
30 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா: ஏர்செல் புதிய சலுகை
ரிலையன்ஸ் ஜியோ தனது சலுகைகளை மாற்றியமைத்தைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ஏர்செல் நிறுவனம் ரூ.333 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. RC 333 திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி 3ஜி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் தினசரி டேட்டா பயன்பாடு சார்ந்து எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. முதற்கட்டமாக இந்த சலுகை கர்நாடகா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சலுகை மற்ற மாநிலங்களிலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது, எனினும் டேட்டா வேகம் 3ஜி-யில் மட்டுமே இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை இ-ரீசார்ஜ் அல்லது 121333# என்ற USSD மூலமாகவும் பெற முடியும். முன்னதாக ரூ.348 விலையில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகளை வழங்கியது, இதில் மொத்தம் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோவின் சமீபத்திய அறிவிப்பின்படி தற்சமயம் ரூ.84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி) ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. ரூ.309 மற்றும் ரூ.509 திட்டங்களில் முறையே தினமும் 1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 56 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜியோ திட்டங்களில் தினசரி டேட்டா பயன்பாட்டு அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்செல் புதிய அறிவிப்புகளில் டேட்டா பயன்படுத்த எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.