மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம்

மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம்

இன்றைக்கு நம்மை கடிகாரம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் அலாரம் வைத்து எழுகிறோம். கடிகாரத்தில் ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டே கடகடவென்று காலை வேலைகளை முடிக்கிறோம், படபடவென்று கிளம்பி பணிக்கு ஓடுகிறோம்.

வெளிக் கடிகாரம் காட்டும் நேரத்துக்கு இப்படி அனுதினமும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் ‘கடிகாரத்துக்கு’ எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்?

அறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளிலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் கூட்டம் குவிகிறது. அதற்கு என்ன காரணம்?

நாம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்துடனும், உலகத்துடனும் ஒத்திணைந்து செயல்படுவதில்லை என்பதுதான் அதற்கான உண்மைக் காரணம். வெளிக் கடிகாரத்துக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கும் நாம், நம்முள்ளே ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்க்கேடியன் கிளாக்’ என்ற உள்கடிகாரத்தைக் கண்டுகொள்வதில்லை.

நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும், 24 மணி நேர உயிர்க்கடிகாரமே சர்க்கேடியன் கடிகாரம். இந்தக் கடிகாரம் உருவாக்கும் ‘சர்க்கேடியன் ரிதம்’, நம்மை சுற்றியுள்ள வெளிச்சம், இருட்டுக்கு ஏற்பச் செயல்படும். சூழல் இருளும்போது நாம் தூக்கத்துக்குத் தயாராவதும், வெளிச்சம் பிறக்கும்போது விழிப்படைவதும் இந்த சர்க்கேடியன் ரிதத்தால்தான்.

குறிப்பிட்ட புரத மூலக்கூறுகளால் செயல்படும் சர்க்கேடியன் கடிகாரம், நம் உடம்பு செல்களுடன் தொடர்புகொள்கிறது. இந்தக் கடிகாரம் மனிதர்களாகிய நமக்குள் மட்டும் இயங்கவில்லை. விலங்குகள், தாவரங்கள், ஏன், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிலும் கூட இது செயல்படுகிறது.

இன்னும் ஆச்சரியமான விஷயம், நம் உடம்பில் உள்ள ஒவ்வோர் உறுப்பின் ஒவ்வொரு செல்லும் அது அதற்கு என்று தனித்தனி சர்க்கேடியன் கடிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. அவை முறையாகச் செயல்பட, நாம் தினமும் போதுமான அளவு உறங்குவது அவசியம்.

ஒருநாள் தவறவிட்ட தூக்கத்தை நாம் அடுத்தடுத்த நாட்களில் கூடுதலாக உறங்கிச் சரிகட்ட முடியாது. நம் உடம்பு அப்படிச் செயல் படுவதில்லை.

சரி, அப்படியானால் நமது சர்க்கேடியன் கடிகாரத் தையும் நமது உடம்பையும் சரியாகக் காத்துக்கொள்வது எப்படி?

பொதுவாக, தூக்கம் என்பது என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். தூக்கம் என்பது உடலில் கழிவுகளை அகற்றுவதற்கான, எலும்பு வளர்ச்சிக்கான, ஹார்மோன் எனப்படும் இயக்குநீர் அளவுகளைச் சமப்படுத்துவதற்கான, புத்துயிர்ப்புக்கான நேரம். அதனால்தான் இரவு நன்றாகத் தூங்கி விழித்தபிறகு நாம் உற்சாகமாக இருக்கிறோம்.

உறக்கம் என்ற ஓய்வுநேரத்தின் மூலம், மேற்குறிப்பிட்ட வேலைகளை முடித்துவிட்ட உடம்பு, ஒரு புதிய நாளை எதிர்கொள்ள புத்துணர்வோடு தயாராகிறது.

ஓரளவு உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றியபிறகும் தங்கள் உடல் எடை குறையவில்லை என்பது பலரின் குறைபாடு. அவர்கள் உணவைக் குறைத்தாலும், அதைச் சாப்பிடும் நேரத்தை ஒழுங்குமுறைப்படுத்தி இருக்க மாட்டார்கள். நாம் எந்த நேரத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நாம் உட்கொள்ளும் பல உணவுகள் நமது சர்க்கேடியன் கடிகாரத்தில் குறுக்கிடலாம்.

உதாரணமாக, ஒரு நாளை ‘உற்சாகத்தோடு’ ஆரம்பிக்க எனக்கு காலையில் அவசியம் காபி வேணும் என்பவரா நீங்கள்?

நீங்கள் காபி அருந்தியபின் உற்சாகமாக உணர்வது உண்மைதான். ஆனால் அது காபி உங்களுக்கு வழங்கும் உற்சாகத்தால் அல்ல. காபியில், ‘காபீன்’ என்ற தூண்டும் வேதிப்பொருள் இருக்கிறது. காபி அருந்தும்போது காபீன் நமது அட்ரினல் சுரப்பிகளைத் தட்டி எழுப்பி ‘கார்ட்டிசோல்’ என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்தக் கார்ட்டிசோல்தான் ஒரு செயற்கை உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் நமது உடம்புக்கு, தூங்கும் வேளை எனும் எட்டு மணி நேர உண்ணா விரத்துக்குப் பின் தேவைப்படுவது ஊட்டச்சத்துதான். அதுதான் நமது ‘மெட்டபாலிக் ஆக்ஷன்’ எனப்படும் உடற்செயலியலைத் தொடங்க அவசியமானது.

ஒரு கப் காபி நமக்கு விழிப்பான உணர்வைத் தரலாம். ஆனால் அது நம் உடற்செயலியலைத் தொடங்க உதவாது, நமது சர்க்கேடியன் கடிகாரத்தின் சீரான செயல்பாட்டைச் சீர்குலைக்கும்.

நமது வெளிச்செயல்பாடுகளும், நம் உள்கடிகாரமும் ஒத்திசைந்து போவது அவசியம். அதாவது, காலை உணவு 8 மணிக்கு, 1 மணிக்குள்ளாக மதிய உணவு, மாலை 4.30 மணிக்கு சிறு நொறுக்குத் தீனி, இரவு 7 மணிக்கு இரவு உணவு என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும். ‘பாஸ்ட்’ எனப்படும் உண்ணாவிரதத்தை முறிப்ப தால்தான் காலை உணவை ‘பிரேக் பாஸ்ட்’ என்கிறோம். அதனால் காலை உணவு சத்துகள் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

நண்பகல் வேளையில் நமது உடற்செயலியல் உச்சத்தில் இருக்கும். எனவே மதிய உணவை நண்பகலுக்கு எவ்வளவு நெருக்கமாக வைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

இரவு உணவு வரை சமாளிக்கக்கூடிய வகையில், மாலை 4.30 மணிக்கு பழங்கள், கொட்டைப்பருப்புகள் என்று கொஞ்சம்போல கொறிக்கலாம்.

இரவு உணவை 7 மணியளவில் முடித்துவிடுவதே நல்லது. அதிலும் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த நேர விஷயத்தை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். காரணம், ‘தெர்மோஜெனிசிஸ்’ எனப்படும், கொழுப்பு களையும் கார்போஹைட்ரேட்டையும் உடைக்கும் உடம் பின் திறன், இரவு செல்லச் செல்ல குறையத் தொடங்கு கிறது.

நம் உடல் கடிகாரத்தைப் புரிந்துகொண்டு, அதனுடன் ஒத்திணைந்து செயல்பட்டால் எந்நாளும் சுகமே என்கிறார்கள், ஊட்டச்சத்து, உடற்செயலியல் நிபுணர்கள்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.