பொது வைபை பயன்பாடு: ஸ்மார்ட்போன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என தகவல்

பொது வைபை பயன்பாடு: ஸ்மார்ட்போன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என தகவல்

இந்தியாவில் இப்போது ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் அரசே இலவச வை-பை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இதில், இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்தி வை-பையை பயன்படுத்தி கொள்ளும் வசதிகளும் உள்ளன. இதுபோல் ஓட்டல்களிலும் இலவச வை-பை வசதிகள் வழங்குகிறார்கள்.

ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் இந்த வசதிகள் மூலம் இணையதள இணைப்பை பெற்று அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் செய்து கொள்ளலாம். சமூக வலைதளங்களை பார்வையிடுதல், வங்கி கணக்கு போன்றவற்றை தொடர்பு கொண்டு பண பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

ஆனால், பொது வை-பையில் இந்த வசதியை பெற்று பயன்படுத்தினால் போனில் உள்ள தகவல்கள் திருட்டு போகும் ஆபத்து அதிகம் இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் அவசர பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து மேத்தி வேன் காப் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.அதில், இந்த போன்களில் உள்ள தொழில்நுட்பம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. எனவே, இதில் எளிதாக தகவல்களை திருட முடியும் என்று தெரிய வந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில் WPA, WPA-2 ஆகிய வைபை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை எளிதாக மற்றவர்கள் திருடும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் ஐ.ஓ.எஸ்., லினக்ஸ், மேக் ஓ.எஸ்., விண்டோஸ் தொழில்நுட்பத்திலும் இது போன்ற குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை வைத்து தான் ரெயில் நிலையம், விமான நிலையம் போன்றவற்றில் பொது வைபையை பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை செய்தால் தகவல்கள் திருட்டு போகும் ஆபத்து இருப்பதாக இந்திய அவசர கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறு பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு ரகசியங்கள், மற்றவற்றுக்கு பயன்படுத்தும் ரகசிய வார்த்தைகள், இ-மெயில் விவரங்கள், சாட்டிங் மூலம் பேசுதல் போன்ற அனைத்து விவரங்களும் திருடப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

இது சம்பந்தமாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் ராம் ஸ்வரூட் கூறும் போது, தற்போது நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் போன்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் 41 சதவீத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வைபை தொடர்பு பாதுகாப்பற்றதாக இருக்கிறது. எனவே, பொது வைபை பயன்படுத்தும் போது இவ்வாறான தகவல்கள் எளிதாக திருடப்படலாம் என்றும் கூறினார்.மற்றொரு நிபுணர் கூறும்போது, பொது வைபை தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் போது, மற்றவர்களும் எளிதாக அதற்குள் புகுந்து நமது போன் தொடர்பை கைப்பற்றி கொள்வார்கள். இதன் மூலம் இதில் உள்ள அனைத்து தகவல்களையும் அவர்கள் பார்க்க முடியும் என்று கூறினார்.

வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் வைபையும் கூட சரியான பாதுகாப்பு இல்லாமலேயே இருக்கிறது என்றும் அந்த நிபுணர் தெரிவித்தார். வைபையை ஆன் செய்திருக்கும் போது அதன் அருகில் உள்ள வெளியாட்கள் அந்த தொடர்பை எளிதாக கைப்பற்றி கொள்ள முடியும். நாம் எந்த ரகசிய குறியீடுகள் கொடுத்து இருந்தாலும் அதை முறியடித்து உள்ளே நுழைவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.

இதன் மூலம் நாம் வீட்டில் இருந்து போன், லேப்டாப் ஆகியவற்றை இயக்கும் போது, நாம் என்ன புரோவுசிங் செய்கிறோம் என்பதை அவர்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது போனிலோ இருந்து முழுமையாக பார்க்க முடியும். இதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன என்று கூறினார். அதே நேரத்தில் வைபையை பயன்படுத்தாமல் நேரடியான வயர் இணைப்புகள் மூலம் பிரவுசிங் செய்தால் அதை திருட முடியாது என்றும் அவர் கூறினார்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.