மஹிந்திரா மோஜோ Vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Vs பஜாஜ் டொமினார் 400

மஹிந்திரா மோஜோ Vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Vs பஜாஜ் டொமினார் 400

‘மஹிந்திரா மோஜோ வாங்கலாமா அல்லது புதிதாக வந்திருக்கும் பஜாஜ் டொமினார் வாங்கலாமா?’ என்று டைலமாவில் இருக்கும்போது, வான்டட் ஆக வருகிறது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன். எப்படி? 300 சிசியான மோஜோவைவிட, 400 சிசியான டொமினாரைவிட ஹிமாலயன் பைக்கின் இன்ஜின் பெரிது. விலையும் கிட்டத்தட்ட நெருக்கம். ஆனால், முன்னது இரண்டும் இளசுகளைக் குறிவைத்து வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்குகள். ஹிமாலயன், சாகச விரும்பிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அட்வென்ச்சர் டூரர் பைக்; ஆஃப் ரோடர் என்றும் சொல்லலாம். மூன்றையும் ஒரே சமயத்தில் களத்தில் இறக்கி, ஜெயிப்பது ஸ்போர்ட்ஸ் டூரிங்கா... அட்வென்ச்சரா என்று பார்த்தோம்!

\"\"

டிசைன்

‘பல்ஸர்ல 400 சிசியோ?’ என்று டொமினார் பைக் ஒருகணம் கண்ணை மறைக்கிறது. பல்ஸர் என்றாலே அதன் பல்க் டிசைன்தான் நினைவுக்கு வரும். ஆனால், இது பல்ஸர் இல்லை. 400 சிசி என்பதால், கூடுதல் பல்க்காக, கிக்காக இருக்கிறது. இந்த முறை ஸ்ட்ராங்காகவும், கொஞ்சம் மெச்சூர்டாகவும், மாடர்னாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இதன் ஹெட்லைட் டிசைன் இருக்கிறது. மொசைக் ஸ்டைல் LED ஹெட்லைட் லே-அவுட், அப்படி நினைக்க வைக்கிறது. பாகங்களில் கொஞ்சம் பிரீமியம் குவாலிட்டி தெரிகிறது. அலாய் ஹேண்டில்பார் மவுன்ட், அலாய் ஃபுட் ரெஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் என்று எல்லாம் அலாய் மயம். 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க், இதன் வலிமையை உணர்த்துகிறது. டொமினாரில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் டிஜிட்டல் மயம். ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ், RPM மீட்டர் என்று டிசைனும் ஸ்டைலிஷ். பெரிய பைக் என்பதால், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஏபிஎஸ் லைட், இன்ஜின் செக்-அப் போன்ற விஷயங்களும் உள்ளன.

\"\"

மோஜோவும் நேக்கட் பைக்குக்கான டிசைன்தான். 21 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும், அதற்குக் கீழே வெளியே தெரியும்படி இருக்கும் ஃபிரேம் டிசைனுமே இதைப் பறைசாற்றுகின்றன. இரண்டு கண்களைப் போன்ற ஹெட்லைட்டுக்கு மேலே ‘கண் இமை’ போன்ற LED ஸ்ட்ரிப், சூப்பர்! சில நேரங்களில் இது கோபமான ஆந்தையை நினைவூட்டுகிறது. ‘மஹிந்திரா பைக்தானே இது’ என்று ஒரு விஷயத்தைத் தூரமாக இருந்தே கண்டுபிடிக்கலாம். ஆம்! தங்க வண்ண ரிப்களை, தனது பைக்குகளில் ட்ரேட் மார்க் டிசைன் ஆக்கிவருகிறது மஹிந்திரா. பில்லியன் சீட்டில் இடம் மிகக் குறைவுதான். பின்னால் உட்காருபவர்கள் கிரிப் குறைவாகக் கிடைப்பதாகக் குறைப்படுகிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருக்கும் தகவல்களை, மதிய வெயிலில் படிக்க முடிந்தால், உங்களுக்கு நீங்களே ஷொட்டு வைத்துக்கொள்ளலாம்.

\"\"

சில அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு, ஹிமாலயன் பைக்கைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். காரணம், ராயல் என்ஃபீல்டின் ரெட்ரோ-கிளாஸிக் டிசைன். வட்டவடிவ ஹெட்லைட், அதற்கு மேல் காற்று முகத்தில் அடிக்காமல் இருக்க சின்ன அட்ஜஸ்டபிள் வைஸர், 17 இன்ச் ஸ்போக் வீல்கள் என்று எல்லாமே கிளாஸிக். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், RPM மீட்டர், ஃப்யூல் மீட்டர் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் குடுவைகள். இதில் எந்தப் பக்கத்தில் பயணிக்கிறோம் என்கிற திசைகாட்டியும் உண்டு. மற்ற இரண்டு பைக்குகளையும் ஒப்பிடும்போது, இதன் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் சற்று இளைத்ததுபோல் தெரிகிறது. ஆனால், ரைடர்களுக்குத் தேவையான குடிநீர், எரிபொருள் மற்ற சில பொருள்களை எடுத்துச் செல்ல, டேங்க்குக்கு அருகில் இடம் வைத்ததில் லைக் வாங்குகிறது என்ஃபீல்டு டிசைன் டீம். பின்பக்கம் கிராப் ரெயிலிலும் சில பொருள்களைக் கட்டி எடுத்துச் செல்லலாம். சுவிட்சுகள் அனைத்தும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஃபிட் அண்டு ஃபினிஷ், ஓகே!

இன்ஜின்

\"\"

புதிய இன்ஜினைத் தயாரித்து ரிஸ்க்கெல்லாம் எடுக்கவில்லை பஜாஜ். டொமினாரில் இருப்பது கேடிஎம் டியூக் 390 மற்றும் RC 390 பைக்குகளில் இருக்கும் அதே 373.3 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால், இதன் ஹெட் மற்றும் போர்களில் பல மாற்றங்கள். SOHC, 3 ஸ்பார்க் ப்ளக், 4 வால்வு சிஸ்டம் என்று புகுந்து புறப்பட்டிருக்கிறது பஜாஜ். லிக்விட் கூலிங்தான்; இன்ஜின் சூடு பற்றிப் பிரச்னையில்லை. ஆனால், இதற்கென தனிச் செலவு உண்டு. இது ஃப்யூல் இன்ஜெக் ஷன் சிஸ்டம் என்றாலும், கேடிஎம்-மைவிட பவர் குறைந்துவிட்டது. ஆனால், ஒவ்வொரு கியரிலும் 10,000 RPM வரை முறுக்க முடிகிறது. 3,000 ஆர்பிஎம்-மிலேயே 2.8kgm டார்க் கிடைப்பதால், சிக்னலில் சீறலாம்.

\"\"

6 ஸ்பீடு கியர்பாக்ஸ், துல்லியம் மற்றும் மென்மை. டொமினாரில் பாராட்ட வேண்டிய விஷயம் - ஸ்லிப்பர் கிளட்ச். இது ரேஸ் பைக்குகளில் இருக்கும் அம்சம். ரேஸ் போட்டிகளில் கார்னரிங்கில் கியரைக் குறைக்கும்போது, பிரேக் பிடிக்கும்போது பைக்கில் சின்ன தடுமாற்றம் ஏற்படும். ஸ்லிப்பர் கிளட்ச், இன்ஜின் பிரேக்கிங்கின் வேகத்தை மட்டுப்படுத்தி ரைடர்களுக்குப் பெரிதும் உதவும். இதை ‘பேக் டார்க் லிமிட்டர்’ என்று சொல்வார்கள். பவர் 35bhp என்பதால், அதிகபட்சமாக 150 கி.மீ வரை டாப் ஸ்பீடை எட்டுகிறது டொமினார். இங்கிருக்கும் பைக்குகளில் பவரிலும் டார்க்கிலும் (3.5kgm) ஒஸ்தி, டொமினார்தான்.

\"\"

ஹிமாலயனைப் பொறுத்தவரை பவர் டெலிவரியில் செம கூல். அதாவது, எல்லாமே பொறுமையாக நடக்கிறது. இதிலும் SOHC-தான். ஆனால், 2 வால்வுகள்தான். அட்வென்ச்சர் பைக்குகளுக்கு ஃப்யூல் இன்ஜெக் ஷன்  வேலைக்கு ஆகாது என்பது சரிதான். ஆனால், அதற்காக 411 சிசி இன்ஜினுக்கு 24.5bhp பவர் போதுமா என்பதை டூரர்கள்தான் சொல்ல வேண்டும். கியர்பாக்ஸும் 5 ஸ்பீடுதான். சிட்டி டிராஃபிக்கில் இதன் நீளமான கியர் ரேஷியோ அமைப்பும், ஹார்டு கிளட்ச்சும் கை கால்களில் வலியை ஏற்படுத்துகின்றன. பதறாதீர்கள். ஆனால், ஆஃப் ரோடு பயணங்களில் இது ஒரு வரப்பிரசாதம். கியர்களை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லையே! நல்லவேளையாக, ஆயில் கூல்டு இன்ஜின். இன்னொரு நல்ல விஷயம் - கவுன்ட்டர் பேலன்ஸ். அதாவது, அதிர்வுகளைக் குறைக்கும் விஷயம் என்கிறது ராயல் என்ஃபீல்டு.

\"\"

ஹிமாலயனை ஒப்பிடும்போது, மோஜோவின் 295 சிசிக்கு 27bhp பவர் என்பது சூப்பர். யாரிடமும் இல்லாத ஒரு ஸ்டைல் விஷயம் மோஜோவில் இருக்கிறது. இரட்டை சைலன்ஸர். சிங்கிள் சிலிண்டருக்கே டூயல் எக்ஸாஸ்ட் கொடுத்த மஹிந்திராவுக்கு ஷொட்டு. ஆனால், இதனால் பைக்கின் எடை கூடியிருக்கிறதே மஹிந்திரா? ‘சிட்டி டிராஃபிக்ல சீக்கிரம் இன்ஜின் சூடு ஆயிடுது’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். டார்க் விஷயத்தில் மன நிறைவைக் கொடுக்கிறது மோஜோ. சிட்டியிலும் சரி; நெடுஞ்சாலையிலும் சரி - ‘சீக்கிரம் போ... சீக்கிரம்’ என்று சினிமா வில்லன்கள்போல் விரட்ட, மிரட்ட வேண்டியது இல்லை. 4,500-5,000 rpm-மை ஒரு தடவை தொட்டு விடுங்களேன். 27bhp பவர் கொண்ட பைக்தான் இது என்பதை நம்ப முடியவில்லை. பவரும் டார்க்கும் பொங்குகின்றன. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட மோஜோவில் அதிகபட்சம் 143 கி.மீ வரை விரட்ட முடிந்தது. இதில் ஸ்லிப்பர் கிளட்ச், ஆப்சென்ட்!

கையாளுமை, ஓட்டுதல் அனுபவம்


கையாளுமையும் பைக்கின் எடையும் தொடர்புடையவை. இந்த மூன்று பைக்குகளிலேயே அதிக எடை கொண்டிருப்பது மோஜோதான். மற்ற இரண்டு பைக்குகளைவிட 3 கிலோ எடை அதிகமாக, அதாவது 185 கிலோ இருக்கிறது. நாம் சொன்னபடி இரட்டை சைலன்ஸர்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், மோஜோவின் முன்பக்க 320 மிமீ டிஸ்க் பிரேக் கொஞ்சம் சுமார் ரகம். ஆனால், பின் பக்க 240 மிமீ டிஸ்க், செம ஷார்ப். இவை ஸ்பெயினைச் சேர்ந்த ஜீஜுவான் என்னும் நிறுவனத்தின் படைப்பு. மஹிந்திரா ரேஸிங்கில் இந்த பிரேக்குகள்தான் சிறப்பம்சம். ஆனால், இதில் ஒரு சிக்கல். மோஜோவில் ஏபிஎஸ் இல்லாததால், பின்பக்க வீல் லாக் ஆகும் அபாயம் உண்டு. மோஜோவின் ப்ளஸ், இதன் பைரலி Diablo Rosso டயர்கள்தான். திருப்பங்களில் சூப்பர் கிரிப்.

\"\"

ஹிமாலயனைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க ஆஃப் ரோடு என்பதால், பிரேக்குகளும் கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றன. பிரேக் லீவரை முழுவதுமாகப் பிடிக்க வேண்டும். சியட் நிறுவனத்தின் டூயல் பர்ப்பஸ் XL டயர்கள், சாஃப்ட் ரோடுக்கும் சூப்பராக செட் ஆகின்றன. செமி டபுள் கிரேடில் ஸ்டீல் ஃப்ரேம் என்று கடினமான ரோடுகளைச் சுலபமாகக் கையாளுகிறது ஹிமாலயன். அதிலும் இதன் சஸ்பென்ஷன், சொகுசு + ஆச்சர்யம். காரணம், 41 மிமீ தடிமன் கொண்ட ஃபோர்க்குகளும், மோனோஷாக் சஸ்பென்ஷனும்தான். முன்பக்கம் 300 மிமீ டிஸ்க், பின்பக்கம் 240 மிமீ. முன் பக்கம் ஆக்ரோஷமாகவும், பின்பக்கம் ஷார்ப்பாகவும் இருப்பது ஆஃப் ரோடுக்கு வேண்டுமானால் செட் ஆகலாம்; சாஃப்ட் ரோடுக்கு... ப்ச்!

கையாளுமையிலும் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது டொமினார். முதல் காரணம், ஏபிஎஸ் பிரேக்ஸ். அதிலும் டூயல் சேனல் பிரேக்ஸ் ஆப்ஷனலாக வருகின்றன. மற்ற இரண்டு பைக்குகளிலும் இல்லாத ஏபிஎஸ் பிரேக்ஸுக்காகவே டொமினாருக்கு தம்ஸ்அப்! ரைடிங் பொசிஷனும் டொமினாரில் அட்டகாசம். ஃப்ளாட்டான அலாய் ஹேண்டில்பார், ஃபுட் பெக்குகள் மற்றும் பிரேக் லீவர்களில் கை கால் வைத்து ஸ்ப்ளிட் சீட்டில் அமர்ந்து ஆக்ஸிலரேட்டர் முறுக்கும் ஸ்டைலுக்காகவே பெண்கள் மயங்கலாம். ஹிமாலயனைவிட இன்னும் தடிமனான 43 மிமீ ஃபோர்க்குகள், பஜாஜின் டிரேட்மார்க் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஹேண்ட்லிங்கை இன்னும் ஜாலியாக்குகின்றன. இதன் ஸ்டிஃப் சஸ்பென்ஷன், மோசமான சாலைகளை பாசமான சாலைகளாக மாற்றுவதோடு, அதிவேகங்களில் சூப்பர் ஸ்டெபிலிட்டியும் கிடைக்கிறது. எம்ஆர்எஃப் டயர்களுக்கு ஒரு கைகுலுக்கல்.

\"\"

பிரேக்கிங்கிலும் டொமினார் சூப்பர். 320 மிமீ முன்பக்கமும், 230 மிமீ அளவுகொண்ட பின்பக்க டிஸ்க்குகள் ‘மாற்றான்’ சூர்யா போல், வெவ்வேறு குணங்களைக் கொண்டிருக்கின்றன. முன்னது துல்லியம் என்றால், பின்னது ஆக்ரோஷம். இதனால், ஓட்டுபவருக்கு நம்பிக்கை கிடைப்பது உண்மை. உதாரணத்துக்கு, 60 கி.மீ வேகத்தில் சென்று பிரேக் அடித்தால், 17.20 மீட்டர் தாண்டி, 2.02 விநாடிகளில் நிற்கிறது டொமினார்.

‘ஒவ்வொரு பையனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பது மாதிரி, ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஹிமாலயன், ஆஃப் ரோடுக்கு சூப்பர் என்றால், சாஃப்ட் ரோடுக்குப் பல்லிளிக்கிறது. டொமினாரில் LED ஹெட்லைட், ஏபிஎஸ் இருக்கிறது என்றால், மஹிந்திராவில் உலகப் புகழ்பெற்ற பைரலி டயர்கள்; மூன்று பைக்குகளைவிடப் பெரிய பெட்ரோல் டேங்க், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் என்று வசதிகளில் மனதை மயக்குகின்றன. சில வசதிகளைத் தாண்டி, பைக் ஓட்டுபவர்களுக்கு முக்கியமான அம்சங்கள் - ஸ்டைல், மைலேஜ், கையாளுமை. இப்படி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, டொமினாரின் கட்டுமானமும் பிரேக்கிங்கும் கையாளுமையும் ஆசம்! கூடுதலாக, விலை விஷயத்தில் கட்டிப்போட்டு விடுகிறது டொமினார். 200 சிசி பைக்குகளே `1.5 லட்சத்தை நெருங்கும்போது 373.3 சிசி இன்ஜின், 35bhp பவர், 3.5kgm டார்க் கொண்ட பெர்ஃபாமென்ஸ் பைக் டொமினார், `1.56 லட்சம் ஆன் ரோடுக்குக் கிடைக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸுக்குத் தாராளமாக எக்ஸ்ட்ரா 16,000 ரூபாய் கொடுக்கலாம் என்கிற மனநிறைவு வருகிறது. நல்ல விலையில், டொமினார் மூலம் சொல்லி அடித்திருக்கும் பஜாஜுக்கு பொக்கே!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.