முடி உதிர்வுக்கு முடிவு கட்ட 5 எளிய வழிமுறைகள்!

முடி உதிர்வுக்கு முடிவு கட்ட 5 எளிய வழிமுறைகள்!

ன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த பெண்களை பரவலாகக் காண முடிகிறது. முடி உதிர்வைத் தடுக்க முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது... எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள். ஒரு பக்கம் இவற்றால் கிடைக்கும் பலனைவிட செலவுதான் அதிகம். முடி உதிர்வைத் தடுக்க, நன்கு முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன. அவற்றை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அப்படிப்பட்ட ஐந்து வழிமுறைகள் இங்கே...

\"முடி

ரிலாக்ஸ் தெரபி 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துபவை. ஆயில் மசாஜ் செய்துகொள்வதாலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் உடலும் மனமும் தளர்வடையும் (ரிலாக்ஸ் ஆகும்). மசாஜ் தெரபி மற்றும் ரிலாக்ஸ் தெரபி ஆகிய இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதங்களில் முடி உதிர்வது நின்று, ஆரோக்கியமாக முடி வளர ஆரம்பிக்கும். பிரசவத்தாலும், தீவிர மன உளைச்சலாலும், முடி உதிர்வு பிரச்னையை எதிர்கொள்கிறவர்கள் இந்த இரு சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். 

அரோமா தெரபி 

அரொமா ஆயில்களால் தலையில் மசாஜ் செய்யும்போது, பல வகையான பலன்கள் நமக்குக் கிடைக்கும். லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில், செடார்வுட் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியக்கூடியவை. ஆனால் இவற்றை அப்படியே உபயோகிக்கக் கூடாது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள அரோமா ஆயில்களில் ஒன்றை 1 சொட்டு அளவு மட்டும் சேர்த்து, தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முடியின் நுனி முதல் அடி வரை எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இதன் மூலம் எடுத்துச் செல்லலாம். இது, முடியின் வேர்கள் பலமாகவும், சீராக வளர்வதற்கும் தூண்டும். 

\"பூண்டு\" \"வெங்காயம்\"

வெங்காயம் மற்றும் பூண்டு

சிலருக்கு பூச்சி வெட்டால், தலையில் முடியில்லாமல் ஆங்காங்கே வழுக்கை விழுந்ததுபோலத் தோன்றும். இதற்குச் சிறந்த மருந்து, வெங்காயம்தான். வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்துவர, பூச்சி வெட்டு மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கும். முடியின் வேர்கள் வலுவடையும். வெங்காயம் மட்டுமல்லாமல் பூண்டும் மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அளிக்கக்கூடியது. தினமும் இரண்டு முறை பூண்டின் சாற்றை தலையில் தேய்துவந்தால், மூன்றே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். 

மனோவசியம் 

முடி உதிர்வுக்கு மேலும் ஒரு முக்கிய காரணம், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனரீதியான பிரச்னைகளே. ‘ஹிப்னோதெரபி’ (Hypnotherapy) எனப்படும் மனோவசியப் பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு, தன் மீது இருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். அதனால் மன உளைச்சல் குறையும்; முடி உதிர்வதும் குறையும். ஹிப்னோதெரபி பயிற்சியை எடுத்துக்கொள்வதால், உதிர்ந்த இடத்திலும்கூட முடி வளர்வதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

\"ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து அவசியம்! 

ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை. 

மேலே குறிப்பிட்டிருக்கும் ஐந்து வழிமுறைகளை எளிதாக வீட்டில் நாமே செய்துகொள்ளலாம்; முடி உதிர்வைத் தடுக்கலாம்; வசீகரமான தோற்றப் பொலிவோடு வலம் வரலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.