மாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய் வராமல் தடுக்கும் பலாப்பழம்..!

மாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய் வராமல் தடுக்கும் பலாப்பழம்..!

‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா\' என்றார் பாரதிதாசன். 
கவிஞர் காசி ஆனந்தனோ, ‘வேரொடு பலாக்கனி பழுத்துத் தொங்கும் வெள்ளாடு அதன்மீது முதுகு தேய்க்கும்’ என்றார். 

\"பலாப்பழம்\"

மா, பலா, வாழையை முக்கனிகளாகச் சொல்வார்கள். இவற்றில் இரண்டாவதான பலாவின் பூர்வீகம் எது என்பது தெரியவில்லை. ஆம்... எங்கே தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தென்னிந்தியாவில் சிறிய நார் உள்ள மிகவும் இனிப்பான கூழச்சக்கா, பெரிய சுவையான விற்பனைக்கேற்ற சுளைகளைக்கொண்ட கூழப்பழம் போன்ற பலாக்கள்தான் வளர்கின்றன. இவைதவிரக் கறிப்பலா, ஆசினிப்பலா, வருக்கைப்பலா போன்றவையும் உள்ளன. இலங்கையின் தேன் பலா மிகச்சிறந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பலாப்பழம் விரும்பி உண்ணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. 

பலாவின் தாவரவியல் பெயர் ஆட்ரோகார்பஸ் ஹெட்ரோஃபில்லஸ் (Artocarpus heterophyllus). பலாவுக்கு ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் உள்ளிட்ட வேறு பெயர்கள் உண்டு. இந்தியில் பனஸ்; மலையாளத்தில் சக்கே; கன்னடத்தில் பேரளே என அழைக்கிறார்கள். 

பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், கரோட்டின், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. 

\"பலா\"

ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை அதிகம் இருப்பதாலேயே பலாப்பழம் இனிப்புச்சுவையுடன் இருப்பதற்குக் காரணமாகிறது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடியது இது. ஆனாலும் பலாப்பழத்தை மற்ற பழங்களைப்போல வெறுமனே சாப்பிடுவதைவிடத் தேன், நெய், வெல்லம், பனங்கற்கண்டு என இவற்றில் ஏதாவது ஒன்றைச்சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் முழுமையான பயனை நமக்குப் பெற்றுக்கொடுப்பதோடு உடல் நலனுக்கும் ஏற்றதாக அமைகிறது. பலாப்பழத்துடன் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். பலாச்சுளைகளைத் தேன் ஊற்றி ஊற வைத்து பிறகு நெய் சேர்த்துக் கலக்கி மீண்டும் ஊற வைக்க வேண்டும். இப்படிக் காலையில் ஊற வைத்த பலாப்பழத்தை மாலையில் சாப்பிட்டு வந்தால் மூளை நரம்புகள் வலுவடைந்து மனம் புத்துணர்ச்சி பெறும். 

பலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஜீரணக்கோளாறுகள் சரியாவதோடு இருமல் கட்டுப்படும். மேலும் நாவறட்சி, களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும். பலாச்சுளைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி மண் சட்டியில் போட்டு பால் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும். இதை டி.பி., வாத நோய், பித்தம், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார், மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 

பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ரத்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

\"பலா

மக்னீசியம், கால்சியம் சத்துகள் இருப்பதால் எலும்புகள் பலமடையும். ஆகவே குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்து வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் பார்வைக்குறைபாடுகள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும். பலாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால்  நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், இது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். 

லிக்னன்ஸ் (ஆன்டிஆக்ஸிடன்ட்), ஆர்கானிக் கூட்டுத் தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியது. மேலும், உடல் முதிர்ச்சி ஆகாமல் என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது. செரிமானக்கோளாறு, வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பெருங்குடலை சுத்தம் செய்ய உதவக்கூடியது. பலாப்பழத்தில் தேவையான தாமிரச்சத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பலாவில் பழம் மட்டுமல்லாமல் அதன் மற்ற பகுதிகளும் மருத்துவக்குணம் வாய்ந்தவையே. பலா வேரை நீர் விட்டு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை வடிகட்டிப் பருகினால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும். 

\"பழுத்த

பலா இலையைக் காய வைத்துப் பொடியாக்கி தேனில் கலந்து காலைவேளையில் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் ஆறும்; வாய்வுத்தொல்லை நீங்கும். இலையை நறுக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் காலையில் குடித்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்; பல்வலி நீங்கும். பலா இலைக்கொழுந்தை மையாக அரைத்து சொறி, சிரங்குகளின்மீது பூசினால் குணமாகும். 

பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையல் செய்ய வேண்டும். பலா பிஞ்சுடன் பூண்டு, மிளகு, லவங்கப்பட்டை, தேங்காய்த்துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கோளாறுகள், நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும். வாதம், பித்தம், கபம் சீராகும். நரம்புத்தளர்ச்சி விலகும். மேலும், குழந்தை பெற்ற தாய்மார் சாப்பிடுவதால், பால் சுரக்கச்செய்யும்; மூளைக்குப் பலம் சேர்க்கும். (பலாப்பழம், பிஞ்சு என எதையுமே அதிக அளவு சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறுவலி, செரியாமை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) 

 

\"பலா

பலாக்கொட்டைக்கும் மருத்துவக்குணம் உண்டு. அதைத் தீயில் சுட்டும், அவித்தும் சாப்பிடுவார்கள். இதனால் உடல் வலுவாவதோடு வாயுத்தொல்லை நீங்கும். பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டு வயிற்றுப்பொருமலால் அவதிப்படுபவர்கள், ஒரு பலாக்கொட்டையைப் பச்சையாக மென்று தின்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும். 

பலாக்கொட்டையைக் காய வைத்து பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து விழுதாக்கி முகத்தில் தடவ வேண்டும். அது நன்றாகக் காய்ந்ததும் கழுவி வந்தால் பட்டுப்போன்ற சருமத்தைப் பெறலாம். 

நன்கு கனிந்த மா, பலா, வாழை போன்றவற்றைச் சிறு துண்டுகளாக்கி மண் பாத்திரத்தில் போட்டு தேன், பனங்கற்கண்டு சேர்த்து லேகியப் பதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சத்துகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குறிப்பு: பலாப்பழத்தை சுளையாக உரித்தே சாப்பிடுகிறோம். அதன் விதைகளை அகற்றுவதோடு அதில் ஒட்டியிருக்கும் சிறு சிறு இழைகளையும் அகற்றிவிட்டு சாப்பிட வேண்டும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.