வெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்!

வெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்!

`வெயில் நேரத்துல வெளிய போகாதே, ஒடம்பு கறுத்துப்போயிடும்\', \'நிறைய தண்ணி குடிக்கணும். இல்லைன்னா வயித்துப் பிரச்னை ஏதாவது வந்திடும்\' என்பது போன்ற அறிவுரைகளை கோடைக்காலத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே  சரும வறட்சி (Dry Skin) இருக்கும். கோடையில் அவர்களது நிலைமை மிகவும் சிரமம். ஏற்கெனவே சருமப் பிரச்னை உள்ளவர்கள் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்... எந்த ஃபேஸ் பேக்  பயன்படுத்தலாம் என்பது பற்றியெல்லாம் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ.தீபா.

* \"சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறு - தயிர் - தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறு - உருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும்.\"இயற்கை

* முகத்தை `பளிச்\'சென ஆக்குவதற்கு, பலரும் பிளீச்சிங் செய்வார்கள். அதற்கு தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனையோ, பப்பாளிச் சாறு கலந்த தேனையோ தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்தும் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலிருக்கும் புரோமலைன் (Bromelain) என்ற என்சைம், தோலிலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சென மாற்றும். அன்னாசிப்பழம்-தேன் கலவையை இரண்டு மூன்று முறை தேய்த்துக்கொள்வது நல்லது.

* சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளி - தயிர் பேஸ்ட், தக்காளி - கடலை மாவு - கற்றாழை பேஸ்ட் போன்றவை  மிகவும் நல்லவை.

* பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். தினமும் சோப்புக்குப் பதில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, சருமம் கருமையடைவதிலிருந்து தடுக்கும்; சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கும்.

\"கோடை\"

* தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். ஆண்கள், கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடலாம்.

* `முகத்துல எண்ணெய் வழியுது’ என்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும்.

* தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்’’ என்கிறார் தீபா.

உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க \'ஃபேஸ் பேக்\' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை வழங்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மணவாளன்...

\"கோடைக்காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க இரண்டு வகையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சருமத்தின் பராமரிப்புக்காக கொடுக்கப்படவேண்டிய வெளிப்புறப் பாதுகாப்பு (External Care), மற்றொன்று, உடல் குளுமைக்காக கொடுக்கப்படவேண்டிய உடலின் உள்புற பாதுகாப்பு (Internal Care). 

* உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடர் நிறங்களைத் தவிர்த்துவிட்டு பச்சை, மஞ்சள், நீலம் போன்ற மங்கலான நிறமுள்ள உடைகளை மட்டுமே அணிய வேண்டும். உடைகள் உடலை இறுக்காதபடி இருக்கவேண்டியது அவசியம். கோடையில் பருத்தி உடைகள்தான் பெஸ்ட்.! இவை அனைத்தும் உள்ளாடைகளுக்கும் பொருந்தும்.

* குளிர்ந்த நீரில், தினமும் மூன்று முறை முகம் கழுவ வேண்டும். அதேபோல காலை, மாலை என இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 

* மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள், உடலில் வெயில்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக்கொள்ளலாம். எண்ணெய்ப் பசை உள்ள சருமம் (Oily Skin) உள்ளவர்கள், குளிர்ந்த நீரால் தோலை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.

\"மாஸ்க்\"

* தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்... இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட பகுதி நிறம் மாறுதல் போன்ற பிரச்னை இருப்பவர்கள், உருளைக்கிழங்கை மையாக அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், பிரச்னை மெள்ள நீங்கும்.\"இயற்கை

* வெயிலில் நீண்ட நேரம் அலைவது சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள், தினமும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும். இது அரிப்பு பிரச்னையைச் சரிசெய்யும்; சருமப் பிரச்னைகளையும் தீர்க்கும். சிந்தடிக் பவுடருக்குப் பதிலாக, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் குளியல் பவுடரை (Natural Bath Powder) பயன்படுத்தலாம். இவை அனைத்தும் செய்து பார்த்த பிறகும், பிரச்னை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

* கோடையில் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும் என்பதால், ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும்போது, உள்ளுறுப்புகளில் நீர் வறட்சி ஏற்படும். குறிப்பாக, பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது. 

\"தோல்\"

* நீர்வறட்சியைத் தடுக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம். தயிருக்குப் பதில் நீர்மோர் குடிப்பது நல்லது. 

* 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒருநாள் முழுக்க உணவுக்குப் பதில் ஜூஸ் மட்டுமே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வது, உடலிலுள்ள கழிவு வெளியேற உதவியாக இருக்கும். உடலில் கழிவுகள் வெளியேறிவிட்டாலே, சருமப் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்’’ என்கிறார் மணவாளன்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.