”கார்களையும் இயற்கையை அழிக்கும் எண்ணத்தையும் வெளிய விட்டுட்டு வாங்க”- பூமியின் சொர்க்கம் கீத்தோர்ன்

”கார்களையும் இயற்கையை அழிக்கும் எண்ணத்தையும் வெளிய விட்டுட்டு வாங்க”- பூமியின் சொர்க்கம் கீத்தோர்ன்

ஒரு நாளாவது நமக்கே நமக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கமும், நோக்கமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பிடித்த வாழ்க்கையை பிடிவாதத்தோடு வாழ்ந்திடும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அமைந்திடும். அப்படி ஓர் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் நெதர்லந்து நாட்டின் கீத்தோர்ன் நகர மக்கள். இது பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது.

13ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது இந்த நகரின் வரலாறு. அது அப்போது அழகிய கிராமம். ஒரு பெரிய வெள்ளம் வருகிறது. ஊரே காலியாகிவிடுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கு வந்து ஒரு கூட்டம் குடியேறுகிறது. கிராமத்தில் எங்கு பார்த்தாலும் ஆடுகளின் கொம்புகள் குவிந்துக் கிடந்தன. அதைப் பார்த்து எல்லோரும் அந்த இடத்திற்கு \" Goat Horn \" என்று சொல்ல... கால மாற்றத்தில் அது மருவி \" Geithoorn \"\" என்றாகிவிட்டது. 

\"பூமியின்

இந்த நகரில் தார்ச்சாலைகளே கிடையாது. முழுக்க முழுக்கப் படகு போக்குவரத்து மட்டுமே. சமீபத்தில்தான் கால்வாயை ஒட்டி சிறிய சாலை, சைக்கிள் ஓட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் மொத்தம் 2400 பேர் வசித்து வருகிறார்கள். 1100 வீடுகள் இருக்கின்றன. 600க்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்குவது தொடங்கி, குழந்தைகள் பள்ளிக்கூடம் போவது வரை எல்லாவற்றிற்குமே படகைத் தான் பயன்படுத்துகிறார்கள். 

இங்கு யான் என்று ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்தப் பகுதியில் ஓடும் பெரும்பாலான படகுகளைக் கட்டியவர். சமதளம் கொண்ட \"புன்டர் \" ( Punter ) எனும் வகையிலான படகினை இவர் கட்டுகிறார். இந்த வகைப் படகின் பிறப்பிடம் கீத்தோர்ன்தான். இது அல்லாமல் சில ஃபைபர் படகுகளும் இங்கிருக்கின்றன. இந்த அனைத்துப் படகுகளுமே அதிக சத்தம் எழுப்பாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்களின் இரைச்சல், படகுகளின் இரைச்சல், புகை, டிராபிக் என வழக்கமான நகரங்கள் சந்திக்கும் எந்தச் சீர்கேடுகளுமே கீத்தோர்னை நெருங்கவில்லை. 

\"பூமியின்

கால்வாயின் இரு பக்கங்களும் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்வாயைக் கடக்க ஆங்காங்கே மரப் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மொத்தம் 176 மரப்பாலங்கள் இருக்கின்றன. நம் ஊரில் டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல் அங்கு \" ப்ரிட்ஜ் கண்ட்ரோலர் \" ( Bridge Controller ) இருக்கிறார். அவர் பெரிய படகுகள் கடக்கும் போது பாலத்தை உயர்த்தி, திறந்து விடுகிறார். 

\" ஃபையர் போட் \" ( Fire Boat ) என்ற ஒரு பாதுகாப்புப் படகு அங்கு வலம் வந்துக் கொண்டிருக்கும். வீடுகளில் தீப்பிடித்துவிட்டாலோ, படகுகள் கவிழ்ந்து விட்டாலோ, யாரேனும் மூழ்கி விட்டாலோ அல்லது வேறேதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ அவர்களை இந்தக் குழு காப்பாற்றும். 
கீத்தோர்ன்னில் இருக்கும் வயல் வெளிகளையும், மாடுகளையும் பார்த்துக்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மாடுகளிலிருந்து பால் கறந்து வீடுகளுக்கு விநியோகம் செய்கிறார். 

\"பூமியின்

ஆம்ஸ்டர்டாம் நகரின் கிழக்கில் 75 மைல்கள் தொலைவில் அமைந்திருக்கும் கீத்தோர்ன் நகரம் குளிர்காலங்களில் கடுமையான பனிப் பொழிவைக் காணும். கால்வாய் மொத்தமும் உறைந்துப் போய்விடும். அந்தக் காலங்களில் மக்கள் கால்வாயின் உறைந்தப் பனியின் மீது ஐஸ் ஸ்கேட்டிங் செய்து, அதையே தங்களுக்கான பயண வாகனமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

\"பூமியின்

சமீபகாலங்களில் இந்நகரைப் பற்றிக் கேள்விப்பட்டு நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைத் தர ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களை அன்போடு வரவேற்று, தங்கள் வீடுகளுக்குள் கூட அனுமதித்து உபசரிக்கிறார்கள். தங்கள் ஊருக்கு வந்து, தங்கள் வாழ்வைப் பார்க்க விரும்பும் ஊர்சுற்றிகளுக்கு அவர்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றேயொன்றுதான்...

 \" உங்கள் வாகனங்களை ஊரின் எல்லையிலேயே நிறுத்திவிடுங்கள். அதோடு உங்களின் கவலைகளையும், சோகங்களையும், இயற்கைக்கு எதிரான எண்ணங்களையும், துவேஷங்களையும், பொறாமைகளையும், நகரை நாசப்படுத்தும் செயல்களையும் கூடத்தான். அப்போதுதான் நாங்களும் நன்றாக வாழமுடியும். நீங்களும் சந்தோஷமாக வந்து போக முடியும்...\"

\"பூமியின்

அவர்களின் அந்தக் கோரிக்கையையும், அன்பையும், வரலாற்றையும் வெளிப்படுத்தும் விதமாக அந்த மஞ்சள், சிகப்பு, நீலக் கொடியில் ஆட்டின் இரு கொம்புகள் அத்தனை வீரமாக வீற்றிருக்கின்றன.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.