முல்லா சொன்ன வெற்றியின் ரகசியம்!!

முல்லா சொன்ன வெற்றியின் ரகசியம்!!

ம் எல்லோருக்குள்ளுமே ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள், சின்ன சின்ன சக்ஸஸ் சீக்ரெட்ஸ் இருக்கும் அல்லவா? ஆனால், அந்த ரகசியங்களை எவ்வளவு தூரம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அப்படி நம் சக்ஸஸ் சீக்ரெட்டுகளை நமக்குள்ளயே வைத்துக் கொள்ள முல்லா கதை சொல்லும் ரகசியத்தைப் பார்ப்போமா!? சிறுவயதிலிருந்து முல்லா கதைகளை நாம் எல்லோருமே விரும்பிப் படித்து வந்திருப்போம். சுவாரஸ்யமாக இருப்பதோடு,   அவரின் சின்ன சின்ன செயல்களில் ஈர்த்தும் விடுவார்.

அந்த ஊரில் முல்லாவுக்கு நல்ல மரியாதை. மன்னராக இருந்தாலும், சாமானிய மனிதனாக இருந்தாலும் முல்லாவை பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் ஒன்று தான். இதனாலேயே எளிய மக்களுக்கும் முல்லாவை அவ்வளவு பிடிக்கும். எந்த செயலைத் தொடங்கும் முன்னும் முல்லாவிடம் ஆலோசனை கேட்டுவிட்டுத்தான் துவங்குவார்கள். ஒருநாள் அந்த ஊரிலேயே பெரிய மனிதர் ஒருவர் முல்லாவை சந்திக்க வந்திருந்தார். பல வெளிநாடுகளிலும் வியாபாரம் செய்து வந்தார். உள்ளூரிலும் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இவ்வளவு பெரிய செல்வந்தர் தன்னைத் தேடி வந்திருக்கிறாரே என்னவாக இருக்கும் என்று குழம்பிய முல்லா அவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார்.

செல்வந்தர் பேச்சைத் துவக்கினார். \"முல்லா, உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் உங்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மன்னர் கூட உங்களை அரசவைக்கு அழைத்து ஆலோசனை கேட்டுக் கொள்கிறராமே\" எனச் சொல்ல முல்லாவுக்கோ குழப்பம் அதிகமானது. குழப்பத்துடன் அவருடன் உரையாடுவதை விட அவர் பேச்சை கேட்கலாமே என்று முடிவுக்கு வந்துவிட்டார். செல்வந்தரின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அமைதியாக அவர் பேச்சை கேட்க ஆரம்பித்தார்.       

செல்வந்தருக்கோ அவரைப் பற்றி நாம் இவ்வளவு புகழ்ந்து பேசுகிறோம். ஆனால், மனிதர் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாரே. ரொம்பப் பெரிய ஆள்தான் போல என மனதுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் அவரே தொடர்ந்தார்.

\"தங்களிடம் ஒரு ரகசியம் கேட்கலாம் என்று தான் வந்தேன். ஆனால், அதைக் கேட்க தயக்கமாக இருக்கிறது. ஊரெல்லாம் உங்களை பற்றிய பேச்சாக இருக்கிறது. அரசவையில் இருக்கும் என் நண்பர்கள் முல்லாவிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனால்தான் மன்னருக்குக்கூட அவரைப் பிடிக்கிறது எனச் சொன்னார்கள். உங்களுடைய அந்த சக்தி என்னவென்றே ரகசியத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.\" எனத் தான் முல்லாவை தேடி வந்த காரணத்தை சொன்னார்.

\"கதை

முல்லாவுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. வாய் விட்டு நன்றாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஊரெல்லாம் தன்னிடம் ஏதோ சக்தி இருப்பதாகத் தான் பேசிக்கொள்கிறார்களா? என நினைத்துதான் சிரித்தார். செல்வந்தருக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது. எவ்வளவு பெரிய ஆள் நாம், இவ்வளவு தன்மையாக கேட்டும் இந்த மனிதர் எதையும் பொருட்படுத்தாமல் இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாரே. முல்லாவுக்கு தான் இப்படி சிரிப்பது அவருக்கு பிடிக்கவில்லை கோபப்படுகிறார் என்பது தெளிவாக புரிந்தது. சிரிப்பதை நிறுத்தி விட்டு அவரிடம் சொன்னார்.

\"ஆம், என்னிடம் அபூர்வமான சக்திகள் நிறைய இருக்கிறது. ஆனால், என்னால் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாதே. அப்படிச் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே\"

\"இல்லை, நீங்கள் உங்களுடைய ரகசியத்தை என்னிடம் நம்பி சொல்லலாம். அது என்னைவிட்டு தாண்டி போகாது. என்னை நீங்கள் நம்பலாம்\"

முல்லாவுக்கோ முழுமையாக அவர் மீது நம்பிக்கை பிறக்கவில்லை.

\"நான் என்னுடைய வெற்றியின் ரகசியச்த்த உங்களிடம் சொன்னால். அதை யாரிடமும் சொல்ல மாட்டீர்களே!?\"

\"இல்லை, என்னை நீங்கள் நம்பலாம். என்னைத் தாண்டி வெளியே போகாது\" என நம்பிக்கையூட்டினர்.

\"உங்களிடம் யாராவது பணம் கொடுக்கிறேன் என ஆசைகாட்டினால்..\" 

\"இல்லை நண்பரே என்னிடம் இல்லாத செல்வமே இல்லை. என்னுடைய ரகசிய வியாபார நுணுக்கங்களால்தான் இவ்வளவு பெரிய செல்வந்தனாக உயர்ந்து நிற்கிறேன். ரகசியங்களின் அருமை எனக்கும் தெரியும். பயப்பட வேண்டாம் எனச் சொன்னார்\"

\"அப்படியானால் உங்களிடம் என்னுடைய ரகசியத்தை சொல்லலாம் என நினைக்கிறேன். மறந்து கூட யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் அல்லவா?\" 

\"இல்லை சொல்ல மாட்டேன்\" உறுதியாக கூறினார் அந்த செல்வந்தர்.

\"உண்மையிலேயே நீங்கள் ரகசியத்தை கட்டிக்காக்க கூடியவர்தான். ஆனால், என் வெற்றிக்கான ரகசியத்தை உங்களிடம் கூறினால் என்னுடைய ரகசியத்தை காப்பாற்ற தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன் அல்லவா. அதனால், என்னுடைய வெற்றிக்கான ரகசியத்தை உங்களிடம் சொல்ல நான் தயாராக இல்லை. உங்கள் வெற்றி ரகசியங்களைப் போல நானும் என் ரகசியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா!?\" என சொல்லி முடிக்க அதை புரிந்து கொண்ட செல்வந்தர் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். 

செல்வந்தர் கிளம்பிப் போனதும் முல்லா என்னிடம் மட்டும் ரகசியமாக காதில் கிசுகிசுத்தார். அது என்ன தெரியுமா!?

முல்லாகிட்ட அப்படி எந்த ரகசியமுமே இல்லை என்பதுதான் அது.  

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.