ஹோட்டலில் கவனிக்க வேண்டியது உணவை மட்டுமல்ல

ஹோட்டலில் கவனிக்க வேண்டியது உணவை மட்டுமல்ல

வீட்டுச்சாப்பாடு ஆரோக்கியமானது. ஹோட்டல் சாப்பாடு ருசியானது. ஆரோக்கியமா, ருசியா என்றால் பலருக்கும் முதல் சாய்ஸ் ருசி என்றே இருக்கிறது. வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒருநாள் வீட்டில் சமைத்தாலே பெரிது என்கிற நிலை! இப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் பெருநகரங்களில் மட்டுமல்ல… சிற்றூர்களிலும் சகஜமாகிவிட்டது. வெளியில் சாப்பிடுவது தவறில்லை… ஆனால் அங்கே கவனிக்கவேண்டிய சில ஹெல்த்தி விஷயங்கள் உள்ளன. அவை…

* உணவை ஆர்டர் செய்யும்போதும் சாப்பிட்ட பின்னரும் தண்ணீர் பருகவும். அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பானதாக இருப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் உணவு எளிதாக செரிமானமாக உதவும். 

* கை கழுவும் இடத்தில் லிக்விடு சோப் (Hand wash) வைத்திருக்கிறார்களா, அது பயன்படுத்தத்தக்கது தானா, கைகழுவும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துப் பயன்படுத்த வேண்டும். கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது சிறந்தது.

* டிஷ்யூக்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், ரோல் வடிவில் உள்ள டிஷ்யூக்கள் அல்லது தனித்தனியாக இருப்பவற்றைப் பயன்படுத்துவது நல்லது. மற்றவரின் கைப்பட்டு நமக்கு வரும் டவல்களில் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* உணவு பரிமாறும் தட்டுகள், கப்புகள், ஸ்பூன்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கின்றனவா  என்பதை உறுதிசெய்துவிட்டுப் பயன்படுத்தவும்.

* ஹோட்டலில் நாம் சாப்பிடத் தேர்ந்தெடுக்கும் உணவு,  அதிக எண்ணெயில் தயாரிக்கப்படாததாக இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. உதாரணமாக, கிரில்டு (Grilled) அல்லது ஸ்டீம்டு (Steamed) வகைகளில் தயாரித்த உணவுகளைத் தேர்வு செய்யலாம். 

* அசைவ உணவுகளில் குறைந்த அளவு கொழுப்பு உள்ள இறைச்சி (Lean Meat) அல்லது சிக்கனின் நெஞ்சுப்பகுதி ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். செரிமானத்தையும் எளிதாக்கும்.

\"\"

* சாப்பிடும் உணவு 500 கலோரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே, சாலட் மற்றும் சூப் வகைகளை முதலில் உட்கொள்வது சிறந்தது.

* ஹோட்டலில் தயாரிக்கும் உணவில் சுவையைக் கூட்ட வெண்ணெய், எண்ணெய், வினிகர், உப்பு போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துச் சமைப்பார்கள். எனவே, ஆர்டர் செய்வதற்கு முன்னால், உணவில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன (Main Ingredients)  எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு நமக்கு ஏற்றதை ஆர்டர் செய்யலாம்.

* சாப்பிட்ட பிறகு, சிலருக்கு ஏதாவது பானங்களைக் குடித்தால்தான் திருப்தி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள், கார்பனேட்டட் பானங்களைத் தவிர்த்துவிட்டு ஃப்ரெஷ் ஜூஸ் பருகலாம்.

* கடைசியாகச் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்க்ரீம்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவும். அதிகக் கொழுப்பு இல்லாதவாறு, செயற்கை நிறமிகள் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பால் உணவைச் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் ஆடை நீக்கிய பால் (Skimmed Milk) அல்லது ஜூஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

* மீன் உணவை விரும்புகிறவர்கள் எண்ணெயில் பொறித்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது. 

* தேர்ந்தெடுக்கும் உணவானது அரிசி அல்லது கோதுமை உணவாக இருக்க வேண்டும். மைதா உள்ளிட்ட ரீஃபைண்டு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,  நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர் போன்றவற்றைத் தவிர்க்கலாம்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.