82 வயதில் ஐபோன் செயலி எழுதிய மூதாட்டி! - ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் ஆப்

82 வயதில் ஐபோன் செயலி எழுதிய மூதாட்டி! - ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் ஆப்

ப்பானைச் சேர்ந்த மஸாகோ வகாமியா (Masako Wakamiya) என்ற 82 வயது மூதாட்டி, \'உலகின் மூத்த ஐபோன் ஆப் டெவலப்பர்\' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

டோக்கியோவை அடுத்த சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த வகாமியா, ஐபோன் செயலிகள் எழுதக் கற்றுக்கொண்டதன் பின்னணி சுவாரஸ்யமானது. சமுதாயத்தைப் போலவே டெக் துறையிலும் மூத்த குடிமக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கோபம் அவருக்கு தொடக்கம் முதலே இருந்துவந்திருக்கிறது. உலகில், மூத்த குடிமக்கள் அதிகம் பேர் வாழும் ஜப்பானில், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வந்த அவர், \'மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கப்பட  வேண்டும்\' என்றும் விரும்பியுள்ளார். இதற்காக, ஆப் டெவலப்பர்களுக்கு அவர் பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் விடுத்துவந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கைக்கு டெவலப்பர்கள் செவிசாய்க்காத நிலையில், அவரே நேரடியாகக் களமிறங்கியுள்ளார். 

1990-களில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், செயலிகளுக்கான கோடிங் எழுதுவதுகுறித்து இணையதளத்தின் உதவியுடன் கற்றுத் தேர்ந்தார். அத்துடன், 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்காக ஹினாடன் (Hinadan) என்ற பிரத்யேக செயலியையும் வடிவமைத்துள்ளார். ஜப்பானில், ஆண்டுதோறும் நடைபெறும் ஹினா மட்சூரி (Hina Matsuri) என்ற பொம்மைத் திருவிழாவை அடிப்படையாக வைத்து அந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திருவிழாவில், மன்னருக்கும் மன்னரின்  குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் பொம்மைகளைப் பரிசாக அளிப்பர். அந்தப் பொம்மைகள்  வரிசையாக அடுக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். நவராத்திரி கொலுவில் பொம்மைகளை அடுக்குவது போன்ற அந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து, மூத்த குடிமக்களின் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் ஹினாடன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐபோனில் இயங்கும் ஜப்பானில், நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்ற அந்தச்  செயலி, ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கின் கவனம் ஈர்த்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் டெவலப்பர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு, வாகாமியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட உலகின் மூத்த ஆப் டெவலப்பர் வாகாமியாதான்.

\'உங்களுக்கு வயதாகிவிட்டால், நிறைய இழப்புகளை நீங்கள் கடந்துசெல்லவேண்டி இருக்கும். வேலை, கணவன், தலைமுடி, கண்பார்வை உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் இழப்புகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டால், அது உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்\' என்கிறார் இந்த 82 வயது  ஆப் டெவலப்பர்.   

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.