”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..!” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு

”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..!” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் உடல் முழுக்க தீ வைத்துக் கொண்டு 5 நிமிடம் 41 வினாடிகள் தீயோடு இருந்திருக்கிறார். இதுவே இப்போது வரை கின்னஸ் சாதனையாக இருக்கிறது. இதற்கும் நாம் பார்க்க இருக்கிற நபருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்கு முன் அவரைப் பற்றிய அறிமுகம்.

\"ஜெல்\"

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்க ஒருவர் வருகிறார். மருத்துவமனையில் தீக்காயங்களுடன் இருக்கிற நோயாளிகளைப் பார்த்து வருத்தப்படுகிறார். தீக்காயங்களோடு இருக்கிறவர்களோடு பேசுகிறார். அவர்களின் வலியும் வேதனையும் அவரை மனதளவில் பாதிக்கிறது. மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவர் தீக்காயம் மற்றும் வெப்பத்தில் இருந்து  தடுப்பதற்கு என்ன செய்வதென இரவு பகலாக யோசிக்க ஆரம்பிக்கிறார். தீக்காயம் மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து மனிதனை காத்துக்கொள்வதற்கு ஒன்றை கண்டுபிடித்ததாக வேண்டுமென முடிவு செய்கிறார். தீக்காயத்தின் வலியை உணர்ந்தவனால் மட்டுமே அதற்கான தீர்வைத் தேடித் தர முடியும் என நம்பியவர் தன்னுடைய  கைகளில் அவராகவே மூன்று முறை தீயால் சுட்டுக்கொள்கிறார். அந்த வலியோடு அவர் கண்டுபிடித்திருக்கிற விஷயம்தான்  “ஹீட் அண்ட் பயர் ரெசிஸ்டன்ஸ் வியரபில்” (Heat and fire resistence wearable)

\"ஜெல்\" 

சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் பாஸ்கர். தீயில் இருந்தும் வெப்பத்தில் இருந்தும் காத்துக்கொள்ளும் ஜெல் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படி என்ன அந்தக் கண்டுபிடிப்பில் இருக்கிறது என அவரைச் சந்தித்துப் பேசியபோது

 “இதைக்  கண்டுபிடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட 200 பொருள்களுக்கும் மேலாக என்னுடைய ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி இருப்பேன். அநேக முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. தீ தடுப்பிற்கு பயன்படுகிற முக்கியப் பொருளைக் கண்டுபிடிக்க ஆன  நாள்களை விட அந்தப் பொருள் எங்கே கிடைக்குமென தேடிய நாள்கள் அதிகம். பெங்களூரு சென்னை என அலைந்ததில் கடைசியாக ஒருவர் அந்தப் பொருளைக் கொடுத்து உதவினார். தீ தடுப்பை கண்டுபிடித்தவுடன் அந்த ஜெல்லை உலரவைத்து உள்ளங்கைகளில் தடவி அதன் மேல் பத்து சூடங்களை வைத்து கொளுத்தினேன் . 300 டிகிரி செல்ஷியஸ் வரை  இருந்த வெப்பத்தைக் கைகள் உணரவே இல்லை என்பதை உறுதிசெய்த பின்புதான் காப்புரிமைக்கு விண்ணப்பித்தேன். இந்த ஜெல்லை ஒரு துணியில் வைத்து தைத்து தொப்பிக்குள் வைத்து கொண்டால் காவல்துறையினரில் இருந்து சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வரை வெயிலின் வெப்பத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தீயணைப்புத்துறையில் இருக்கிறவர்கள் தங்களின் உடைக்குள் இந்த ஜெல்லை வைத்துக்கொண்டால்  சாதாரணமாக தீயை நோக்கி முன்னேறுகிற அளவை விட இன்னும் ஐம்பது சதவிகிதம் முன்னேறி  செல்லாம்” என்கிறார். தொப்பிக்குள் வைக்கிற அளவிற்கான ஜெல்லின் அதிகப்படியான விலையே 80 ரூபாய் மட்டும்தான். ஜெல் நிரப்பப்பட்ட உடையாகத் தயாரிக்கும் போது அதன் விலையில் மாற்றங்கள் வரும் என்கிறார்.

\"ஜெல்\"

பாஸ்கர் கண்டுபிடித்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரமாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய படைப்பை நிரூபிக்க பல இடங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். கண்டுபிடிப்பின் பயனை அறிந்தவர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை என்கிறார் வேதனையோடு. தனக்கான உதவிகள் கிடைத்தால் கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

இப்போது கின்னஸ் சாதனை பற்றிய முதல் பத்திக்கு வருவோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோசப்பின் சாதனையான 5 நிமிடம் 41 வினாடிகளை முறியடிக்க காத்திருக்கிறார் பாஸ்கர். தனது கண்டுபிடிப்பான ஜெல்லை உடையாக உடுத்திக்கொண்டு 6 நிமிடங்கள் வரை தீயோடு இருந்து புதிய கின்னஸ் சாதனை புரிய ஆயத்தமாகிவருகிறார். அதற்கான பணிகளில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறார் . படைப்புகளை நிரூபிக்கக் காத்திருப்பும் பொறுமையும் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்கிற பாஸ்கர் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துகள்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.