிலும் எவ்வளவு நூதனமாகத் திருடர்கள் சதுரங்கவேட்டை ஆடுகிறார்கள், மோசடி செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல், அவ்வப்போது மாட்டிக் கொண்டு விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு கதை சொல்லட்டா சார்? இது வேதா, விக்ரமிற்கு சொல்லும் கதை அல்ல. நிஜத்தில் நடந்த கதை. பவித்ரா என்ற அந்தப் பெண்  OLX இணையதளத்தில் தன் பொருள் ஒன்றை விற்க முயன்றிருக்கிறார். அது ஒரு ஸ்ட்ரோலர் (Stroller), குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லப் பயன்படுவது. நல்ல நிலையில் இருக்கும் பொருள் என்பதால் 3500 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறார். இரண்டு மாதங்கள் ஆகியும் ஒருவரும் அந்த விளம்பரத்தை சீண்டக் காணோம். அப்படி ஒரு பதிவு போடப்பட்டதையே அவரும் மறந்து போயிருந்தார். 

\"ஆன்லைன்

திடீரென OLX இணையதளத்தின் மெசஞ்சரில் விஷால் என்ற பெயருடன் ஒருவர் சாட் செய்கிறார். அந்த ஸ்ட்ரோலர் இப்போது இருந்தால் வாங்கத் தயார் எனவும், பூனாவில் வசிக்கும் தன் தங்கைக்குப் பரிசாக அளிக்கவிருப்பதாகத் தெரிவிக்கிறார். பவித்ராவும் இருப்பதாகக் கூற ஆன்லைனில் அக்கௌன்ட்டிற்கு பணத்தைப் போட்டு விடுவதாகத் தெரிவிக்கிறார் விஷால். அக்கௌன்ட் நம்பரை வாட்ஸ்ஆப் மூலம் பகிரச் சொல்கிறார். 3 நிமிடத்திலேயே பவித்ராவின் நம்பருக்கு ‘59444’ என்ற எண்ணிலிருந்து அவரின் அக்கௌன்ட்டிற்கு 13,500 ரூபாய் வந்திருப்பதாகக் குறுஞ்செய்தி ஒன்று வருகிறது. இது என்னடா 3,500 ரூபாய்க்கு 13,500 ரூபாய் வந்திருக்கிறதே என்று நினைத்து பவித்ரா விஷாலிடம் வாட்ஸ்ஆப்பில் கேட்க, தவறுதலாக ட்ரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும், 10,000 ரூபாயைத் திரும்ப தனக்கு PayTM மூலம் தருமாறு கேட்டுக் கொள்கிறார். தன் தாயார் மருத்துவமனையில் இருப்பதாகவும், சீக்கிரமே ட்ரான்ஸ்பர் செய்யுமாறு கேட்கிறார். அங்கே தான் உஷார் ஆகியிருக்கிறார் பவித்ரா! 

\"ஆன்லைன்

குறுஞ்செய்தியை நம்பாமல், ஆன்லைனில் தன் அக்கௌன்ட்டை பார்த்தபோது பணம் எதுவும் ஏறவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். தன் வங்கிக்குப் போன் செய்து பேசியபோது, அவர்கள் 2,3 நிமிடங்களில் யாராலும் ஒரு புது அக்கௌன்ட்டிற்கு பண பரிமாற்றம் நிகழ்த்த முடியாது என்றும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஆகும் என்று கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே விஷால் மிகவும் அவசரம் 10,000 இப்போதே வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கியிருந்தார். பவித்ரா உடனே விஷாலிற்கு போன் செய்து தன் அக்கௌன்ட்டிற்கு பணம் எதுவும் வரவில்லை எனவும், எந்த வங்கியிலிருந்து பணமாற்றம் நிகழ்ந்தது என்று விசாரிக்கத் தொடங்க, பவித்ரா உஷாராகிவிட்டதை உணர்ந்த விஷால் தொடர்பை துண்டித்து விடுகிறார். கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் 10,000 ரூபாயை இழந்திருப்பார் பவித்ரா. 

\"ஆன்லைன்

மற்றோரு கதை இன்னும் கொடுமையானது. சென்ற வருடம் PayTM நிறுவனத்தில் 10 லட்சம் வரை மோசடி நடந்தது. சிபிஐ 22 தனி மனிதர்களின் மேல் மோசடி வழக்கு ஒன்றைப் பதிவு செய்கிறது. PayTM நிறுவனத்தின் தலைமை நிறுவனமான One97Communications Limited தான் புகார் அளித்துள்ளது. தன் கணக்கில் 10 லட்சம் வரை மோசடி நடத்திருப்பதாவாகவும், தன் வாடிக்கையாளர்களில் பலர் பொருள் தரமான முறையில் வந்தடைந்தாலும், பலமுறை பணத்தை திரும்பப் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுபோல் மொத்தம் 48 முறை தவறுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதன் மதிப்பு 10 லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டது. பிறகு நடந்த கிடிக்குப்பிடி விசாரணையில் தான் தெரியவந்தது ஒரு அடடே மோசடி! 

\"ஆன்லைன்

பொருள்கள் நல்லமுறையில் சென்றடைந்தாலும், வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்பக் கேட்காத போதும், அவர்களின் user ID மற்றும் இதர டேட்டாபேஸ்களை வைத்து பணத்தை கபளீகரம் செய்திருப்பது PayTM நிறுவனத்தின் பணியாளர்களே தானாம்! அவர்களே புகாரும் அளித்து, வெறும் 5 நிமிடத்தில், பணத்தையும் திருப்பி அளித்துவிட்டதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். அப்படிப் பணம் திரும்பிச் சென்ற அக்கௌன்ட்கள் அனைத்தும் அந்தப் பணியாளர்களுடையதாகவும் அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களின் அக்கௌன்ட்களாகவும் இருந்துள்ளது. இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தபின், PayTM நிறுவனம் தன் பணியாளர்களை இப்போது தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்த இரண்டு சம்பவங்களும் உதாரணங்கள்தான். இன்னும் இன்னும் ஏராளமான வழிகளை இந்த ஆன்லைன் சதுரங்க வேட்டையை நடத்துப்பவர்கள் யோசித்திருக்கலாம். 

என்னதான் நாம் டெக்னாலஜி மூலம், பாதுகாப்பைப் பலப்படுத்தினாலும், திருட நினைப்பவர்கள் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டு ஓடி விடுகிறார்கள். எனவே, ஆன்லைனில் ஏதாவது பணப் பரிமாற்றம் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுங்கள்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.