2016-ல் அறிமுகமான ஸ்கூட்டர்கள் - ஒரு சிறப்புப் பார்வை!

2016-ல் அறிமுகமான ஸ்கூட்டர்கள் - ஒரு சிறப்புப் பார்வை!

கடந்த ஆண்டில்தான் சில தனித்தன்மையான, சுவாரஸ்யமான தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகமாயின என்றால் அது மிகையில்லை. 150சிசி பைக்கின் குணாதிசியங்களுடன் கூடிய ஏப்ரிலியா SR150, பைக் பாதி, ஸ்கூட்டர் மீதி என க்ராஸ்ஓவர் டூ-வீலராக இருக்கும் ஹோண்டா நவி போன்ற வித்தியாசமான ஸ்கூட்டர்கள் வாயிலாக, இந்தியாவின் ஸ்கூட்டர் மார்க்கெட் எந்தளவிற்கு மாறியுள்ளது என்பதை உணர்த்துகின்றன. ஆக 2016-ல், இந்தியா பெற்ற முக்கியமான டூ-வீலர்களையும், அதன் மினி ரெவ்யுவையும் பார்ப்போமா? 
 
மஹிந்திரா கஸ்ட்டோ 125
 
\"\"
 
யுட்டிலிட்டி வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற மஹிந்திராவால் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டர், கஸ்ட்டோ 110. இந்தப் பெருமையைச் சொல்லி மட்டும் ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடியுமா? அதனால் மேலும் சக்தி வாய்ந்த கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை இந்தநிறுவனம் களமிறக்கியிருக்கிறது. தோற்றத்தில், கஸ்ட்டோ 110 போலவே இருக்கிறது 125சிசி மாடல். ஆனால் டூயல் டோன் கலர்களால் இரண்டையும் வித்தியாசப்படுத்த மஹிந்திரா முயற்சித்துள்ளது தெரிகிறது. கஸ்ட்டோவின் செல்லிங் பாயின்ட்டாக, இதன் சிறப்பம்சங்களைக் குறிப்பிடலாம். காரில் இருப்பதுபோல ஸ்டைலான ஃப்ளிப் கீ, ஃபாலோ மீ லேம்ப்ஸ், ஃபைண்டு மீ லேம்ப்ஸ், அட்ஜஸ்டபிள் சீட், போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் எனப் பட்டியல் நீள்கிறது.
 
கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் இருப்பது, ஸ்மூத்தான 124.6 சிசி இன்ஜின். கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரோடு ஒப்பிடும்போது, பவரில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், ஓட்டும்போது இரண்டுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. அதற்காக இதை eபெஸ்ட் இன் கிளாஸ்・பெர்ஃபாமென்ஸ் என்று சொல்ல முடியாது. டிவிஎஸ் ஜூபிட்டரைத் தொடர்ந்து, 12 இன்ச் வீல்களைக் கொண்ட ஒரே ஸ்கூட்டர் இதுதான். சஸ்பென்ஷன் செட்-அப் மனநிறைவைத் தந்தாலும், பிரேக்ஸ் சுமார் ரகம்தான். எனவே கஸ்ட்டோ 125-ன் முன்பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக் கொடுக்க வேண்டியது பற்றியும், டீலர் நெட்வோர்க்கை உயர்த்துவது பற்றியும் மஹிந்திரா தீவிரமாக யோசித்தாக வேண்டும்!
 
சுஸூகி ஆக்ஸஸ் 125
 
\"\"
 
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரான ஆக்டிவாவுக்குப் போட்டியாக, சுஸூகி களமிறக்கிய ஸ்கூட்டர்தான் ஆக்ஸஸ். ஜிக்ஸர் பைக்குக்கு முன்பு, சுஸூகியின் பெயர் சொல்லும் பிள்ளையாக இந்த ஸ்கூட்டர்தான் இருந்தது. இந்தியாவில் வேகமான ஸ்கூட்டர்களுக்கான டிமாண்ட் உருவாவதை உணர்ந்த சுஸூகி, பிக்-அப்பிற்குப் புகழ்பெற்ற தனது ஆக்ஸஸ் 125-ன் அடுத்த தலைமுறை மாடலை, 2016-ல் அறிமுகப்படுத்தியது. இதன் டிஸைனில் பெரியளவில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வெஸ்பா/ஃபேஸினோ போல சில ரெட்ரோ டச்களை இங்கும் காண முடிகிறது. ஆப்ஷனலாக வரும் அலாய் வீல்களும், முன்பக்க டிஸ்க் பிரேக்கும் க்ளாஸ். ஆக்ஸஸில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதுடன், சிறிய ஸ்கிரீனைக் கொண்டிருக்கும் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் தெளிவாக இருக்கிறது.
 
முற்றிலும் புதிய இன்ஜின் மற்றும் சேஸி காரணமாக, பழைய ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரைவிட புதிய மாடலின் எடை 10 கிலோ குறைவாக இருக்கிறது! இது ஸ்கூட்டரின் புதிய 124சிசி இன்ஜினின் பெப்பியான பெர்ஃபாமென்ஸுக்கும், மைலேஜுக்கும் உதவிகரமாக இருக்கிறது. முன்பக்கத்தில் இருக்கும் 12 இன்ச் வீல் மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் விளைவாக, ஓட்டுதல் தரம் மற்றும் நிலைத்தன்மை அசத்தல் ரகம். ஆக மொத்தத்தில், சிறப்பம்சங்களில் பின்தங்கும் ஆக்ஸஸ் 125, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்படியான டிஸைன், சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றுடன், 125சிசி செக்மென்ட்டின் ராஜாவாகத் திகழ்கிறது.
 
ஹோண்டா நவி
 
\"\"
 
வழக்கமான டிஸைனில் டூ-வீலர்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹோண்டா, நவி வாயிலாக அந்த எண்ணத்தை உடைத்தெறிந்துள்ளது. மோட்டார்சைக்கிள் போன்ற டிஸைனும், ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் பேக்கேஜூம் கலந்த கிராஸ்ஓவர் டூ-வீலராக டிஸைன் செய்யப்பட்டுள்ள நவி, பளிச் பளிச் கலர்களில் கண்ணைக் கவர்கிறது. ரைடரின் கால்களுக்கு அருகே மிகப்பெரிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது. நவியின் விலை குறைவுதான் என்றாலும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்விட்ச்களின் தரம் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆக்டிவாவில் இருக்கும் அதே ஸ்மூத்தான 110சிசி இன்ஜின்தான் நவியிலும் உள்ளது.
 
ஆக்டிவாவை விட நவியின் எடை 7 கிலோ குறைவு என்பதால், பெர்ஃபாமென்ஸில் குறை இல்லை. இதனுடன் முன்பக்க 12 இன்ச் வீல் மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் சேரும்போது, நவியை வளைத்து நெளித்து ஓட்ட வசதியாக இருக்கிறது. ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது குறைவான எடை காரணமாக, நவி சற்று அலைபாய்வது போன்ற உணர்வு எழுகிறது. மேலும் சிறிய 3.8 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான் என்பதால், தோராயமாக 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறையாவது டேங்க்கை நிரப்ப வேண்டி இருக்கும் என்பது நெருடல். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிட்டி கம்யூட்டிங்கை எவ்வுளவு ஃபன்னாக மாற்றலாம் என்பதற்கு நவி சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதே உண்மை.
 
ஏப்ரிலியா SR150
 
\"\"
 
பொதுவாகவே, ஸ்கூட்டருக்கும் பெர்ஃபாமென்ஸுக்கு ஏழாம் பொருத்தம்தான். ஆனால் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் போல, பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டர் எனும் புதிய செக்மென்ட்டை இந்தியாவில் உருவாக்கிய பெருமை, ஏப்ரிலியா SR150-யையே சேரும். அதுவும் RSV4 போன்ற அதிரடியான பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் ஸ்கூட்டர் என்பதால், இது கூடுதல் கவனத்தைப் பெற்றது என்றே சொல்லலாம். எனவே ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தையும், ஸ்கூட்டரின் எளிமையான ஓட்டுதலையும் ஒருசேர தந்ததில் ஏப்ரிலியா வெற்றி பெற்றுவிட்டது. அது GEN-Z இளைஞர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாகவும் இருக்கிறது என்பதே நிதர்சனம். ஏப்ரிலியா SR150-ன் ஷார்ப்பான டிஸைன் மற்றும் ஸ்போர்ட்டியான கலர் ஆப்ஷன்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி. டூயல் டோன் சீட்கள், ஃபினிஷ் செய்யப்பட்ட விதம் அழகு.
 
ஆனால் ஹோண்டா டியோ ஸ்கூட்டரைப் போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இந்த ஸ்கூட்டருக்குப் பொருத்தமாக இல்லை. தவிர சிறப்பம்சங்களும் குறைவுதான். உதாரணத்துக்கு பாஸ் லைட் ஸ்விட்ச் இருந்தாலும், ஸ்கூட்டருக்கு அடிப்படையான பிரேக் லாக் க்ளாம்ப், யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட், ரிமோட் சீட் லாக் மற்றும் ஃப்யூல் டேங்க் முடி போன்றவை இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. ஏப்ரிலியா SR150-யில் இருப்பது, வெஸ்பா SXL/VXL 150 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 154.8சிசி இன்ஜின்தான். இது வெஸ்பாவைவிட குறைவான பவரையே வெளிப்படுத்தினாலும், ஏப்ரிலியாவின் ஸ்பெஷன் டியூனிங் காரணமாக, வெஸ்பாவைவிட வேகமாக இருக்கிறது. 0 - 80 கிமீ வேகத்தை \'\'ஜஸ்ட் லைக் தட்\'\' கடக்கும் ஏப்ரிலியா SR150, பெர்ஃபாமென்ஸில் மற்ற ஸ்கூட்டர்களை ஊதித் தள்ளுகிறது.
 
14 இன்ச் அலாய் வீல்கள் - டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் - முன்பக்க டிஸ்க் பிரேக்/பின்பக்க டிரம் பிரேக் என பைக்கில் இருக்கும் சமாச்சாரங்கள் இங்கும் தொடர்வது ப்ளஸ். எனவே பைக் போன்ற ஹேண்ட்லிங் கிடைப்பதுடன், விரட்டி ஓட்டுவதற்கும் இது ஏற்றதாக இருக்கிறது. ஆனால் இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே வீட்டில் சூப்பர் பைக் வைத்திருப்போருக்கும், அதிக கார்கள் வைத்திருப்போருக்கும் பெஸ்ட் சிட்டி பார்ட்னராக ஏப்ரிலியா SR150 திகழ்கிறது. ஏனெனில் இதன் விலையும், 125சிசி கம்யூட்டர் பைக்குகளைவிடக் கொஞ்சம்தான் அதிகம்!
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.