மருத்துவத்திலும் வந்துவிட்டது டாட்டூ

மருத்துவத்திலும் வந்துவிட்டது டாட்டூ

சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், நிற வேறுபாடுகள், புருவத்தில், தாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி உதிர்ந்து புழுவெட்டாக, சொட்டையாகத் தெரிவது அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் தழும்புகள் போன்றவை எப்போதும் தொல்லை கொடுக்கும் பிரச்சினைகள்தான். இதனால் சிலர் வெளியே வந்து மற்ற மனிதர்களுடன் பேசவே தயங்குவார்கள். இவர்களின் இந்தச் சங்கடங்களுக்கான தீர்வுதான் இந்த மெடிக்கல் டாட்டூ!

மெடிக்கல் டாட்டூ என்பது ஒருவித மேக்கப் போன்றதுதான். தொற்று, சருமம் நிறம் மாறுதல், தீப்புண் தழும்புகள் போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துச் சரி செய்வார்கள். கிரீம் தொடங்கி பலவகை சிகிச்சைகள் அளிக்கப்படும். பலருக்கு இதிலேயே பிரச்சினை முழுவதும் சரியாகி விடும். வெகு சிலருக்கு மட்டும், ஒரு சில இடங்களில் நிறம் இயல்பு நிலைக்குத் திரும்பாது. அவர்களுக்கானவைதான் இந்த மெடிக்கல் டாட்டூ. இதனால் சருமத்தில் இருக்கும் நிறப் பிரச்சினைகள் வெளியே தெரியாது. இந்த டாட்டூக்களுக்கு மருத்துவக் குணங்கள் என்று எதுவும் கிடையாது. சருமம் நிறம் மாறியதை மறைக்க மட்டுமே இவை பயன்படும்.இதற்கென்று தனியாக ஒவ்வாமை ஏற்படுத்தாத மையைப் பயன்படுத்துவார்கள். வழக்கமாக டாட்டூ போடப்பயன்படுத்தும் மையை விட இது சற்றே விலை அதிகம். விதவிதமான வண்ணங்களில் இருக்கும் மைகளை ஒன்று சேர்த்து தோலின் நிறம் வரவழைக்கப்படும். இந்த வகை மையை முழுக்க முழுக்கச் சரும மருத்துவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். இந்த மெடிக்கல் டாட்டூக்களை மருத்துவமனைகள் தவிர வேறெங்கும் போட்டுக்கொள்ள முடியாது.

எந்த அளவிற்கு இந்த மையைச் சருமத்தின் உள்ளே செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரண டாட்டூக்களைப் போல் இவற்றைப் போட்டுவிட முடியாது. 16 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இந்த மெடிக்கல் டாட்டூ போடப்படும். அந்த வயதில்தான், நம் சருமம் முழு வளர்ச்சி அடைந்திருக்கும்.

ஒரு விபத்தோ, நோய்த்தொற்றோ தாக்கிய பின்பு தன்னம்பிக்கையை இழப்பது ஒரு சாதாரண நிகழ்வு தான். அதிலிருந்து மீண்டு வர சிலருக்குப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. சிலருக்கு நல்ல நட்பு தேவைப்படுகிறது. சிலருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஒன்றாகத் தான் மெடிக்கல் டாட்டூக்கள் பார்க்கப்பட வேண்டும். அதே போல், இவ்வகை சருமப் பிரச்சினைகள் தாக்கிய நபரை ஒதுக்காமல், கேலி பேசாமல் சக மனிதராய் பார்க்க முடிந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையை நிச்சயம் இழக்க மாட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.