ஹெர்னியா ஏற்பட காரணம்

ஹெர்னியா ஏற்பட காரணம்

ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும். இம்மாதிரி ஏற்படும் ஹெர்னியா பல பிரிவுபடும். ஹெர்னியா என்பதனை குடலிறக்கம் என்றே குறிப்பிடுகின்றனர். காரணம் மிகவும் பொதுவான குடலிறக்கம் அடிவயிற்றில் தான் ஏற்படுகின்றது. அடி வயிற்று சுவரில் ஏற்படும் பலவீனத்தால் கொழுப்பு திசு அல்லது அடி வயிற்று உறுப்புகள் வெளிவருகின்றன. 

நமது உள்ளுறுப்புகள் ஒரு தசை படலத்துக்குள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந்த தசை படலம் கிழிந்தால் உள்ளுறுப்புகள் வெளிவரும். உங்கள் வெளி ஷர்ட்டில் ஓட்டை இருந்தால் உள் பனியன் வெளி வரும் அல்லவா? அதுபோல்தான். தசை நார்கள் பலவீனம் அடைவதாலும் அல்லது பிறவியிலேயே தசையில் ஓட்டை இருப்பதாலும் ஹெர்னியா ஏற்படலாம். 

சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பின் உள் தசைநார்கள் விலகும். இதனாலும் ஹெர்னியா ஏற்படலாம். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல் இருப்பது ஹெர்னியா பாதிப்பினை அதிகப்படுத்தும். தொடர்ந்து இருக்கும் மலச்சிக்கல் ஹெர்னியா பாதிப்பிற்கு ஒரு அடிப்படை காரணம் ஆகும். அதிக உடல் எடை, நிறைய குழந்தைகள் பெறுதல், அதிக நேரம் சைக்கிள் பிரயாணம் செய்தல், அதிக எடை தூக்குவது, பாரம் சுமப்பது இவையும் ஹெர்னியா ஏற்பட காரணம் ஆகின்றன. 

இப்படி ஏற்படும் ஹெர்னியா

* தொப்புள் பகுதி
* வயிற்றின் முன் பகுதி
* ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பை நோக்கி
* தொடைமடிப்பு 
* பழைய அறுவை சிகிச்சை செய்த இடம்
என பல இடங்களில் ஏற்படலாம். 

வயிறு, தொடை, ஆண் பிறப்புறுப்பு, தழும்பு போன்ற பகுதிகளில் ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவு புடைத்து இருக்கும். இதுவே இந்நோயின் ஆரம்ப கால அறிகுறி. இதனைத் தொட்டால் வலி இருக்காது. சற்று தள்ளினால் தானே உள்ளே சென்று விடும். அல்லது படுக்கும் பொழுது தானே உள்ளே சென்று விடும். இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது. ஆரம்ப அறிகுறி தெரியும் பொழுதே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இல்லையென்றால் இதன் அளவு மிகப்பெரிதாகி விடும். இதனால் வீக்கம், பாதிக்கப்பட்ட இடத்தில் அடைப்பு ஏற்படும். தாங்க முடியாத வயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்பிசம் ஆகியவை ஏற்படும். மலச்சிக்கல் கடுமையாகும். ரத்த ஓட்டம் தடைபடும். குடலே அழுகி விடும் அபாயம் ஏற்பட்டு இதனால் மரணம் கூட நிகழலாம். 

இதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே என்பதனை நன்கு உணர வேண்டும். உடனடி அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் மிகுந்த நன்மை அடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவர். தாமதிக்க, தாமதிக்க பாதிப்புகள் கூடும் என்பதனை உணர்க. குழந்தைகளுக்கும் ஹெர்னியா பாதிப்பு ஏற்படும் என்பதை அறிய வேண்டும். 

* தொப்புள் சார்ந்தது
* அடி வயிற்றுப் பகுதியில் ஏற்படுவது. 
தொப்புள் சார்ந்த குடவிறக்கம் பெரும்பாலும் பிறந்த ஒருசில வாரங்களில் காணப்படும். பொதுவில் இது தொப்புள் கொடி விழுந்த பின்னர் இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை. ஆனால் அநேக குழந்தைகளுக்கு 2 வயதுக்கு முன்பாக தானாகவே சரியாகி விடும். 
* தொப்புளை சுற்றிய வீக்கம்.

* அழும் பொழுது, இருமும் பொழுது அடிவயிறு வீக்கம் ஆகியவை ஏற்பட்டாலும் உடனடி மருத்துவரை அணுகவும். தொப்புள் சார்ந்த குடலிறக்கம் சரியாகாவிடில் அறுவை சிகிச்சை தேவைப்படும். அடிவயிறு குடலிறக்கம் - இதற்கு தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே. 
ஒரு வாரத்தில் சாதாரண வாழ்க்கை நிலைக்கு திரும்ப முடியும். 

ஹெர்னியா ஏற்படுவதற்கு தசைகளின் சிதைவும், முதுமையும் கூட காரணமாகின்றது. முதியோரின் தசைகள் பலவீனப்படுவதால் ஹெர்னியா தாக்குதல் எளிதில் ஏற்படுகின்றது. பெண்களை விட ஆண்களுக்கு இடுப்பு பகுதியில் ஹெர்னியா பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. பருத்த பெண்கள், வயிறு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு இது தொடர்பான பாதிப்பு ஏற்படுகின்றது. 

சிலருக்கு பிறவியிலேயே ஏற்படும் சில குறைபாட்டினால் ஹெர்னியா பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மலச்சிக்கல் என்பது இல்லாமல் இருப்பது ஹெர்னியா தவிர்ப்பு முறையாக அமையும். பரம்பரை காரணமாகவும் ஹெர்னியா பாதிப்பு ஏற்படலாம். உடல் பருத்தும், வயிறு பருத்தும் இருப்பது ஹெர்னியா பாதிப்பினை ஏற்படுத்தும். ஆகவே எடையை குறைப்பதும், வயிற்றினைக் குறைப்பதும் மிக அவசியம். 

ஹெர்னியாவில் மேலும் சில பிரிவுகளும் உள்ளன. (உ.ம்) விளையாட்டால் ஏற்படும் அடியால் காலில் கூட இத்தகு பாதிப்பு ஏற்படலாம். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் நவீன அறுவை சிகிச்சைகள் உள்ளன. வாய்ப்பினை சீக்கிரம் பயன் படுத்திக் கொள்வதே நல்லது. 

\"\"

ஹெர்னியா பாதிப்பினைத் தவிர்க்க :

* முறையான உடற்பயிற்சி மிக அவசியம். ஆனால் அதிக பயில்வான் பயிற்சிகள், முரட்டுத்தனமான பயிற்சிகள் தேவையற்றது. 
* எடையினை சரியான அளவில் வைத்திருங்கள். 
* முறையான அளவான உணவு நன்மை பயக்கும். 
* புகை பிடிப்பதனை விட்டு விடுங்கள்.
* நன்கு நீர் குடியுங்கள்.
 
மனிதன் என்றாலே நல்ல உணவு மற்றும் தேவையானவைகளை உடலுக்குக் கொடுத்து ஆரோக்கியத்தினை பராமரிப்பது என்பதுதான். பிறந்த குழந்தை, சிறு குழந்தைகள், வளரும் பருவம், வாலிபம், முதுமை இதற்கேற்ப உணவும், வாழ்க்கை முறையும் மாறுபடும். 

* 3 நேர உணவு முக்கியம்தான். காலை, பகல், இரவு என மூன்று வேளை உணவு அவசியம்தான். ஆனால் இரவு உணவு பெரிதாக இருக்கக் கூடாது. மேலும் 3 வேளை உணவினை 6 வேளையாக சிறிது, சிறிதாக பிரித்தும் உண்பது நல்லது. 

* எப்பொழுதுமே முழு தானியம், பழம், காய்கறி, கொழுப்பு சத்து இல்லாத பால் இவை இருக்க வேண்டும். 
* கொழுப்பில்லாத அசைவம், முட்டை, சீன்ஸ், கொட்டைகள் அவசியம். 
* அதிக உப்பு, சர்க்கரை சேர்த்த உணவுகளை கண்டிப்பாய் ஒதுக்க வேண்டும். 
* அளவு என்பது மிக அவசியம். அள்ளி அள்ளி போட்டு நீங்களும் சாப்பிடாதீர்கள். பிறரையும் உபசரிப்பு என்ற பெயரில் கெடுக்காதீர்கள். 

* கோபமும், மனசோர்வும் மனம் போன படி சாப்பிடுவதாலும், மது குடிப்பதாலும் போகவே போகாது. 
* குழந்தைகளை பாராட்டுகிறேன் என்ற பெயரில் சர்க்கரை மிகுந்த உணவுகளைக் கொடுக்காதீர்கள். 
* அதிக வெய்யிலில் விருந்து போன்ற உணவுகள் வேண்டாம். 

* சைவ உணவு உங்கள் உடல் நலனுக்காகவே அறிவுறுத்தப் படுகின்றது. 
* பழங்களையும், காய்கறிகளையும் நன்கு கழுவாமல் உண்பது நோயை கை நீட்டி வரவேற்பதாகும். 
* சமைக்காத அசைவ உணவு மிக ஆபத்தானது. 
* உங்கள் உடல் பருமன் உங்களுக்கு எமனாகி விடக்கூடாது. 
* உழைப்பில்லாத உடம்பு இருதய நோயினையும் சில வகை புற்று நோய்களையும் கொண்டு வந்து விடும். 

உங்களுக்கு

* ஜுரம்
* ரத்த கசிவு
* சிறுநீர் செல்வதில் கடினம்
* அதிக வியர்வை
* அதிக வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுங்கள். உடனடி அறுவை சிகிச்சை அவசியம்.
* இக்காலத்தில் இருமல், தும்மல் இல்லாது இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. 

* அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் வரை கைய ருகில் ஒரு தலையணை வைத் துக்கொள்ளுங்கள்.
* இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் தலையணை வைத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் லேசாய் அழுத்திக் கொள்வது இதமாய் இருக்கும். 
* மெல்லிய பருத்தி ஆடை களை அணியுங்கள்
* மலச்சிக்கல் இல்லாதிருக்க தேவைப்படின் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். 
* நிமிர்ந்து நடங்கள். கூன் போடாதீர்கள்.
* கனமான பொருட்களை தூக்காதீர்கள். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.