மழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்!

மழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்!

ருவமழை பொய்த்தாலும் காலம் தவறி பெய்யத்தான் செய்கிறது. வெயில் வெளுத்து வாங்கினாலும் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒருநாள் பெய்து தீர்க்கிறது. இப்போதும்கூட தென்மேற்குப் பருவமழைக் காலம். இருந்தாலும் பருவமழை பெய்யவில்லை. சில வானிலை மாற்றங்கள், வெப்பச்சலனத்தால் மழை பெய்கிறது. மழை என்று வந்துவிட்டால், கூடவே மழைக்கால நோய்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கிவிடுகின்றன. சமீபகாலமாக மழையால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கிறது; குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் மழைக்கால நோய்கள் நம்மைப் பாதிக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்...

* குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுவதால் முடிந்தவரை நாம் குடிக்கும், குளிக்கும் நீர் சூடானதாக இருக்கும்படி  பார்த்துக்கொள்வது நல்லது.

* தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், இருமல், ஜலதோஷம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் யூகலிப்டஸ் இலை, நொச்சி இலை போன்றவற்றை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதை இளஞ்சூடான நீரில் கலந்து குளிக்கலாம். உடல்வலி இருந்தால், இவற்றுடன் நுணா (மஞ்சணத்தி) இலையைச் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குளிக்கலாம்.

\"மஞ்சணத்தி\"

* தலையை நன்றாக உலர்த்திவிட்டு, சாம்பிராணிப் புகை காட்டலாம். சாம்பிராணிப் புகையை மூக்கால் சுவாசிக்காமல் உச்சந்தலை, பின்னந்தலையில் படுமாறு காட்டவும்.

* தலைக்குக் குளித்ததும், தலையை உலர்த்திவிட்டு மிளகுத் தூளை மெல்லிய பருத்தித் துணியில்வைத்து உச்சந்தலையில் சூடுபறக்கத் தேய்த்துவிடலாம். ஓமத்தை லேசாக வறுத்து, பொடியாக்கி அதனுடன் கற்பூரம் சேர்த்து மூக்கால் சுவாசிக்கலாம். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நெஞ்சு, விலாப்பகுதியில் பொறுக்கும் சூட்டில் தேய்த்தால் சளித்தொல்லைகள் விலகும்.

* நாம் உண்ணும் உணவு, பானங்கள் அனைத்துமே சூடாக இருந்தால் நல்லது, காலையில் அருந்தும் தேநீரில் இஞ்சி, துளசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சித்துவையல், தூதுவளைச் சட்னி, சுக்குக் காபி, கற்பூரவல்லி பஜ்ஜி, கல்யாண முருங்கை வடை இவை அனைத்துமே சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும் சிற்றுண்டிகள்.

* இரவில் உறங்குவதற்கு முன்னர் பூண்டுப்பால் அருந்தினால், ஜலதோஷத்துக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு நபருக்கு பூண்டுப்பால் செய்ய... 10 பூண்டுப்பற்களை உரித்து, 50 மி.லி பாலுடன் அதே அளவு நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அது பாதியாக வற்றியதும் மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் சளித்தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சைனஸ், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மழைக்காலம் பெருந்தொல்லை. இந்தப் பாதிப்புகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அவை...

* சைனஸ் பிரச்னையால் மூக்கடைப்பு, தும்மல், நீரொழுக்குப் போன்றவை ஏற்படும். இந்தப் பாதிப்புள்ளவர்கள் நொச்சி இலையை இரவில் தலையணையில் வைத்து உறங்குவது, நொச்சி இலையை ஆவிபிடிப்பது (வேது பிடித்தல்) போன்றவற்றால் சீரான சுவாசம் பெறலாம்.

* நல்லெண்ணெயில் நொச்சி இலைகளைப்போட்டுக் கொதிக்கவைத்து, ஆறவைத்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* இரண்டு அல்லது மூன்று சொட்டு தும்பைப்பூவின் சாற்றை மூக்கில்விடுவது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு நலன் தரும்.

* முசுமுசுக்கை இலைச் சாற்றுடன் நல்லெண்ணெயைக் கலந்து, காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் சைனஸ் சரியாகும். இதே முசுமுசுக்கை இலையை அரிசி மாவுடன் கலந்து, தோசைசுட்டுச் சாப்பிட்டுவந்தாலும், சைனஸ் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

\"கற்பூரவல்லி\"

* ஆஸ்துமா நோயாளிகள் சங்குப்பூ இலையைத் துவையல் செய்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.

* முசுமுசுக்கை இலையை நெய்விட்டு வதக்கி, மதிய உணவுடன் சாப்பிடுவது அல்லது துவையல் செய்து சாப்பிடுவதாலும் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.

* வெங்காயச்சாறு, இஞ்சிச் சாறு, முருங்கைப்பட்டைச் சாறு போன்றவற்றை தனித்தனியாகவோ, கலந்தோ சாப்பிட்டால் ஆஸ்துமா அவதி குறையும்.

ஆக, மழைக்கால நோய்கள் நம்மைப் பாடாய்ப்படுத்தி எடுப்பதற்குமுன் மேற்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நம்மைக் காத்துக்கொள்ளலாம். மழைக்கால நோய்கள் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது சிறந்தது. நினைவில் கொள்வோம்... மழைக்கால நோய்கள் வராமல் தடுப்போம்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.