4 குடம் நீரைச் சுமக்க வேண்டாம்... உருட்டிச் செல்லலாம்! தேனி ஆச்சரியம்

4 குடம் நீரைச் சுமக்க வேண்டாம்... உருட்டிச் செல்லலாம்! தேனி ஆச்சரியம்

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம், தண்ணீர் தட்டுப்பாடுகள் இருக்கும் கிராமங்களுக்கு \"தண்ணீர் உருளை\" எனப்படும் தண்ணீர் கேன்களை அறிமுகப்படுத்தியது. வடமாநில கிராமங்களைப் பொறுத்தவரை, ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல் தூரம் பயணிக்க வேண்டி சூழல் இன்றும் நிலவுகிறது. கையில் ஒரு குடம் இடுப்பில் ஒரு குடம் என அப்பெண்கள், கடும் வெயிலில் கால் கடுக்க தண்ணீருக்காக அலையும் நிலையைக் கண்ட அந்த தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது தான் இந்த தண்ணீர் உருளை.

\"\"

 

இதன் மூலம் ஒரே நேரத்தில் நான்கு குடம் தண்ணீரைப் பிடித்து வர முடியும். அதாவது கிட்டத்தட்ட 45 முதல் 50 லிட்டர் தண்ணீர் வரை இதனுள் நிரப்பிக் கொள்ளலாம். உருளைக் கேனோடு பொருத்தப்பட்டிருக்கும் இரும்புக் கம்பி மூலம் அதனை எளிமையாக தள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடலாம். கடந்த இரண்டு வருடங்களாக மகாராஷ்ட்ர கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் உருளையின் எண்ணிக்கையை இந்த வருடம் 3 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தையும் அதற்கு காரணமாக சொல்கிறது.

தமிழ்நாட்டில் யாருமே கண்டிராத இந்த தண்ணீர் உருளையை  தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நாம் கண்டோம் என்று சொன்னார் நம்புவீர்களா? 

ஆம்… சாலை வழியாக அந்தப் பகுதியைக் கடந்து சென்றபோது, சிறுவர்கள் சிலர் டயர் வடிவம் கொண்ட உருளை ஒன்றை சாலையில் உருட்டிச் சென்று கொண்டிருந்தனர். சற்று உற்றுக்கவனித்த போதும், அது என்ன உருளை  என்பதை நம்மால் முதலில் தீர்மானிக்க முடியவில்லை. வேகமாக அதனை உருட்டிக்கொண்டு சென்ற அந்த சிறுவர்களை நிறுத்திப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு தண்ணீர் நிரப்பும் உருளை வடிவ கேன் என்று. அதன் பக்கவாட்டு பகுதியில் தண்ணீர் நிரப்பும் பகுதி ஒன்று மூடி போட்டு மூடப்பட்டிருந்தது.


யார் இதைக் கொடுத்தது? என்று அச்சிறுவர்களிடம் நாம் கேட்க, “ஊராட்சியில் இருந்து குடுத்தாங்க. அந்தப் பக்கமா தான் இருக்கு ஊராட்சிமன்றம்.” என்று கைகாட்டி விட்டு தண்ணீர் உருளையை உருட்ட ஆரம்பித்தனர்.

நேராக கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்று தண்ணீர் உருளை பற்றி விவரம் கேட்டோம். ”ஊராட்சியில் இருந்து கடமலைக்குண்டு கிராமத்துக்கு மொத்தமாக 12 கேன்கள் கொடுத்திருக்கிறோம். அந்த ஒரு கேன் மூன்று குடம் தண்ணீர் பிடிக்கிறது. எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து குழாய்களிலும் தற்போது தண்ணீர் வரவில்லை. வைகை வறண்டு கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் எங்களுக்கு தண்ணீர். இப்போதைக்கு ஒரே ஒரு குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அந்த ஒரு குழாய் தண்ணீரை ஊர் முழுவதும் கொண்டு சேர்க்கவே இந்த தண்ணீர் உருளை. எந்த வீட்டுக்கு தண்ணீர் வேண்டுமோ அந்த வீட்டில் இருந்து ஒருவர் நேராக ஊராட்சி மன்றத்துக்கு வந்து இந்த கேனை எடுத்துக்கொண்டு போகலாம். தண்ணீர் பிடித்த பிறகு அதை மற்றொரு வீட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட வேண்டும். என்ன தான் நான்கு குடம் தண்ணீர் பிடித்தாலும், அதனை தள்ளுவது மிக எளிமை. மேலும், இது ஒரு விளையாட்டு போன்று இருப்பதால், பெரும்பாலும் சிறுவர்கள் தான் தண்ணீர் பிடிக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களைத் தான் நீங்கள் சாலையில் பார்த்திருப்பீர்கள். மழைக்காலம் ஆரம்பித்திருப்பதால் இனி அந்த கேன் தேவைப்படாது என்று நினைக்கிறோம்.” என்றனர்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.