
லண்டனில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை செய்ய 2040 முதல் தடை
உலகம் முழுக்க காற்றில் கலக்கும் மாசின் அளவு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க லண்டன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் காற்றின் தரத்தை மேம்படுத்த £255 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 2000 கோடிகளை செலவிட திட்டமிட்டுள்ளது.
இத்துடன் பழைய டீசல் இன்ஜின்களை கொண்டு இயங்கும் அனைத்து வாகனங்களையும் தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின்படி சுத்தமான காற்று செயல்திட்டத்தை தொடர்ந்து புதிய விதிமுறை அமலாகிறது.
முன்னதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட கார்களின் விற்பனை 2040-ம் ஆண்டு முதல் நிறுத்தப்படும் என அறிவித்திருந்தார். தற்சமயம் லண்டனில் மொத்தம் நான்கு சதவிகிதம் வாகனங்கள் மட்டுமே முழுமையான மின்சாரத்தில் இயங்குகின்றன.
சார்ஜ்மாஸ்டர் கணிப்பின் படி 2022-ம் ஆண்டு வாக்கில் லண்டனில் முழுமையான மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனை 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஆண்டிற்கு 40,000 பேர் மோசமான காற்றின் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி காற்றில் ஏற்படும் மாசு அளவை குறைக்க பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் அங்கமாக பொது போக்குவரத்துகளில் அதிகப்படியான பசுமை வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.