ட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் | Twitter bitcoin scam

 ட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் | Twitter bitcoin scam

கோடிக்கணக்கான பாலோயர்களை கொண்டிருப்பவர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனரும் பில்லியருமான எலான் மஸ்க். நேற்று அவரது ட்விட்டர் கணக்கில் பின்வரும் பதிவு இடப்பட்டது. அதில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பின்வரும் கணக்கிற்கு நீங்கள் $1000 டாலர் அனுப்பினால் நான் உங்களுக்கு $2000 அனுப்புகிறேன். அதுவும் அடுத்த 30 நிமிடங்களுக்கு தான் இதை செய்வேன் என குறிப்பிடப்பட்டு இருந்தது. சில சமயங்களில் வேடிக்கையாக பேசக்கூடிய மற்றும் செயல்படக்கூடிய பழக்கமுடையவர் எலன். ஆகையால் இந்த இடுகையைக்கண்டு பலர் ஆச்சரியமடைந்தனர். பலர் நம்பவும் செய்திருக்கலாம்.

twitter bitcoin hacking - ட்விட்டர் வரலாற்றில் மோசமான ஹேக்கிங் | பிட்காயின் ஸ்கேம் | Twitter bitcoin scam

ஆனால் அடுத்தடுத்து அமெரிக்க முன்னால் அதிபர் பாரக் ஒபாமா, ஜோ பிடன் ஜெப் பெஸோஸ்,பில்கேட்ஸ்,ஆப்பிள் உள்ளிட்ட பிரபலங்களின் கணக்குகளில் இருந்தும் இதே மாதிரியான இடுகைகள் பதிவிடப்பட்டன. சில கணக்குகளோடு முடிந்துவிடாமல் பல்வேறு கணக்குகள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டு அதில் பிட்காயினை அனுப்பினால் இரண்டு மடங்கு திருப்பி தருவதாகக்கூறி பதிவுகள் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தன. இதையடுத்து தான் ட்விட்டர் வாசிகள் விழித்துக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த தாக்குதல் அனைத்தும் வெரிபை செய்யப்பட்ட [Blue Tick] கணக்குகளை மையப்படுத்தியே நடைபெற்று இருப்பதனால் ட்விட்டர் நிர்வாகவும் கலக்கமடைந்தது. 

அமெரிக்க நேரப்படி ஜூலை 15, 4PM ET நேரத்தில் இந்த தாக்குதல் துவங்கி இருக்கிறது. இந்திய நேரப்படி ஜூலை 16 அதிகாலை 1.30 AM. பெரும்பான்மையான கணக்குகளில் இடப்பட்ட பதிவுகளில் ஒரே பிட்காயின் அக்கவுண்ட் எண் தான் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். 

இந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர் நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பிறகு தான் ட்விட்டர் நிர்வாகம் “இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்துகொண்டிருப்பாகவும் இதனை சரிசெய்திட நாங்கள் உழைத்து வருகிறோம். விரைவில் உங்களுக்கு அதை தெரிவிக்கிறோம்” என ட்வீட் செய்தது.  [“We are aware of a security incident impacting accounts on Twitter. We are investigating and taking steps to fix it. We will update everyone shortly.”]

உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்திட வெரிபை செய்யப்பட்ட [Blue Tick] கணக்குகளில் இருந்து ட்வீட் செய்ய முடியாதபடி அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மேலும் அந்த நேரத்தில் பயனாளர்கள் ட்வீட் செய்யவோ அல்லது கடவுச்சொல்லை மாற்றவோ முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டர் வரலாற்றில் இப்படி ட்வீட் செய்ய முடியாதபடி அனுமதியை நிறுத்தி வைத்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்தப்பிரச்னைகள் துவங்கிய 4 மணி நேரத்திற்கு பிறகு இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி அளவில் தான் வெரிபை செய்யப்பட்ட [Blue Tick] கணக்குகளில் இருந்து ட்வீட் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் சில சமயங்களில் போகலாம் வரலாம் எனவும் கூறப்பட்டது.  இந்த தாக்குதல் குறித்து ட்விட்டர் CEO ஜாக் டோர்சி [Jack Dorsey] செய்த ட்வீட்டில் “ட்விட்டரில் எங்களுக்கு கடுமையான நாள் இது. நாங்கள் இந்த பிரச்சனை குறித்து ஆராய்ந்து வருகிறோம். என்ன நடந்தது என்பதை சரியாக புரிந்துகொள்ள எங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” என தெரிவித்து இருந்தார்.

சில நிமிடங்களில் ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் அளிக்கப்பட்டு இருக்கலாம்

இப்படி மிக முக்கியமானவர்கள் மற்றும் பல முன்னனி நிறுவனங்களின் கணக்குகளை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் ஒரு தனி நபரோ அல்லது குழுவோ மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. 

இந்த ஹேக்கிங் நடைபெற்ற சில நிமிடங்களில் குறிப்பிட்ட கணக்கிற்க்கு மட்டும் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஏமாற்று வேலைகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது என்றாலும் கூட ஒட்டுமொத்தமாக முன்னனி நபர்கள், கம்பெனிகளின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதன் மூலமாக ஏமாற்று வேலையை அரங்கேற்றியிருப்பது நல்லதல்ல என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். ட்விட்டரில் நடைபெற்ற இந்த ஹேக்கிங் காரணமாக அதன் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது நடைபெற்று இருப்பது ஓர் உதாரணம் தான். பொதுமக்களாகிய நாம் தான் சற்று யோசித்து செயல்பட பழகிக்கொள்ள வேண்டும். யாரும் இலவசமாக கொடுக்கிறார்கள் என்பதற்காகவோ அல்லது தாராள மனப்பான்மையோடோ செயல்படாமல் சற்று யோசித்து செயல்பட்டால் எத்தகைய ஹேக்கிங் நடைபெற்றாலும் பாதுகாப்போடு இருக்க முடியும். 

0 Reviews

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *